என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அசல் சான்றிதழ்"

    • கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில் மாணவர் சேர்க்கை கலந்தாய்வு 10- ந்தேதி தொடங்கப்பட உள்ளது.
    • சரியாக காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் பங்கேற்க வேண்டும்.

     கடலூர்:

    கடலூர் பெரியார் கலைக் கல்லூரியில், சுழற்சி ஒன்று மற்றும் இரண்டில் வழங்கப்படுகின்ற இளநிலை பட்டப் படிப்புகளுக்கான ஒற்றைச் சாளர முறையிலான 2022-23 கல்வியாண்டிற்கான முதல் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு வருகின்ற 10- ந்தேதி முதல் நடைபெற உள்ளது. இளநிலை படிப்புகளில் முதலாமாண்டில் 1329 மாணாக்கர்கள் சேர்க்கப்படவுள்ளனர். இதில் முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு 14605 விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டுள்ளன. விண்ணப்பித்த மாணவர்கள் அனைவருக்கும் சேர்க்கை கலந்தாய்வு குறித்த விவரம் மின்னஞ்சல் வாயிலாவும், மாணாக்கர்களின் அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாகவும் அனுப்பப்பட்டுள்ளது. 10 -ந்தேதி நடைபெறும் முதற்கட்ட கலந்தாய்வில் மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், தேசிய மாணவர் படை, முன்னாள் ராணுவத்தினர் வாரிசுகள் மற்றும் அந்தமான் நிகோபரைச் சேர்ந்த தமிழர்கள் போன்ற சிறப்பு பிரிவினருக்கான சேர்க்கை நடைபெற உள்ளது. அந்த வகையில் , 11 -ந்தேதி 400 லிருந்து 340 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 12- ந்தேதி 339 லிருந்து 320 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 13ந்தேதி 319 லிருந்து 300 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 16 ந்தேதி 299 லிருந்து 290 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 17- ந்தேதி 289 லிருந்து 280 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும், 18- ந்தேதி 279 லிருந்து 271 வரை மதிப்பெண் பெற்றவர்களுக்கும் கலந்தாய்வு நடைபெறும். 

    அதன் பின்னர், 20- ந்தேதி பி.ஏ. தமிழ் மற்றும் பி.ஏ. ஆங்கிலம் பாடங்களுக்கான கலந்தாய்வு நடைபெறும். மதிப்பெண் தரவரிசை அடிப்படையில் மாணாக்கர்கள் அவரவருக்கு உரிய கலந்தாய்வு நாளில் சரியாக காலை 9.30 மணிக்கு நேரம் தவறாமல் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வில் பங்கு பெறுவோர் தாங்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த விண்ணப்பத்தின் நகல், 10-ம் வகுப்பு, 11-ம் வகுப்பு மற்றும் 12-ம் வகுப்பு ஆகியவற்றின் அசல் மதிப்பெண் பட்டியல் மற்றும் 2 நகல்கள், பள்ளி மாற்றுச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், சாதிச் சான்றிதழ் அசல் மற்றும் 2 நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள், வங்கிக் கணக்குப் புத்தக முதல் பக்க நகல், ஆதார் அடையாள அட்டை 2 நகல்கள் மற்றும் உரிய சேர்க்கைக் கட்டணம் ஆகியவற்றை தவறாமல் கட்டாயம் கொண்டு வர வேண்டும்.சிறப்புப்பிரிவில் சேர்க்கை கோரும் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் படைவீரர் வாரிசுகள், விளையாட்டு வீரர்கள் (மாவட்ட / மண்டல / மாநில அளவில் பங்குபெற்றோர்) அதற்குரிய சான்றிதழ்களின் அசல் மற்றும் 2 நகல் கொண்டுவரவேண்டும். கணிதம், இயற்பியல், வேதியியல் (பொது), கணினி, கணினிப் பயன்பாட்டியல் மற்றும் புள்ளியியல் சேரவிரும்பும் மாணவர்கள் பிளஸ் 2-வில் கட்டாயம் கணிதம் பயின்றிருக்கவேண்டும். மேலும், தொழில் முறைக் கல்வி பயின்றவர்கள் வணிகவியல் மற்றும் ஏனைய கலைப் பாடப் பிரிவுகளில் ஒதுக்கப்பட்டுள்ள இடங்களில் சேர இயலும்.  இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

    ×