search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem engineer suicide"

    கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த வாலிபர் திருமணமான 3-வது நாளில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
    ஓமலூர்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியில் உள்ள விவசாய கிணற்றில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் இன்று காலை பிணமாக கிடந்தார்.

    இதை பார்த்த அந்த பகுதியினர் ஓமலூர் தீயணைப்பு நிலையத்திற்கும், சூரமங்கலம் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றில் கிடந்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

    மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்திய போது கிணற்றில் பிணமாக மிதந்தது மாயமான சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோட்டகவுண்டம்பட்டியைச் சேர்ந்த சிவாஜி என்பவரின் மூத்த மகன் செல்லதுரை (வயது26) என்பது தெரியவந்தது.

    மேலும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது வெளியான சோக தகவல்கள் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது குறித்த விவரம் வருமாறு:-

    பி.இ. என்ஜினீயரிங் படித்துள்ள செல்லதுரை சேலத்தில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்தார். அதே நிறுவனத்தில் சேலம் பள்ளப்பட்டியை சேர்ந்த தீபா என்ற பெண்ணும் பணிபுரிந்தார்.

    அப்போது இருவரும் அடிக்கடி சந்தித்து பேசினர். இந்த சந்திப்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் தனிமையில் சந்தித்தும், செல்போன் மூலம் பேசியும் காதலை வளர்த்து வந்தனர்.

    கடந்த 23-ந் தேதி இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். எதிர்கால கணவுகளுடன் கோட்டகவுண்டம்பட்டி பகுதியிலுள்ள தனது வீட்டிற்கு தீபாவுடன், செல்லதுரை சென்றார்.

    செல்லத்துரையின் வீட்டில் ஒரு நாள் தங்கிய அவர் அங்கு கழிவறை இல்லாததை அறிந்தார். உடனே ஓட்டலில் அறை எடுத்து தங்கலாம் என தீபா செல்லதுரையிடம் கூறினார். ஆனால் அதற்கு அவர் மறுத்துவிட்டார். கழிவறை இல்லாத வீட்டில் என்னால் வாழ முடியாது எனக் கூறிய தீபா சேலத்திற்கு புறப்பட்டார்.

    அவரை வழி மறித்த செல்லத்துரை விரைவில் கழிவறை கட்டுவதாக உறுதி அளித்தார். அதை பொருட்படுத்தாத தீபா காதல் கணவரைப் பிரிந்து தனது தாய்வீடான சேலத்துக்கு வந்து விட்டார்.

    மனைவியுடன் செல்லத்துரை

    அப்போதும் தான் அழைத்தால் வருவார் என்று நம்பிக்கையில் செல்லதுரை சேலம் வந்தார். தீபாவின் வீட்டிற்கு சென்ற அவர் தனது காதல் மனைவியை வீட்டிற்கு வருமாறு அழைத்தார். ஆனால் தீபா வர மறுத்தார். அப்போதும் செல்லதுரை விரைவில் கழிவறை கட்டுவதாக கூறி உள்ளார். அதனை நம்பாத தீபா வர முடியாது என திட்டவட்டமாக கூறினார்.

    இதனால் மேலும் மனமுடைந்த செல்லதுரை சோகத்துடன் தனியாக வீடு திரும்பினார். காதல் மனைவி வர மறுத்ததால் வாழ்க்கையில் வெறுப்படைந்த அவர் வாழ்வதை விட சாவதே மேல் என்று முடிவு செய்தார்.

    அதன்படி திருமணமான 3-வது நாளிலேயே கோட்டகவுண்டம்பட்டி அருகேயுள்ள விவசாய கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது.

    மேலும் செல்லதுரையின் உறவினர்கள் தீபாவிடம் உனக்கு எந்த ஊர் என்று கேட்ட போது சேலம், திருப்பூர் என்று அவர் மாறி மாறி கூறியுள்ளார். அதனால் பள்ளி சான்றிதழ்களை எடுத்து வருமாறும், பதிவு திருமணம் செய்து கொள்ளலாம் என்றும் உறவினர்கள் கூறி உள்ளனர்.

    அப்போது தனக்கு தாய், தந்தை இல்லை என்றும், மாமா வீட்டில் தங்கி இருந்ததாகவும், அவரிடம் சொல்லி விட்டதாகவும் கூறி உள்ளார். 23-ந் தேதி திருமணம் நடந்த நிலையில் 24-ந் தேதியே வீட்டில் இருந்து கழிவறை இல்லை என்று கூறி வருத்தப்பட்ட தீபா வேலைக்கு செல்வதாக கூறி விட்டு சேலத்திற்கு வந்ததாகவும் கூறப்படுகிறது.

    மேலும் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், செல்லதுரையின் அப்பா மற்றும் உறவினர்கள் திட்டியதாக கூறப்படுகிறது.

    கழிவறை இல்லாததால் காதல் திருமணம் செய்த மனைவி பிரிந்து சென்றதால் மனம் உடைந்த வாலிபர் திருமணமான 3-வது நாளில் கிணற்றில் குதித்து தற்கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    இது குறித்து சூரமங்கலம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தினர். அப்போது செல்லதுரை வீட்டில், அவர் எழுதிய ஒரு கடிதம் சிக்கியது. இந்த கடிதத்தில் எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. தீபாவை தொந்தரவு செய்யாதீர்கள் என்பது உள்பட பல்வேறு உருக்கமான தகவல்கள் இடம் பெற்றுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரண நடத்தி வருகிறார்கள். தீபா தற்போது எங்கு உள்ளார் என்பது மர்மமாக உள்ளது.

    இதற்கிடையே செல்ல துரையின் உறவினர்கள் கூறுகையில், செல்லதுரையின் சாவுக்கு காரணமான தீபாவை கைது செய்ய வேண்டும், அதுவரை செல்லதுரையின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். பின்னர் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடலை வாங்க சம்மதித்தனர்.
    ×