என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Pudukkottai Queen"

    • புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தபோது கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான்
    • மறைந்த ராணி ரமாதேவி 1.10.1939-ம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தார்.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டை தனி சமஸ்தானமாக இருந்தபோது கடைசி மன்னராக இருந்தவர் ராஜா ராஜகோபால தொண்டைமான். இவரது சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி (வயது 84). இவர், புதுக்கோட்டை அருகே இச்சடியில் உள்ள இல்லத்தில் வசித்து வந்தார்.

    இவருக்கு சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்றுவந்த அவர் நேற்று மதியம் இறந்தார். அவரது உடல் புதுக்கோட்டையில் உள்ள அவரது இல்லத்திற்கு நேற்று மாலை கொண்டுவரப்பட்டது. அவரது குடும்பத்தினர், கலெக்டர் கவிதாராமு மற்றும் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து இவரது இறுதிச்சடங்கு இன்று (வியாழக்கிழமை) காலை நடைபெற உள்ளது. ராணி ரமாதேவி உடல் அவரது இல்லத்திலேயே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. மறைந்த ராணி ரமாதேவிக்கு ராஜகோபால தொண்டைமான் மற்றும் விஜயகுமார் தொண்டைமான் ஆகிய இரண்டு மகன்களும், ஜானகி மனோகரி ராஜாயி என்ற மகளும் உள்ளனர்.

    மறைந்த ராணி ரமாதேவி 1.10.1939-ம் ஆண்டு காரைக்குடியில் பிறந்தார். அவர் தனது பள்ளி படிப்பை கோவை, திருச்சி, மும்பை, சென்னை ஆகிய இடங்களில் படித்துள்ளார். பின்னர் மைசூர் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ. ஆங்கில பட்டம் பெற்றார். இவருக்கு 4.9.1954-ம் ஆண்டு ராதாகிருஷ்ண தொண்டைமானுடன் திருமணம் நடைபெற்றது. ராணி ரமாதேவி தமிழ்நாடு தடகள சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு நீச்சல் சங்கத்தின் தலைவராகவும், தமிழ்நாடு வாலிபால் சங்க துணை தலைவராகவும், எல்.ஐ.சி.யில் இயக்குனர் குழு உறுப்பினராகவும் பதவி வகித்துள்ளார்.

    புதுக்கோட்டை பாய்ஸ் கிளப் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் வாலிபால் மற்றும் பேட்மிண்டன் விளையாட்டில் சிறந்து விளங்கினார். இவர் தமிழ் மொழியோடு ஆங்கிலம், மலையாளம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் ஆகிய மொழிகளை கற்றிருந்தார். புதுக்கோட்டை சமஸ்கிருத வித்யாலயா ஓரியண்டல் பள்ளியின் செயலாளராக இருந்தார்.

    மேலும் புதுக்கோட்டையில் உள்ள பல கோவில்களுக்கு கும்பாபிஷேக குழு தலைவராகவும் இருந்துள்ளார்.

    • புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவி ராணி ரமாதேவி உடல்நலக்குறைவால் உயிரிழந்தார்.
    • ராணி ரமாதேவியை இழந்து வாடும் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை:

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

    புதுக்கோட்டை சமஸ்தானத்தின் கடைசி மன்னர் ராஜகோபால் தொண்டைமானின் சகோதரர் ராதாகிருஷ்ண தொண்டைமானின் மனைவியார் ராணி ரமாதேவி, உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி மறைவெய்திய தகவலறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

    அவரை இழந்து வாடும் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×