என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "உபி முதல் மந்திரி"

    கலவரத்தை தூண்டும் வகையில் பேசிய வழக்கில் உத்தரபிரதேச முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் மீது அரசு விசாரணை நடத்தாதது ஏன்? என்று கேள்வி எழுப்பிய சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள் 4 வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டனர்.
    கோரக்பூர்:

    உத்தரபிரதேச மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் நீண்ட காலமாக கோரக்பூர் தொகுதி எம்.பி.யாக இருந்து வந்தார். 2007-ம் ஆண்டு அவர் எம்.பி.யாக இருந்த போது, கலவரத்தை தூண்டும் வகையில் பேசியதாக கூறப்படுகிறது. இதனால் அப்போது முகரம் பண்டிகை ஊர்வலத்தின் போது பெரும் கலவரம் ஏற்பட்டது. ஒருவர் கொல்லப்பட்டார். ஏராளமானோர் காயம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து யோகி ஆதித்யநாத் கைது செய்யப்பட்டு பின்னர் 2 நாளில் விடுதலை செய்யப்பட்டார். இது சம்பந்தமாக தனியாக வழக்கும் உள்ளது.

    இந்த நிலையில் அவர் கலவரத்தை தூண்டும் வகையில் பேசியது தொடர்பாக தனியாக விசாரணை நடத்த வேண்டும் என்று பர்வேஸ் பர்வாஸ் என்பவர் கோரக்பூர் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.

    எனவே, கோர்ட்டு விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் முதற்கட்டமாக சி.ஐ.டி. போலீசார் விசாரித்தனர். அதில், யோகி ஆதித்யநாத்துக்கு எதிராக பல்வேறு ஆதாரங்களை காட்டி அவர் மீது விசாரணை நடத்தலாம் என்று சி.ஐ.டி. போலீசார் சிபாரிசு செய்திருந்தனர்.

    அப்போது அகிலேஷ் யாதவ் ஆட்சியில் இருந்தார். ஆனால், அவர் மேல் விசாரணைக்கு உத்தரவிடவில்லை. அதே நேரத்தில் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்யும்படி யோகி ஆதித்யநாத் சார்பில் செ‌ஷன்ஸ் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இதை விசாரித்த நீதிபதி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டு உத்தரவை ரத்து செய்தார். அதை எதிர்த்து பர்வேஸ் பர்வாஸ் அலகாபாத் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த கோர்ட்டும் செ‌ஷன்ஸ் கோர்ட்டு உத்தரவை ஏற்று கொண்டது.


    இதனால் பர்வேஸ் பர்வாஸ் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான 3 பேர் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

    அவர்கள் யோகி ஆதித்யநாத் மீது உத்தரபிரதேச மாநில அரசு ஏன் விசாரணை நடத்தவில்லை? என்று விளக்கம் அளிக்க வேண்டும் என மாநில உள்துறை கோரக்பூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட சூப்பிரண்டு ஆகியோர் விளக்கம் அளிக்க வேண்டும் என்று நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இதற்கு 4 வாரத்தில் பதில் அளிக்கும்படியும் கெடு விதிக்கப்பட்டுள்ளது.
    ×