என் மலர்
நீங்கள் தேடியது "சர்வதேச புத்தக கண்காட்சி"
+2
- தமிழ் இலக்கியங்கள் உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.
- பெரியாரின் சிந்தனைகளை 21 மொழிகளில் மொழிபெயர்க்கும் அடிப்படை பணிகள் தொடங்கி இருக்கின்றன.
சென்னை:
சென்னையில் நடைபெற்ற சர்வதேச புத்தக கண்காட்சியின் நிறைவு விழா இன்று நடைபெற்றது. விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-
தொழில் வளர்ச்சியில் உலகளவிய கவனத்தை ஈர்த்தது தமது தமிழ்நாடு. அடுத்ததாக செஸ் ஒலிம்பியாட் போட்டி மூலமாக உலகளாவிய புகழை பெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏடிபி டென்னிஸ் போட்டியை நடத்திக் காட்டியது தமிழ்நாடு. இப்போது அறிவு உலகத்திலும் அதாவது புத்தக பதிப்பிலும் உலகளவில் தனது சிறகை விரித்திருக்கிறது நமது தமிழ்நாடு. இதை நினைக்கும்போது மிகவும் பூரிப்பாக இருக்கிறது.
கடந்த 6ம் தேதி புத்தக கண்காட்சியை நான் திறந்து வைத்தேன். 1000த்திற்கும் மேற்பட்ட புத்தக கடைகளை இங்கு அமைத்து ஒரு வாரமாக காலமாக விற்பனை செய்து வருகின்றனர். இது 46வது சென்னை புத்தக காட்சி. இந்த 46 ஆண்டுகளில் இல்லாத ஒன்று இந்த ஆண்டு தொடங்கி இருக்கிறது. அதுதான் இந்த சர்வதேச புத்தகக் காட்சி.
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள்
தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள்
தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்
மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
சொல்வதிலோர் மகிமை இல்லை
திறமான புலமையெனில் வெளி நாட்டோர்
அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.
என்ற மகாகவி பாரதியாரின் பாடல்வரி எழுதி 120 ஆண்டுகள் ஆகிவிட்டன. மகாகவியின் கனவை நிறைவேற்ற கூடிய வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியானது நடைபெற்று வருகிறது.
பதிப்புத்துறை பெரிதும் வளராத காலத்திலேயே கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையையும் ஏங்கல்ஸ் லெனின் அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட பல அறிஞர்களுடைய நூல்களையும் தமிழிலே மொழிபெயர்த்து வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள். உலக அறிவையும் விரிவையும் தமிழிலே அளிக்கவேண்டுமென்று ஆசைப்பட்ட அத்தகைய முன்னோடிகளின் கனவை நிறைவேற்றும் காட்சிதான் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சி. தமிழ்நாட்டில் தமிழ் ஆட்சி நடக்கும் போது இதுபோன்ற பன்னாட்சி புத்தகக் காட்சி நடைபெறுவது ஒன்றும் வியப்பல்ல. இலக்கிய செறிவுமிக்க நமது தமிழ் படைப்புகள் உலகமெல்லாம் கொண்டு சேர்க்கவும். உலககெங்கிலும் உள்ள அறிஞர்களின் அறிவு செறிந்த படைப்பகளை தமிழில் கொண்டு வரவும் தமிழ்நாடு அரசு திட்டமிட்டு செயல்படுத்தி வருகிறது.
அண்மையில் நடந்த சென்னை இலக்கிய திருவிழாவில் 108 புத்தகங்களை நான் வெளியிட்டேன். தினந்தோறும் திராவிடம் திட்டத்தின் கீழ் 25 நூல்களும், முத்தமிழறிஞர் மொழிபெயர்ப்பு திட்டத்தின் கீழ் 46 நூல்களும், இளந்தளிர் இலக்கிய திட்டத்தின் கீழ் 59 நூல்களும், சங்க இலக்கிய வரிசையில் பத்துபாட்டு நூல்களும் முன்பு வெளியான கலைகளஞ்சியத்தின் ஆவணப்பதிப்பும், நூற்றாண்டு காணும் ஆளுமைகளின் படைப்புகளாக 2 நூல்களும், வ.உ.சி.யின் நூல் திரட்டுகளாக 2 நூல்களும், நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல் வரிசையில் 17 நுல்களும் என 173 நூல்களை கடந்த ஒன்றரை ஆண்டு காலத்தில் அரசின் சார்பில் நாம் வெளியிட்டு இருக்கிறோம். தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் சார்பில் மருத்துவ பாடநூல்கள் தமிழிலே மொழிபெயர்க்கப்பட்டுள்ளன.
தந்தை பெரியார் ஒரு உலக தலைவர். அவரது சிந்தனைகள் உலகம் முழுவதும் பொருந்த கூடியவை. உலகம் முழுமைக்கும் பொதுவானவை. அத்தகைய பெரியாரின் சிந்தனைகளை உலக மொழிகளையும் இந்திய மொழிகளையும் உள்ளடக்கி 21 மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட இருக்கிறோம். அதற்கான அடிப்படை பணிகள் தொடங்கி இருக்கின்றன.
