search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Salem chennai train"

    சேலம்-சென்னை ரெயிலில் ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் வட மாநில கும்பலை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் மீண்டும் மத்திய பிரதேசத்திற்கு செல்ல உள்ளனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    சேலம்:

    சேலம்-சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 8-ந்தேதி ரூ.6 கோடி பணம் கொள்ளையடிக்கப்பட்டது. ரெயில் கூரையை அறுத்து ஓடும் ரெயிலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக விசாரணை நடத்திய சி.பி.சி.ஐ.டி. டி.எஸ்.பி. கிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் கொள்ளையில் ஈடுபட்டது மத்திய பிரதேசத்தை சேர்ந்த பார்தி இன கொள்ளையர்கள் என்பதை கண்டு பிடித்தனர்.

    இதையடுத்து அவர்களை கைது செய்யும் நோக்கில் தமிழகத்தில் இருந்து 50 போலீசாருடன் கடந்த நவம்பர் மாதம் மத்திய பிரதேசம் சென்ற சி.பி.சி.ஐ.டி. போலீசார் கொள்ளை கும்பல் தலைவன் மோஹர்சிங் (35), தினேஷ் (38), ரோஹன் (32) உள்பட 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    மேலும் இதில் தொடர்புடைய 8 பேரை பிடிக்க கடந்த நவம்பர் மாதம் 20-ந் தேதி தனிப்படையினர் மத்திய பிரதேச மாநிலம் குணா மாவட்டம் ருத்தியாயி போலீஸ் ஸ்டேசன் எல்லைக்குட்பட்ட கிராமங்களில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனர்.



    டிசம்பர் மாதம் 5-ந் தேதி தமிழக போலீசார் என கருதி மத்திய பிரதேச போலீசார் 2 பேரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் அம்மாநில சட்டசபை தேர்தல் பிரசாரம் அப்போது நடந்ததால் தமிழக போலீசாருக்கு மத்திய பிரதேச போலீசார் உதவி செய்யவில்லை.

    இதனால் அதே மாதத்தில் 12-ந் தேதி தமிழக போலீசார் சென்னை திரும்பினர். மேலும் கொள்ளையர்கள் எஸ்.எல்.ஆர். உள்பட பல நவீன ரக துப்பாக்கிகள் வைத்திருப்பதை சி.பி.சி.ஐ.டி. போலீசார் உறுதி செய்தனர்.

    இதையடுத்து மத்திய பிரதேச கொள்ளையர்களை கைது செய்ய ஆயுதம் தாங்கிய போலீசாரின் உதவி தேவைப்படுவது குறித்து தமிழக டி.ஜி.பி. ராஜேந்திரனிடம் சி.பி.சி.ஐ.டி. சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. அதனை ஏற்ற டி.ஜி.பி. ராஜேந்திரன் சி.பி.சி.ஐ.டி. போலீசாருடன் 50-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையையும் அனுப்ப முடிவு செய்தார்.

    இதனால் கமாண்டோ படை மற்றும் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் சி.பி.சி.ஐ.டி. போலீசார் வருகிற 7-ந் தேதி முதல் மத்திய பிரதேசத்தில் தேடுதல் வேட்டையில் ஈடுபட உள்ளனர். தமிழக போலீசாருக்கு, மத்திய பிரதேச போலீசார் உதவி செய்யாததால் தற்போது வரை கொள்ளையர்கள் அனைவரையும் கைது செய்ய முடியவில்லை.

    தற்போது தமிழகத்தில் இருந்து 50-க்கும் மேற்பட்ட கமாண்டோ படையுடன் சி.பி.சி.ஐ.டி. போலீசாரும் களம் இறங்குவதால் இந்த கொள்ளை வழக்கில் மீதம் உள்ள கொள்ளையர்களையும் கட்டாயம் கைது செய்வோம் என்று போலீசார் நம்பிக்கை தெரிவித்தனர். #ChennaiTrainRobbery #RBIMoney
    ×