search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Proof of ownership"

    • இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
    • விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    திருப்பூர்:

    விவசாயிகள், கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் பெறுவது, விவசாய நகைக்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் பயன்பெறும் போதும் பல்வேறு வகை நில உடைமை ஆவணங்கள் கேட்கப்படுகின்றன. வருவாய்த்துறை அதிகாரிகள் வழங்கியுள்ள நில உடைமை ஆவணங்களின் நகல்களை சமர்ப்பிக்கின்றனர்.

    அனைத்து வகை ஆவணங்கள் இருந்தாலும், வருவாய்த்துறையில் உரிமைச்சான்று பெற்று கொடுக்க வேண்டும் என வங்கிகளும், கூட்டுறவு சங்கங்களும் வற்புறுத்துகின்றன. இதனால் கிராம நிர்வாக அலுவலர், தாசில்தார் ஆகியோரிடம் நில உரிமைச்சான்று பெற்று வழங்கிவந்தனர்.

    இந்நிலையில் வருவாய்த்துறையை சேர்ந்த யாரும், நில உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதனால் கூட்டுறவு சங்கங்கள், வங்கிகள், இதர அரசுத்துறைகளில் அரசு மானிய திட்டங்களில் பயன்பெற முடியவில்லை என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

    இது குறித்து திருப்பூர் விவசாயிகள் கூறியதாவது:-

    தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் உரிமை சான்று வழங்கப்படுகிறது. ஆனால் யாருக்கும் உரிமைச்சான்று வழங்க கூடாது என கலெக்டர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மின் வாரிய சேவைகளுக்கு உரிமைச்சான்று கட்டாயம்.

    பயிர்க்கடன் பெறுவது, மானிய திட்டங்களில் கடன் பெறுவது என கூட்டுறவு சங்கமும், வங்கிகளும் உரிமைச்சான்று கட்டாயம் வேண்டும் என்கின்றனர். இதனால் நடப்பு ஆண்டு பயிர்க்கடன் பெற முடியாத சூழல் உள்ளது.உரிமைச்சான்று வழங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டால், எந்த அரசுத்துறையும் உரிமைச்சான்று கேட்கவும் கூடாதென அறிவுறுத்த வேண்டும்.

    கூட்டுப்பட்டா, பாகசாசனம் செய்யாத நிலங்களுக்கு, அரசு சேவைகளை பெற, உரிமைச்சான்று கட்டாயம் தேவைப்படும். எனவே, விதிமுறைகளை பின்பற்றி உரிமைச்சான்று வழங்க கலெக்டர் உத்தரவிட வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம் கூறுகையில், உரிமைச்சான்று வழங்குவது தொடர்பான பிரச்சினைகள் குறித்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து கலெக்டர் கவனத்துக்கு கொண்டு சென்று உரிமைச்சான்று தொடர்பான உத்தரவுகள் மறுபரிசீலனை செய்ய பரிந்துரைக்கப்படும் என்றார்.

    ×