search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rain In Kanyakumari"

    குமரி மாவட்டத்தில் மழையின்போது சூறாவளி காற்று வீசியதால் மரக்கிளைகள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. #Kanyakumarirain
    நாகர்கோவில்:

    குமரி மாவட்டத்தில் மே மாதம் தென்மேற்கு பருவ மழை பெய்யத் தொடங்கியது. மாவட்டம் முழுவதும் பெய்த மழை காரணமாக அணைகள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் பெருகியது.

    இதன் பிறகு கடந்த 10 நாட்களாக மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் நேற்று பகல் குமரி மாவட்டத்தில் மீண்டும் மழை பெய்தது. குழித்துறை, மார்த்தாண்டம், குளச்சல் உள்பட மாவட்டத்தின் பல பகுதிகளில் மழை பெய்தது. அதன்பிறகு இரவு மாவட்டம் முழுவதும் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை இடி, மின்னலுடன் விடிய, விடிய கொட்டித் தீர்த்தது. பலத்த சூறாவளி காற்றும் வீசியது.

    கோழிப்போர்விளை, முள்ளங்கினா விளை, ஆனைக்கிடங்கு போன்ற பகுதிகளில் அதிக மழை பெய்து உள்ளது. இந்த பகுதி களில் 4 மணி நேரத்திற்கு மேல் மழை கொட்டித் தீர்த்தது. மாவட்டத்திலேயே அதிகபட்சமாக தக்கலையில் 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    நாகர்கோவில், ஆரல்வாய் மொழி, கொட்டாரம், திற்பரப்பு, குலசேகரம், மார்த்தாண்டம் உள்பட மாவட்டம் முழுவதும் விடிய, விடிய மழை பெய்தது. மழையின் போது சூறாவளி காற்று வீசியதால் பல இடங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. மரக்கிளைகள் மின் கம்பங்களில் விழுந்ததால் மின்சாரமும் துண்டிக்கப்பட்டது. மலையோர கிராமங்களான கீரிப்பாறை, வெள்ளம்பி, காளிகேசம் ஆகிய பகுதிகளில் மரம் விழுந்ததால் அந்த கிராமங்கள் இருளில் மூழ்கின. இதனால் மக்கள் கடும் அவதிக்கு ஆளானார்கள்.

    நாகர்கோவிலிலும் சில இடங்களில் மின்தடை ஏற்பட்டது. நாகர்கோவிலில் இன்று காலையும் மழை நீடித்ததால் பள்ளி, கல்லூரிக்கு சென்ற மாணவ, மாணவிகள் குடை பிடித்தபடி சென்றனர். இந்த மழை காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

    குளச்சல் பகுதியிலும் இடி, மின்னலுடன் மழை பெய்தது. இதனால் மின்னல் தாக்கி குளச்சலில் உள்ள அண்ணா சிலை சேதம் அடைந்தது. மேலும் அருமனை, மிடாலம் பகுதிகளில் 2 வீடுகளும் மழை காரணமாக சேதம் அடைந்தது.

    கோதையாற்றில் மழை காரணமாக வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் திற்பரப்பு அருவியில் வெள்ளம் கொட்டுகிறது. இந்த மழை காரணமாக அணைகளுக்கும் நீர் வரத்து தொடர்ந்து அதிகளவில் வந்த வண்ணம் உள்ளது. இன்று காலை நிலவரப்படி பெருஞ்சாணி அணையில் 73.55 அடி தண்ணீர் உள்ளது. அணைக்கு 314 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 250 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பேச்சிப்பாறை அணையில் 17.80 அடி தண்ணீர் உள்ளது. 496 கனஅடி தண்ணீர் வருகிறது. 656 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. மாம்பழத் துறையாறு அணை முழு கொள்ளளவான 54.12 அடியை எட்டி உள்ளது.

    குமரி மாவட்டத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:-

    தக்கலை-153, கோழிப் போர்விளை-150, முள்ளங்கினாவிளை-138, இரணியல்-71, பாலமோர்- 66.8, புத்தன் அணை-54.2, பேச்சிப்பாறை-34.6, பெருஞ்சாணி-53.6, சிற்றாறு 1-52, சிற்றாறு 2-67, மாம்பழத்துறை யாறு-115, நாகர்கோவில்-78, பூதப்பாண்டி-24.2, சுருளோடு-60, கன்னிமார்-8.6, ஆரல்வாய்மொழி-4.2, மயிலாடி-45.2, கொட்டாரம்-52.4, ஆனைக்கிடங்கு-122, குளச்சல்-44.6, குருந்தன்கோடு-90.4, அடையாமடை-78, திற்பரப்பு-67.8.  #Kanyakumarirain

    பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று காலை மீண்டும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது. #PerunchaniDam
    நாகர்கோவில்:

    தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதையடுத்து குமரி மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக மழை பெய்து வருகிறது.

    பூதப்பாண்டி, சுருளோடு, நாகர்கோவில், கோழிப்போர் விளை மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியிலும் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் நேற்றிரவும் மழை பெய்தது. மாம்பழத்துறையாறில் அதிகபட்சமாக 20 மி.மீ. மழை பதிவாகி உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால் அணைகளின் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் நேற்று 1 அடி உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் இன்று காலை 17.50 அடியாக இருந்தது. அணைக்கு 712 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

    77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணை நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி வருவதால் அணையை பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறார்கள். அணைக்கு வரக்கூடிய நீரின் அளவுக்கேற்ப தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    இன்று காலை அணையின் நீர்மட்டம் 75.55 அடி யாக இருந்தது. அணைக்கு 536 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 101 கனஅடி தண்ணீர் உபரி நீராக வெளியேற்றப்படுகிறது.

    ஏற்கனவே குழித்துறை ஆற்றின் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு இருந்தது. தற்போது பெருஞ்சாணி அணையில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவதால் இன்று காலை மீண்டும் கரையோர பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

    18 அடி கொள்ளளவு கொண்ட சிற்றாறு அணைகள் 15 அடியை எட்டுகிறது. மாம்பழத்துறையாறு முழு கொள்ளளவை எட்டி நிரம்பி வழிகிறது.

    மாவட்டம் முழுவதும் நேற்றும் சூறைக்காற்று வீசியது. ராஜாக்கமங்கலம் பகுதியில் ராட்சத மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் அந்த பகுதியில் நின்ற மின்கம்பங்களும் சேதமடைந்து மின்சாரமும் தடைபட்டது. மின்வாரிய அதிகாரிகள் மரத்தின் கிளைகளை வெட்டி மின் இணைப்பை சரி செய்தனர்.

    சூறைக்காற்றிற்கு மாவட்டம் முழுவதும் ஆயிரக்கணக்கான வாழைகளும் முறிந்து விழுந்துள்ளது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    மாவட்டம் முழுவதும் பெய்த மழை அளவு மி.மீ. வருமாறு:-

    பேச்சிப்பாறை-10.2, பெருஞ்சாணி-9.8, சிற்றாறு-1-11.6, சிற்றாறு-2-9, மாம்பழத்துறையாறு-20, பூதப்பாண்டி-2.6, சுருளோடு-11.4, பாலமோர்-8.4, கோழிப்போர் விளை-7, புத்தன்அணை-10.2, திற்பரப்பு-8. #PerunchaniDam

    ×