search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Robbery of gold"

    • தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.
    • இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை.

    சேலம்:

    சேலம் சூரமங்கலம் ரெட்டிபட்டி பகுதியைச் சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 54).

    என்ஜினீயர்

    இவர் குடும்பத்துடன் பக்ரைன் நாட்டில் தங்கி, என்ஜினீயராக வேலை பார்த்து வருகிறார். ரெட்டிபட்டியில் உள்ள கோவிந்தராஜன் வீட்டை, அவரது மாமனாரான ஜாகீர்காமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த பழனிச்சாமி பராமரித்து வருகிறார்.

    இதையடுத்து தினமும் இரவில் பழனிச்சாமி இந்த வீட்டில் தங்குவது வழக்கம். மேலும் இந்த வீட்டில் சி.சி.டி.வி கேமிராக்கள் பொருத்தப்பட்டு உள்ளது.

    இந்த வீட்டை பூட்டிவிட்டு செல்லும்போது, அதன் பதிவுகளை பழனிச்சாமி தனது வீட்டில் இருந்தபடியே செல்போனில் பார்த்துக் கொள்வார்.

    வெள்ளிப்பொருட்கள், நகை திருட்டு

    இந்நிலையில், நேற்று இரவு காமநாயக்கன்பட்டியில் கோவில் திருவிழா நடைபெற்றதால் கோவிந்தராஜின் வீட்டிற்கு பழனிச்சாமி செல்லவில்லை. இதையடுத்து இன்று அதிகாலை 4 மணி அளவில், பழனிச்சாமி செல்போனில் பார்த்தபோது, கோவிந்தராஜின் வீடு திறந்து இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக உறவினர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

    அங்கு வீட்டின் கதவு திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது, பீரோ உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறி கிடந்தன. அதிலிருந்த இருந்த 4 தங்க காசுகள், வெள்ளிப் பொருட்கள், ரூ.50 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. வீட்டிலிருந்த சொகுசு காரும் திருடுபோய் இருந்தது

    இது குறித்து சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதை தொடர்ந்து சேலம் மாநகர போலீஸ்(வடக்கு) துணை கமிஷனர் மாடசாமி, சூரமங்கலம் போலீஸ் உதவி கமிஷனர் நாகராஜன், இன்ஸ்பெக்டர்கள் சிவகுமார், கந்தவேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.

    கொள்ளை சம்பவம் நடைபெற்ற அந்த வீடு மற்றும் தெருவில் உள்ள சி.சி.டி.வி கேமராக்களின் பதிவுகளை போலீசார் ஆய்வு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

    சூப்பர் மார்க்கெட், டெய்லர் கடையில் கொள்ளை

    சேலம் வீராணம் வன்னியர் தெருவை சேர்ந்தவர் ரத்தினவேல்(48). இவர் மன்னார் பாளையம் அருகே உள்ள வாய்க்கால் பட்டறையில் சூப்பர் மார்க்கெட் வைத்து நடத்தி வருகிறார். இரவு ரத்தினவேல் சூப்பர் மார்க்கெட்டை பூட்டி விட்டு வீட்டுக்கு சென்றார். காலையில் வந்து பார்த்தபோது கடையின் ஷட்டர் உடைக்கப்பட்டு திறந்திருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது கடையில் இருந்த கம்ப்யூட்டர் மானிட்டர், ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள சோப்பு மற்றும் பேஸ்ட், கல்லாவில் இருந்த ரூ.800, ஆகியவற்றை மர்ம நபர்கள் கொள்ளை அடித்துச் சென்றது தெரியவந்தது.

    இது குறித்து ரத்தினவேல் உடனடியாக அம்மாபேட்டை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமராக்கள் பதிவுகளை ஆய்வு செய்து வருகிறார்கள்.

    இதே போல் சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த நூர் முகமது என்பவர் அழகாபுரம் காட்டூர் மெயின் ரோடு பாறை வட்டம் அருகே உள்ள சிவாயநகர் பகுதியில் தையல் கடை வைத்து நடத்தி வருகிறார்.இவர் இரவு கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றவர், காலை வந்து பார்த்தபோது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கடை திறந்து இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    உள்ளே சென்று பார்த்தபோது வாடிக்கையாளர்களின் துணிகள் அனைத்தும் சிதறி கிடந்தன. கல்லாவில் ஏதும் பணம் வைக்காததால் திருட வந்தவர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். இருப்பினும் இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அழகாபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×