search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Monsoon Precaution"

    • மின்விபத்துகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.
    • மின்வாரியம் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

    கோவை,

    வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் மின்வாரியம் பொதுமக்களுக்கு சில அறிவுரைகளை வழங்கி உள்ளது.

    இதுதொடர்பாக கோவை மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் சே.செந்தில்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வடக்கு வட்டத்துக்கு உள்பட்ட கு.வடமதுரை, சீரக்கநாயக்கன் பாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய இடங்களில் வடகிழக்கு பருவமழை காரணமாக புயல், வெள்ளத்தால் ஏற்படும் மின்விபத்துகளால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மக்கள் விழிப்புணர்வுடன் இருத்தல் வேண்டும்.

    இடி- மின்னலின் போது உடனடியாக கான்கிரீட் கூரையிலான பெரிய கட்டிடம், வீடு அல்லது உலோகத்தால் மேலே மூடப்பட்ட பஸ், கார், வேன் போன்றவைகளில் தஞ்சம் அடைய வேண்டும். குடிசை வீட்டிலோ, மரத்தின் அடியிலோ, நிழற்குடையிலோ தஞ்சம் அடையக் கூடாது. திறந்தவெளியில் உள்ள ஜன்னல்கள், கதவு ஆகியவற்றின் அருகே நிற்க கூடாது.

    இடி-மின்னலின் போது தொலைக்காட்சி, மிக்சி, கிரைண்டர், கணினி மற்றும் கைப்பேசி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். சாய்ந்த மின் கம்பங்களுக்கு அருகே நிற்க கூடாது. மின்மாற்றியில் பழுது ஏற்பட்டால் உடனடியாக பிரிவு பொறியாளர்களை தொடர்பு கொள்ள வேண்டும். தாங்களாகவே பழுதை சரி செய்ய முயற்சி செய்யக்கூடாது.

    மழைக்காலங்களில் மின் மாற்றிகள், மின்கம்பங்கள், மின்கம்பங்கள், மின் பகிர்வு பெட்டிகள், ஸ்டே கம்பிகள் அருகே செல்லக்கூடாது. தண்ணீர் தேங்கிய இடங்களில் நிற்பதையும், நடப்பதையும் தவிர்க்க வேண்டும். அறுந்து கிடக்கும் மின் கம்பிகளை தொடாமலும், மிதிக்காமலும் இருப்பதுடன் மின்வாரிய அலுவலர்களிடம் தெரிவிக்க வேண்டும்.

    ஈரமான கைகளால் ஸ்விட்சுகளை தொடக்கூடாது. ஸ்டே கம்பிகள் மீது அல்லது மின் கம்பங்கள் மீது கயிறு கட்டி துணி காய வைத்தல் மற்றும் ஆடு, மாடு போன்ற விலங்குகளை கம்பங்களில் கட்டுதல் போன்ற செயல்களை தவிர்த்தல் வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

    ×