தமிழ் நூல்களை ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளிலும் வெளியிட்டு இருக்கிறோம். பல்வேறு மொழிகளில் உள்ள நூல்களை தமிழில் கொண்டு வர திட்டமிட்டு இருக்கிறோம். இந்த பணிகள் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக வேகமாக நடைப்பெற்று வருகின்றன. இவற்றிற்கெல்லாம் மகுடம் சூட்டக்கூடிய வகையில் இந்த பன்னாட்டு புத்தகக் காட்சியை சென்னையில் தொடங்கி இருக்கிறோம்.
உலகளாவிய அளவில் ஜெர்மனி, இங்கிலாந்து, இத்தாலி, சீனா ஆகிய நாடுகளில் நடைபெறும் இதுபோன்ற புத்தகக் காட்சியானது இப்போது சென்னையிலே தொடங்கி இருக்கிறது. இதனை ஆண்டுதோறும் நடத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறைக்கு எனது வேண்டுகோளாக நான் எடுத்துரைக்கிறேன்.
எப்போது தரமான நூல்கள் மொழிபெயர்க்கப்பட்டு வருகிறதோ அப்போது நமது மொழியும் வளம் பெறும் சொற்களும் வலிமை பெறும். புதிய இலக்கியங்கள் மட்டுமல்ல புதிய சிந்தனைகளும் சொற்களும் கிடைக்கும். காலம்தோறும் புதிய புதிய சொற்கள் உருவானால் தான் மொழியின் காலமும் நீடிக்கும்.
தமிழின் மிக சிறந்த எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான க.நா. சுப்பிரமணியன் அவர்கள் ஆங்கிலத்தின் இலக்கிய வளமே மொழி பெயர்ப்பாளர்களால் தான் ஏற்பட்டிருக்கிறது என்று கூறியிருக்கிறார். அந்த வகையில் தமிழுக்கு பிற மொழிகளில் இருந்து நூல்கள் வர வேண்டும். தமிழ் நூல்களும் பிற மொழிக்கு செல்லவேண்டும்.
இந்த நிகழ்ச்சியில் பல வெளிநாட்டு பதிப்பாளர்கள், தமிழ்நாட்டு பதிப்பாளர்கள் பங்கேற்றுள்ளனர், இவர்கள் அனைவனையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற முறையில் நான் வரவேற்கிறேன். பன்னாட்டு பதிப்பாளர்கள் இங்குள்ள தமிழ் பதிப்பாளர்களுடன் நம்பகமான வணிக தொடர்புகளை ஏற்படுத்தி கொள்ளலாம்.
நம்முடைய தமிழ் இலக்கியங்கள் உலகளாவிய இலக்கியங்களாக மாற வேண்டுமானால் உலக மொழிகளில் அவை மொழிபெயர்க்கப்பட வேண்டும். படைப்பிலக்கியத்துக்கு இணையான மதிப்பு மொழிபெயர்ப்பு இலக்கியத்துக்கும் இருக்கிறது. அதற்கு இது போன்ற பன்னாட்டு புத்தக் காட்சிகள் மிகமிகப் பயன்படும்.
தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை உலக மொழிகளிலும் இந்திய மொழிகளிலும் மொழியாக்கம் செய்ய, தமிழ்நாடு அரசால் மொழிபெயர்ப்பு மானியமாக ரூ.3 கோடி வழங்கப்படும். முதல் முறையாக நடந்த இந்த பன்னாட்டு புத்தக கண்காட்சி மூலம் தமிழ் மொழியில் இருந்து பிற இந்திய மற்றும் உலக மொழிகளுக்கும், பிற மொழிகளில் இருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கும் வகையில் பல்வேறு பதிப்பகங்களுக்கு இடையே 365 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அடுத்தடுத்த ஆண்டுகளில் கூடுதல் நாட்கள் சர்வதேச புத்தக கண்காட்சியை நடத்துவதற்கான ஏற்பாடு செய்வோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
- தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
- தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
சென்னை:
நந்தனம் ஒய்.எம்.சி. திடலில் 2023 சர்வதேச புத்தக கண்காட்சி நடைபெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக சர்வதேச புத்தக கண்காட்சி இன்று முதல் வரும் 18-ந் தேதிவரை நடக்க இருக்கிறது.
சர்வதேச புத்தக கண்காட்சியை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழ் இலக்கியங்களை உலகம் முழுவதும் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம். அதன்படி சர்வதேச புத்தக கண்காட்சி தொடங்கி இருக்கிறது. இதில் எழுத்தாளர்கள் பலரும் கலந்து கொண்டு இருக்கின்றனர்.
3 நாள் நடைபெறுவதில் பங்கேற்க முடியாத வெளிநாட்டு பதிப்பாளர்கள் கூட வீடியோ கான்பரன்சிங் மூலமாக கூட இணையலாம். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தின் 30 புத்தகங்கள் வெளிநாட்டு மொழிகளுக்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளோம்.
அதேபோல் தமிழக பதிப்பாளர்கள் வெளிநாட்டிற்கு செல்லவும் எதிர்காலத்தில் அரசு திட்டமிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
புதன்கிழமை பள்ளிக்கு விடுமுறை தொடர்பாக எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காக்கர்லா உஷா பொது நூலகத்துறை இயக்குனர் இளம்பகவத் உள்ளிட்ட அதிகாரிகள் எழுத்தாளர்கள் பதிப்பாளர்கள் கலந்து கொண்டனர்.