search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Padmapriya"

    நடிகர் சங்கத் தேர்தலில் பார்வதியை போட்டியிட அனுமதிக்கவில்லை என்றும், மலையாள நடிகர் சங்கம் நடிகைகளுக்கு எதிராக செயல்படுகிறது என்றும் நடிகை பத்மபிரியா குற்றம்சாட்டியுள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep
    மலையாள நடிகர் சங்கமான ‘அம்மா’வின் புதிய தலைவராக போட்டியின்றி நடிகர் மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இதற்காக நடைபெற்ற நடிகர் சங்க கூட்டத்தில் நடிகை பாலியல் பலாத்கார வழக்கில் சிக்கியதால் சங்கத்தில் இருந்து நீக்கி வைக்கப்பட்ட நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதற்கு மலையாள நடிகைகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. நடிகைகள் பாவனா, ரம்யா நம்பீசன், ரீமா கல்லிங்கல், கீது மோகன்தாஸ் ஆகியோர் நடிகர் சங்கத்தில் இருந்து ராஜினாமா செய்தனர். மேலும் பல நடிகைகளும் திலீப்பை சேர்த்ததற்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இந்த விவகாரம் பெரிதானது.



    இந்த நிலையில் நடிகர் சங்க தலைவர் மோகன்லால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் இந்த சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்தார். மோகன்லால் கூறும்போது, நடிகை பலாத்கார வழக்கில் திலீப் சிக்கியதும், மம்முட்டி வீட்டில் அவசரமாக செயற்குழு கூட்டம் நடத்தி திலீப்பை நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கும் முடிவு எடுக்கப்பட்டது. அப்போது நடந்தது அதிகாரப்பூர்வமான கூட்டம் இல்லை என்பதால் அடுத்த கூட்டத்தில் இதுபற்றி பேசி திலீப் நீக்கம் பற்றி இறுதி முடிவு எடுக்க தீர்மானிக்கப்பட்டது. அதன்படி நடிகர் சங்க கூட்டத்தில் திலீப்பை மீண்டும் சேர்க்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதுபற்றி கூட்ட அஜண்டாவில் குறிப்பிடப்பட்டு இருந்தது. ஆனால் முதலில் யாரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. திலீப்பை சேர்த்த பிறகு எதிர்க்கிறார்கள். வழக்கில் இருந்து விடுதலை ஆகும் வரை திலீப் நடிகர் சங்கத்தில் உறுப்பினராக இருக்க மாட்டார். பாதிக்கப்பட்ட நடிகைக்கு ஆதரவாகவே நடிகர் சங்கம் உள்ளது.



    நடிகை பாவனா, ரம்யா நம்பீசன் ஆகியோரின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது. மற்றவர்கள் கடிதம் எதுவும் எங்களுக்கு வரவில்லை. நடிகைகள் தேர்தலில் போட்டியிட யாரும் அவர்களுக்கு தடை விதிக்கவில்லை. நடிகர் சங்கம் கடந்த 25 ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகர் மோகன்லாலின் கருத்துகளுக்கு நடிகை பத்மபிரியா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    மலையாள நடிகர் சங்கத்தில் ஜனநாயகம் இல்லை. இந்த சங்கம் நடிகைகளுக்கு எதிராகதான் செயல்படுகிறது. நடிகர் சங்க தேர்தலில் போட்டியிட பார்வதி முடிவு செய்தபோது அவருக்கு எதிர்ப்புகள் கிளம்பியது. தற்போதைய பொதுச் செயலாளர் இடைவேளை பாபு அவரை போட்டியிட விடாமல் தடுத்தார்.



    நடிகர் திலீப்பை மீண்டும் நடிகர் சங்கத்தில் சேர்ப்பது பற்றி எந்தவித தகவலும் கூட்ட அஜண்டாவில் தெரிவிக்கப்படவில்லை.

    இரண்டு நடிகைகளின் ராஜினாமா கடிதம் மட்டும் தான் கிடைத்துள்ளது என்று மோகன்லால் ஏன் கூறுகிறார் என்று தெரியவில்லை. 4 நடிகைகள் ராஜினாமா கடிதம் கொடுத்து உள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதற்கிடையில் நடிகை பத்மபிரியாவின் குற்றச்சாட்டை நடிகர் சங்க பொதுச் செயலாளர் இடைவேளை பாபு மறுத்துள்ளார். பத்மபிரியாவின் குற்றச்சாட்டு தவறானது என்றும், அவர் நடிகர் சங்க தேர்தலில் போட்டியிடுவதை தான் தடுக்கவில்லை என்றும் கூறி உள்ளார். #AMMA #MalayalamNadigarSangam #Dileep #Padmapriya

    ×