search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Nerkundram boy died"

    நெற்குன்றத்தில் தீபாவளி பட்டாசு வெடித்ததில் காயம் அடைந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்கு பிறகு உயிரிழந்தான்.
    போரூர்:

    இந்த ஆண்டு தீபாவளி தினத்தில் பட்டாசு வெடிக்க பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    பகலில் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரமும் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்கப்பட்டது. கூடுதல் நேரம் பட்டாசு வெடித்தவர்கள் மீது வழக்கு தொடரப்பட்டது.

    என்றாலும், பட்டாசு வெடிப்பதில் சிறுவர்கள் ஆர்வம் காட்டினார்கள். நெற்குன்றம் விநாயகர் புரத்தில் ஆண்டியப்பன் என்பவருடைய மகன்கள் ரவிராஜ் (9), சரண்ராஜ் (7) ஆகியோர் கடந்த 3-ந்தேதி வீட்டின் முன்பு பட்டாசு வெடித்தனர்.

    அப்போது தீப்பொறி பட்டு எதிர்பாராதவிதமாக அங்கு வைத்திருந்த பட்டாசுகள் வெடித்தன.

    இதில் ரவிராஜ், அவனுடைய தம்பி சரண்ராஜ் ஆகியோருக்கு தீக்காயம் ஏற்பட்டது.

    இரண்டு பேரும் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டனர். ரவிராஜுக்கு 28 சதவீதமும், சரண்ராஜுக்கு 9 சதவீதமும் தீக்காயம் இருந்தது.

    தீக்காயம் அடைந்த சிறுவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில் சிறுவன் ரவிராஜ், சிகிச்சை பலனின்றி 10 நாட்களுக்கு பிறகு நேற்றுஇரவு பரிதாபமாக உயிர் இழந்தான். அவன் அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 4-ம் வகுப்பு படித்து வந்தான்.

    பலியான சிறுவன் உடலை கண்டு பெற்றோரும், உறவினர்களும் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. கோயம்பேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×