search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muthiyalamman Temple"

    • சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
    • சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் சிரசு ஊர்வலம் இன்று நடந்தது.

    அதிகாலை 4.30 மணியளவில் குடியாத்தம் தரணம்பேட்டை முத்தியாலம்மன் கோவிலில் இருந்து அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது.

    அப்போது, சிலம்பாட்டம், மயிலாட்டம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன், பம்பை, உடுக்கை, மேள-தாளம் முழங்க அம்மன் சிரசு ஊர்வலமாக கொண்டுவரப்பட்டது.

    நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக நடைபெற்ற ஊர்வலம் கெங்கையம்மன் கோவிலில் நிறைவடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். குறிப்பாக, தரணம்பேட்டை முதல்கோபாலபுரம் வரை சாலையின் இருபுறமும் பக்தர்கள் திரண்டிருந்தனர்.

    வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணா மலை, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் 5 லட்சத்துக்கும் அதிகமாக பக்தர்கள் குடியாத்தம் வந்து, விழாவில் குவிந்தனர்.

    சிரசு ஊர்வலம் சென்ற பாதையில் கெங்கையம்மனுக்கு பூமாலை சூட்டியும், கற்பூரம் ஏற்றி, தேங்காய் உடைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    சுமார் 3 கிலோமீட்டர் தொலைவுக்கு மக்கள் வெள்ளத்தில் சென்ற சிரசு, கெங்கையம்மன் கோவில் மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த சண்டாளச்சி உடலில் பொருத்தப்பட்டது.

    தொடர்ந்து, அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடைபெற்றது. தொடர்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் தேங்காய்களை உடைத்தும், ஆடு, கோழி பலியிட்டும், பலர் அலகுத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள் நடந்தன. பின்னர் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

    மலர் மாலை, எலுமிச்சை மாலை, ரூபாய் நோட்டு மாலை ஆகியவற்றை பக்தர்கள் நீண்டவரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அணிவித்து வழிபட்டனர். வழி எங்கும் பக்தர்களுக்கு நீர், மோர், கூழ் இலவசமாக வழங்கினர்.

    தொடர்ந்து இன்று இரவு அம்மன் உடலில் இருந்து சிரசு பிரிக்கப்பட்டு, கவுண்டன்ய ஆற்றங்கரையில் அலங்காரம் கலைக்கப்பட்டு மீண்டும் கோவிலுக்கு கொண்டு வரப்பட உள்ளது.

    சிரசு திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் குடியாத்தம் நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. 1000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதுதவிர தனிப்பிரிவு போலீசார், உளவுத்துறை, வெடிகுண்டு நிபுணர்க்ள பல்வேறு பாதுகாப்பு கருவிகளுடன் கோவில் கட்டிடம், ஊர்வலம் உள்ளிட்ட பாதுகாப்பு சோதனையில் ஈடுபட்டனர்.

    சிரசு ஏற்றத்திற்கு பிறகு பக்தர்கள் உடலில் கரும்புள்ளி-செம்புள்ளி வேடமிட்டும், உடலில் எலுமிச்சை பழங்கள் குத்தி கொக்கலியாட்டம் ஆடியபடி ஊர்வலமாக வந்து வேண்டுதல்கள் நிறைவேற்றினர்.

    விழாவையொட்டி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் இருந்து சிறப்புப் பஸ்கள் இயக்கப்பட்டன. இன்று குடியாத்தத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்ததால் நகரமே குலுங்கியது. 

    ×