search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mosquito breed"

    • வணிக கட்டிடங்கள் மற்றும் காலிமனை இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
    • குடிசைப் பகுதிகள், பூங்காக்களில் எந்திரங்கள் மூலம் கொசுக்கள் அழிக்கப்படுகின்றன.

    சென்னை மாநகராட்சியின் துணை இயக்குநர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:

    பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளை மேற்கொள்ள மாநகராட்சியின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கையினால் இயங்கும் 229 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 8 சிறிய புகைப்பரப்பும்

    இயந்திரங்கள் மற்றும் 67 வாகனங்களில் பொருத்தப்பட்ட புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்களை கட்டுப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குடிசைப் பகுதிகள், பூங்காக்கள் மற்றும் சாலைகள் ஆகிய பகுதிகளில் புகைப்பரப்பும் இயந்திரங்கள் கொண்டு கொசுக்கள் மற்றும் கொசுப் புழுக்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

    மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் திறந்த நிலையில் உள்ள கிணறுகள், மேல்நிலை நீர்தேக்கத் தொட்டிகள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள், வணிகக் கட்டடங்கள் மற்றும் காலிமனைகள் ஆகிய இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கொசுப்புழு வளரிடங்கள் அழிக்கப்பட்டு வருகின்றன.

    சென்னையில் வணிகக் கட்டடங்கள், கட்டுமானப் பணிகள் நடைபெறும் இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் மாநகராட்சி களப்பணியாளர்கள் மூலம் 21.12.2022 முதல் 27.12.2022 வரை 6,062 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட களஆய்வில் 48 இடங்களில் கொசுப்புழு உற்பத்தி கண்டறியப்பட்டு, அதன் உரிமையாளர்களுக்கு ரூ.1,27,900/- அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

    எனவே, பொதுமக்கள் தங்களின் வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் உபயோகமற்ற டயர், தேங்காய் சிரட்டைகள், உடைந்த குடங்கள், உடைந்த சிமெண்ட் தொட்டிகள் முதலியவற்றில் தண்ணீர் தேங்கி கொசுப்புழு உருவாகும் வாய்ப்புள்ளதால், அவற்றை உடனடியாக அகற்றி டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவுவதைத் தடுத்திட வேண்டும். மேலும், கிணறு, மேல்நிலைத் தொட்டி, கீழ்நிலைத் தொட்டி, தண்ணீர் தொட்டிகள் முதலியவற்றை கொசுக்கள் மற்றும் கொசுப்புழு புகாத வண்ணம் மூடி வைக்க வேண்டும்.

    தண்ணீர் நிரப்பிய பூ ஜாடி மற்றும் கீழ்த்தட்டு, குளிர்பதனப் பெட்டியின் கீழ்த்தட்டு, மணிபிளான்ட் போன்றவற்றில் தேங்கி நிற்கும் தண்ணீரை வாரமொருமுறை அகற்றி தங்களின் வீடு, மொட்டை மாடிகளில் உள்ள மழைநீர் தேங்கும் பொருட்கள் மற்றும் சுற்றுப்புறத்தை தூய்மையாகப் பராமரிக்க வேண்டும். மேலும், நீர் வழித்தடங்கள் மற்றும் மழை நீர் செல்லும் கால்வாய்களின் அருகே குப்பை மற்றும் தேவையற்ற பொருட்களை கொட்டுவதை பொதுமக்கள் முற்றிலும் தவிர்க்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×