search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sivagangai Court"

    • ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.
    • இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    சிவகங்கை:

    சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி அருகே உள்ள கச்சநத்தம்-ஆவாரங்காடு கிராம பகுதியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் கோவில் திருவிழா நடந்தது. அப்போது முதல் மரியாதை அளிப்பது தொடர்பாக இரு சமுதாயத்தினருக்கும் மோதல் ஏற்பட்டது.

    இது தொடர்பாக அப்போது பழையனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இரவு 10 மணி அளவில் கச்சநத்தம் கிராமத்திற்குள் புகுந்து பயங்கர ஆயுதங்களுடன் வீடுகளை சூறையாடினார்கள்.

    இதை தடுக்க வந்த அந்த கிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் (வயது65), சண்முகநாதன் (31), சந்திரசேகர் (34) ஆகியோர் வெட்டி படுகொலை செய்யப்பட்டனர்.

    இந்த கொலை தொடர்பாக ஆவாரங்காடு கிராமத்தை சேர்ந்த சுமன், அருண்குமார், சந்திரகுமார், அக்னிராஜ், ராஜேஷ் உள்ளிட்ட 33 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் 3 பேர் சிறுவர்கள் ஆவார்கள். வழக்கு விசாரணையின்போது 2 பேர் இறந்து விட்டனர். ஒருவர் தலைமறைவாகி விட்டார். இதனால் மற்ற 27 பேர் மீது சிவகங்கை ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள வன்கொடுமை சிறப்பு கோர்ட்டில் வழக்கு நடந்து வந்தது.

    கடந்த 4 ஆண்டுகளாக வழக்கு விசாரணை நடந்தது. இருதரப்பினரிடமும் விசாரணை முடிந்த நிலையில் கடந்த 1-ந்தேதி நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பளித்தார். அப்போது 3 கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 27 பேரும் குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டனர். தண்டனை விவரம் நேற்று முன்தினம் (3-ந்தேதி) அறிவிக்கப்படும் என நீதிபதி தெரிவித்தார்.

    அன்றைய நாள் குற்றவாளிகள் 27 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களிடம் நீதிபதி காணொலி காட்சி மூலம் விசாரணை நடத்தினார். கொலை செய்யப்பட்ட 3 பேரின் உறவினர்களும் நீதிபதி தீர்ப்பு குறித்து கருத்துக்களை கேட்டார். அதனை தொடர்ந்து இன்று (5-ந்தேதி) தீர்ப்பின் முழு விவரம் அறிவிக்கப்படும் என நீதிபதி முத்துக்குமரன் அறிவித்தார்.

    இதையொட்டி இன்று சிவகங்கை வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. வழக்கின் தீர்ப்பின் விவரம் அறிய கச்சநத்தம் கிராமத்தை சேர்ந்த ஏராளமானோர் திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தினர். தொடர்ந்து 11.45 மணி அளவில் நீதிபதி முத்துக்குமரன் தீர்ப்பின் விவரங்களை வாசித்தார்.

    அதில், 2018-ம் ஆண்டு கச்சநத்தம் கோவில் திருவிழா முன்விரோதத்தில் ஆறுமுகம், சண்முகநாதன், சந்திரசேகர் ஆகிய 3 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ள 27 பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்படுவதாக தெரிவித்தார்.

    ×