search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rafael Case"

    சி.பி.ஐ. இயக்குனர் நீக்கப்பட்ட விவகாரத்தில் பிரதமர் மோடி மீது ராகுல் காந்தி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார். மேலும் எதிர்க்கட்சிகளும் கடும் கண்டனம் தெரிவித்து உள்ளன. #RahulGandhi #Modi #RafaelCase
    புதுடெல்லி:

    மத்திய புலனாய்வு அமைப்பின் (சி.பி.ஐ.) இயக்குனராக இருந்த அலோக் வர்மா மற்றும் சிறப்பு இயக்குனராக இருந்த ராகேஷ் அஸ்தானா ஆகியோர் இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் ஏற்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து இருவரையும் அந்தந்த பொறுப்புகளில் இருந்து விடுவித்த மத்திய அரசு, அவர்களை கட்டாய விடுப்பில் அனுப்பியுள்ளது. மேலும் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது.

    சி.பி.ஐ. வரலாற்றில் முதல் முறையாக நடந்துள்ள இந்த அதிரடி நடவடிக்கை அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலை கிளப்பி இருக்கிறது. இது தொடர்பாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றம் சாட்டியுள்ளன. குறிப்பாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக சாடியுள்ளார்.



    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் கூறும்போது, ‘சி.பி.ஐ. இயக்குனர் அலோக் வர்மா, ரபேல் ஒப்பந்த ஊழல் தொடர்பான ஆவணங்களை சேகரித்து வந்தார். ஆனால் அவர் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டு உள்ளார். இதில் பிரதமர் மோடியின் செய்தி மிகவும் தெளிவானது. அதாவது ரபேல் பிரச்சினைக்கு அருகில் யார் வந்தாலும் நீக்கப்படுவார், துடைத்து எறியப்படுவார். நாடும் அரசியல் சட்டமும் மிகுந்த ஆபத்தில் உள்ளன’ என்று கூறிருந்தார்.

    முன்னதாக காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவும் இதே கருத்தை தெரிவித்து இருந்தார்.

    மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி தனது டுவிட்டர் தளத்தில், ‘சி.பி.ஐ. (மத்திய புலனாய்வு அமைப்பு) இனிமேல் பி.பி.ஐ. (பா.ஜனதா புலனாய்வு அமைப்பு) என்று அழைக்கப்படும். மிகவும் துரதிர்ஷ்டம்’ என்று கிண்டலாக குறிப்பிட்டு உள்ளார்.

    அலோக் வர்மாவின் நீக்கத்தை சட்டவிரோதம் எனக்கூறியுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்த பதற்றமான நடவடிக்கை மூலம் மோடி அரசு எதை மறைக்க முயற்சிக்கிறது? என கேள்வி எழுப்பினார். சி.பி.ஐ. அமைப்பு ஒரு கூண்டுக்கிளி அல்ல என்பதை உறுதி செய்வதற்காகவே அதன் இயக்குனருக்கு 2 ஆண்டு பணிப்பாதுகாப்பை சுப்ரீம் கோர்ட்டு வழங்கி இருக்கிறது என்றும் அவர் கூறினார்.

    இதே கருத்தை ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவாலும் எதிரொலித்துள்ளார். லோக்பால் சட்டத்தின் கீழ் நியமிக்கப்பட்ட ஒரு விசாரணை நிறுவனத்தின் தலைவரை எந்த சட்டத்தின் அடிப்படையில் மத்திய அரசு நீக்கி இருக்கிறது? எனவும் அவர் கேள்வி எழுப்பி இருந்தார்.
    ×