search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Planning to murder"

    பெங்களூரில் சொத்துக்காக கணவரை கொலை செய்ய திட்டமிட்ட மனைவி மற்றும் 2 மகன்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஓசூர்:

    பெங்களூரு எச்.ஏ.எல். பகுதிக்குட்பட்ட காளப்பா லேஅவுட் பகுதியை சேர்ந்தவர் ராமச்சந்திரா(48). இவரது மனைவி முனிரத்தினம்மா(45). இவர்களுக்கு சேதன்(20), அபிஷேக்(19) என்ற இரு மகன்கள் உள்ளனர். ராமச்சந்திரா, சரக்கு வேன் டிரைவர் ஆவார்.

    இந்த நிலையில், பெங்களூரு அருகே கித்தேகானஹள்ளி என்ற இடத்தில், ராமச்சந்திரா 8 வீடுகளை கட்டி வாடகைக்கு விட்டார். இந்த சொத்தை, மனைவி முனிரத்தினம்மா தங்களுக்கு தருமாறு கணவரிடம் கேட்டார்.

    இதுதொடர்பாக கணவன்-மனைவியிடையே பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து, முனி ரத்தினம்மா கோபித்துக் கொண்டு, தனது 2 மகன்களையும் அழைத்துக் கொண்டு தாய் வீட்டுக்கு சென்றுவிட்டார். அத்துடன் சொத்துக்காக, நீதிமன்றத்தில் வழக்கும் போட்டார்.

    கடந்த 5-ந் தேதி இரவு, சில மர்ம நபர்கள், ராமச்சந்திராவை தொடர்பு கொண்டு, வாடகைக்கு வேன் வேண்டும் என்றும், எச்.ஏ.எல். கேட் அருகே வருமாறும் கூறினார்கள். இதையடுத்து அங்கு சென்ற ராமச்சந்திராவின் கை, கால்களை கட்டிப்போட்டும், தடி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியும் வேனில் கொண்டு சென்றனர்.

    பின்னர், கித்தேகானஹள்ளியில் உள்ள ஒரு வீட்டில் அவரை அடைத்து வைத்து சொத்தை முனிரத்திம்மாவின் பெயரில் எழுதி தருமாறு கொலை மிரட்டல் விடுத்து, சித்ரவதை செய்தனர்.

    நேற்று முன்தினம் இரவு, ராமச்சந்திராவின் கதறல் சத்தம் கேட்டு அந்த வழியாக சென்ற ஒருவர், ராமச்சந்திரா அடைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து அங்கு விரைந்து வந்த எச்.ஏ.எல். போலீசார், ராமச்சந்திராவை மீட்டனர். மேலும் அவர் தன்னை கொலை செய்ய திட்டமிட்டதாக புகார் அளித்ததன்பேரில், மனைவி முனிரத்தினம்மா மற்றும் 2 மகன்கள், உறவினர் சிவகுமார்(42) ஆகிய 4 பேரையும் கைது செய்தனர்.

    இச்சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×