search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punnainallur"

    • கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது.
    • ஆவணி மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா போல் கோவில் காட்சியளிக்கும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சையை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.

    இந்த கோவிலின் கருவறையில் உள்ள மாரியம்மன் புற்று மண்ணால் உருவானது. மூலவர் புற்று மண்ணால் உருவானதால் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை. 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை தைலக்காப்பு சாற்றப்படுகிறது.

    இந்த கோவிலில் செவ்வாய், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். மற்ற அம்மன் கோவில்களை விட புன்னைநல்லூர் மாரியம்மன் கோவிலில் ஆவணி ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    குறிப்பாக ஆவணி மாதம் முழுவதும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் திருவிழா போல் கோவில் காட்சியளிக்கும். ஆவணி மாத மற்ற கிழமைகளிலும் கூட்டம் அதிகரித்து காணப்படும்.

    மாரியம்மனை வேண்டி தரிசனம் செய்யும் பக்தர்கள் பலர் ஆவணி மாதத்தில் விரதம் இருப்பது வழக்கம். ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏற்கனவே விரதத்தை தொடங்கி விட்டனர்.

    இன்று ஆவணி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் அதிகாலையில் இருந்தே பக்தர்கள் மாரியம்மன் கோவிலில் குவிய தொடங்கினர். சுற்றுவட்டாரத்தை சேர்ந்த பலர் நடந்தே புன்னைநல்லூருக்கு வந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்களின கூட்டம் கட்டுகடங்காத அளவில் இருந்தது .

    இன்று மாரியம்மனுக்கு ரத்தின ஆபரண அலங்காரம் செய்யப்பட்டு இருந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து மாரியம்மனை தரிசனம் செய்தனர்.

    ஆவணி மாதத்தில் சுபமுகூர்த்த தினம் அதிகம் இருப்பதால் சுபநிகழ்ச்சி வைத்திருப்பவர்கள் அழைப்பிதழ்களை அம்மன் முன்பு வைத்து வணங்கி எடுத்துச் சென்றனர்.

    வேண்டுதல்கள் நிறைவேற பலர் முடி காணிக்கை, மாவிளக்கு எடுத்தல் உள்ளிட்ட பல வகையான நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் பலர் குழந்தைகளுக்கு காது குத்து விழாவும் நடத்தினர்.

    இன்று ஒரே நாளில் பல்லாயிரகணக்கான பக்தர்கள் அம்மனை மனமுருகி தரிசித்தனர். தொடர்ந்து இந்த ஆவணி மாதத்தில் வரும் மற்ற ஞாயிற்றுக்கிழமைகளிலும் இதைவிட பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    ×