search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "nerve centre terrorism"

    பாகிஸ்தான், பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறியும் என இம்ரான்கானுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. #Pakistan #NerveCentre #ImranKhan #PulwamaAttack
    புதுடெல்லி:

    புலவாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு தொடர்பு உள்ளது என்பது இந்தியாவின் குற்றச்சாட்டு. இதை விமர்சிக்கிற வகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் பேசி உள்ளார்.

    அவருக்கு உடனடியாக இந்தியா பதிலடி கொடுத்துள்ளது. இது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    புலவாமாவில் நமது பாதுகாப்பு படையினர் மீதான தாக்குதலை பயங்கரவாத செயல் என்பதை பாகிஸ்தான் பிரதமர் ஏற்க மறுப்பதில் ஆச்சரியம் இல்லை.

    இந்த கொடூரமான செயலுக்கு அவர் கண்டனமும் தெரிவிக்கவில்லை. வீரர்களை இழந்து தவிக்கிற குடும்பங்களுக்கு இரங்கலும் தெரிவிக்கவில்லை. பயங்கரவாத தாக்குதலுக்கும், பாகிஸ்தானுக்கும் தொடர்பு கிடையாது என்பது அடிக்கடி திரும்ப திரும்ப சொல்லப்படுகிற ஒன்றுதான்.

    ஜெய்ஷ் இ முகமது இயக்கமும், இந்த கொடூர தாக்குதலுக்கு சதி செய்த பயங்கரவாதியும் ஒப்புக்கொண்டுள்ளதை பாகிஸ்தான் பிரதமர் கண்டுகொள்ளவில்லை. ஜெய்ஷ் இ முகமது இயக்கமும் சரி, மசூத் அசாரும் சரி இவர்கள் பாகிஸ்தானை அடிப்படையாக கொண்டவர்கள் என்பது நன்கு அறியப்பட்ட உண்மை. பாகிஸ்தான் நடவடிக்கை எடுப்பதற்கு இதுவே போதுமான ஆதாரம்.



    இந்தியா ஆதாரம் அளித்தால் விசாரணை நடத்த தயார் என பாகிஸ்தான் பிரதமர் கூறி உள்ளார். இது நொண்டிச்சாக்கு மட்டும்தான். மும்பையில் 2008-ம் ஆண்டு நவம்பர் 26-ந்தேதி நடந்த கொடிய தாக்குதலுக்கு பாகிஸ்தானிடம் ஆதாரம் கொடுத்தோம். 10 ஆண்டுகளாகியும் அங்கு நடக்கிற வழக்கு விசாரணையில் முன்னேற்றம் இல்லை. பதன்கோட் விமானப்படை தளம் தாக்குதலிலும், முன்னேற்றம் இல்லை. உறுதியான நடவடிக்கைக்கு அளிக்கப்படுகிற வாக்குறுதிகள், எதுவும் நிறைவேற்றப்படவில்லை என்பது கடந்த கால வரலாறு.

    புதிய பாகிஸ்தான், புதிய சிந்தனை என்று பாகிஸ்தான் பிரதமர் கூறுகிறார். ஆனால் ஐ.நா. சபையால் சர்வதேச பயங்கரவாதி என அறிவிக்கப்பட்டுள்ள ஹபீஸ் சயீத் போன்ற பயங்கரவாதிகளுடன் தற்போதைய அரசின் மந்திரிகள் ஒரே மேடையில் ஒன்றாக தோன்றுகிறார்கள்.

    பேச்சுவார்த்தைக்கு பாகிஸ்தான் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார். பயங்கரவாதம் பற்றி பேச தயார் என்று சொல்லி இருக்கிறார். பயங்கரவாதமும், வன்முறையும் இல்லாத சூழலில் முழுமையான இரு தரப்பு பேச்சு வார்த்தைக்கு தயார் என்று இந்தியா மீண்டும் மீண்டும் கூறி இருக்கிறது.

    பாகிஸ்தான் பயங்கரவாதத்துக்கு மிகப்பெரிய களப்பலி என சொல்லி இருக்கிறது. இதெல்லாம் உண்மைக்கு வெகு தூரமானது. பாகிஸ்தான் பயங்கரவாதத்தின் நரம்பு மண்டலம் என்பதை சர்வதேச சமூகம் நன்கு அறிந்திருக்கிறது.

    பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியாவின் குற்றச்சாட்டு, வரவுள்ள தேர்தலை வைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று பாகிஸ்தான் பிரதமர் கூறி இருப்பது வருந்தத்தக்கது. இந்த தவறான குற்றச்சாட்டை இந்தியா நிராகரிக்கிறது.

    இந்தியாவின் ஜனநாயகம் உலகத்துக்கே முன்மாதிரி. அது ஒருபோதும் பாகிஸ்தானுக்கு புரியாது.

    சர்வதேச சமூகத்தை தவறாக வழிநடத்துவதை பாகிஸ்தான் நிறுத்திக்கொள்ள வேண்டும். புலவாமா பயங்கரவாத தாக்குதல் சதிகாரர்கள், பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் இருக்கிற பிற பயங்கரவாதிகள், பயங்கரவாத இயக்கங்கள் மீது நம்பத்தகுந்த, காணத்தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ×