search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "railway signal"

    • ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
    • ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர்.

    ஈரோடு:

    திருச்சியில் இருந்து ஈரோடு வழியாக கேரளா மாநிலம் பாலக்காடு வரை பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரெயில் வழக்கம்போல் திருச்சியில் இருந்து புறப்பட்டு நேற்று மாலை ஈரோடு சோலார் அருகே உள்ள முத்துக்கவுண்டன்பாளையம் வழியாக ரெயில்வே தண்டவாளத்தில் வந்து கொண்டிருந்தது.

    அப்போது அப்பகுதியில் இருந்த சிக்னல் கோளாறு ஏற்பட்டிருந்ததால் ரெயிலின் டிரைவர் ஏதோ அசம்பாவிதம் ஏற்பட்டு விடும் என கருதி ரெயிலை அதே இடத்தில் நிறுத்தினார். தொடா்ந்து எந்தவித சிக்னலும் இல்லாததால் ரெயில் புறப்படுவதற்கு தாமதம் ஆனது.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். இதில் முத்துக்கவுண்டன்பாளையம் ஊராட்சி நிர்வாகம் ரெயில் பாதை அருகே குப்பைகள் அப்புறப்படுத்தும் போது, ரெயில்வே சிக்னல் ஒயர் தீப்பிடித்து எரிந்து கருகியதால் சிக்னல் கோளாறு ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடா்ந்து ரெயில்வே தொழில்நுட்ப ஊழியர்கள் சிக்னல் ஒயரை சரி செய்தனர். முன்னதாக எவ்வித பிரச்சனையும் இல்லை என்பதை உறுதி செய்தபின் திருச்சி-பாலக்காடு ரெயில் சுமார் ஒரு மணி நேரம் காலதாமதமாக சென்றது. இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சிக்னல் கோளாறுக்கு காரணமான முத்துக்கவுண்டன் பாளையம் ஊராட்சி நிர்வாகத்திற்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதித்தனர்.

    இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.
    • நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் ரெயில் நிலையத்தில் இன்று காலை ரெயிலுக்காக பயணிகள் ஏராளமானோர் காத்திருந்தனர்.

    அப்போது மது போதையில் தள்ளாடியபடி வாலிபர் ஒருவர் பிளாட்பாரத்தில் நடந்து சென்றார்.

    ரெயில் நிலையத்தில் ஓரத்தில் உள்ள சிக்னல் கம்பம் அருகே சென்று கம்பத்தை மேலும் கீழுமாக பார்த்தார்.

    அங்கிருந்த கற்களை எடுத்து சிக்னல் கம்பத்தில் உள்ள சிவப்பு மற்றும் பச்சை நிற விளக்குகள் மீது எறிந்தார்.

    இதில் விளக்குகள் சேதம் அடைந்தன. மேலும் மின்கம்பத்திலும் கற்கள் பட்டு சத்தம் கேட்டது.

    இதனை கண்ட போலீசார் விரைந்து ஓடி சென்று வாலிபரை மடக்கி பிடித்தனர்.

    விசாரணையில் அவர் திருப்பத்தூர் பிரான் லைனை சேர்ந்த கோகுல் (வயது 30) என்பது தெரியவந்தது. அப்போது கோகுல்ராஜ் கூறுகையில்:-

    திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த இளம் பெண் ஒருவரை காதலித்து வருகிறேன். காதலி என்னிடம் பேசவில்லை. எனக்கு காதல் தோல்வி ஏற்பட்டு விட்டது.

    ஆத்திரமடைந்த நான் ரெயில் சிக்னல் கம்பத்தின் மீது கற்கள் வீசினேன் என்றார். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வாலிபர் சிக்னலை உடைத்ததை கவனிக்காமல் இருந்திருந்தால் பெரும் அசம்பாவிதம் ஏற்பட்டிருக்கும்.

    நாட்டையே உலுக்கிய ஒடிசா ரெயில் விபத்து நடந்த நேரத்தில் வாலிபர் சிக்னலை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ×