search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Metro Train Passengers"

    போரூரைச் சுற்றியுள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்ல விசேஷ ஆட்டோக்கள் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. #MetroTrain
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

    சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள், சுத்தமான குளு குளு வசதியுடன் கூடிய பயணம் என்பதால் சொகுசாக இருக்கிறது. சென்ட்ரலுடன் எழும்பூர்- கோயம்பேடு- ஆலந்தூர்- விமான நிலையம் மார்க்கம் இணைக்கப்பட்டுள்ளது.

    வண்ணாரப்பேட்டை- சென்ட்ரல் மற்றும் ஆலந்தூர் - சைதாப்பேட்டை- அண்ணா சாலை மார்க்கத்துடன் சென்ட்ரல் இணைக்கப்பட்ட பிறகே மெட்ரோ ரெயில் இன்னும் முக்கியத்துவம் பெரும். கூடுதல் பயணிகள் பயன் அடைவார்கள்.

    மெட்ரோ ரெயிலில் பயணம் செய்வதை ஊக்குவிக்க பல சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன. குறிப்பாக மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கு வந்து செல்ல ஆட்டோ, பஸ் போன்ற போக்குவரத்து இணைப்பு சரியாக இல்லை.

    குறிப்பாக போரூர் டி.எல்.எப். மற்றும் அதனைச் சுற்றியுள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்ல ஏ.சி. வசதியுடன் கூடிய வேன்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுபற்றி மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரி கூறியதாவது:-

    போரூரைச் சுற்றியுள்ள ஐ.டி. நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள், ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையம் வந்து செல்ல போக்குவரத்து இணைப்பு வசதியில்லை என்று தெரிவித்தனர்.

    இதையடுத்து அவர்களது கோரிக்கையை ஏற்று ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்து போரூர் செல்லவும், அங்கிருந்து ஆலந்தூர் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு நேரடியாக வரவும் ஏ.சி. வசதியுடன் கூடிய 14 இருக்கைகள் கொண்ட வேன்களை இயக்க முடிவு செய்துள்ளோம். இந்த வேன்கள் ஊழியர்கள் பணிபுரியும் இடத்துக்கே வந்து பயணிகளை ஏற்றிச் செல்லும். ஒவ்வொரு 15 நிமிடத்துக்கு ஒரு வேன் இயக்கப்படும். வேன் சர்வீசுக்கு கட்டணம் நிர்ணயிக்கப்படும். அனேகமாக ரூ.20 கட்டணம் வசூலிக்க ஆலோசனை நடந்து வருகிறது.


    இங்கு கிடைக்கும் வரவேற்பை பொருத்து மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் அறிமுகப்படுத்தப்படும். ஆலந்தூரைத் தொடர்ந்து திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கும் பயணிகளை ஏற்றிச்செல்ல இணைப்பு வேன் வசதி ஏற்படுத்தப்படும்.

    இதன் மூலம் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் அச்சமின்றி இரவு நேரங்களில் கூட தங்களது இருப்பிடத்துக்கு செல்ல வசதியாக இருக்கும். மெட்ரோ ரெயில் நிலையங்களைச் சுற்றியுள்ள 500 மீட்டர் தூர இடங்களுக்கு செல்லும் பயணிகளுக்கு இணைப்பு வாகன வசதி செய்யப்படுகிறது.

    ஏற்கனவே வாடகை சைக்கிள் மூலம் போக்குவரத்து வசதி 9 மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து விடப்பட்டுள்ளது.

    அடுத்து 16 ரெயில் நிலையங்களில் வாடகை மோட்டார் சைக்கிள், மினி பஸ்- கார் வசதி, பிற வசதிகள் குறித்து சில நிறுவனங்களுடன் கூட்டு ஒப்பந்தம் செய்ய உள்ளோம்.

    மேலும் மெட்ரோ ரெயில் நிலையங்களில் இருந்து மட்டும் செல்லும் வகையில் விசே‌ஷ ஆட்டோக்கள் விடப்படும். இது ஒவ்வொரு மெட்ரோ ரெயில் நிலையத்தில் இருந்தும் 2 முதல் 3 கிலோ மீட்டர் தொலைவுள்ள பகுதிக்கு மட்டும் விடப்படும். இங்கு ஆட்டோக்களை இயக்குவதற்காக ஒப்பந்த அடிப்படையில் டெண்டர் கோரப்பட்டுள்ளது.

    டெண்டர் எடுப்பவர்களிடம் ஆட்டோ சவாரிக்கு ஒப்பந்தம் செய்யப்படும். மெட்ரோ ரெயிலில் பயணம் செய்யும் பயணிகள் இந்த ஆட்டோக்களில் 3 கி.மீ. தூரம் வரை பயணம் செய்யலாம். மெட்ரோ ரெயில் பயணத்துக்கான ஸ்மார்ட் கார்டுகள் வைத்திருப்பவர்கள் மட்டுமே இந்த ஆட்டோவை பயன்படுத்த முடியும்.

    ஆட்டோக்களில் உள்ள ‘ஸ்வைப்’ மிஷினில், ஸ்மார்ட் கார்டை காட்ட வேண்டும். ஸ்மார்ட் கார்டில் இருந்து ஆட்டோ கட்டணம் எடுத்துக் கொள்ளப்படும். முதலில் சென்னை விமான நிலையம், திருமங்கலம் மெட்ரோ ரெயில் நிலையங்களில் அந்த விசே‌ஷ ஆட்டோக்கள் விடப்படும். அதன் பிறகு மற்ற இடங்களுக்கு விரிவுப்படுத்தப்படும்.

    விசே‌ஷ ஆட்டோக்கள் நிறுத்த மெட்ரோ ரெயில் நிலையங்களில் தனியாக இடம் ஒதுக்கப்படும். ஆட்டோக்கள் போல் இ.மோட்டார்சைக்கிள் விடும் திட்டமும் உள்ளது.

    திருமங்கலத்தில் இருந்து பாடி மேம்பாலம் வரை செல்ல டெம்போ வசதி ஏற்படுத்தப்படும். இதன் மூலம் அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்களும் மெட்ரோ ரெயில் நிலையத்துக்கு வந்து செல்ல முடியும்.

    இவ்வாறு அதிகாரி கூறினார். #MetroTrain
    மெட்ரோ ரெயிலில் நேற்று இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது.



    இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.

    அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

    இலவச பயணம் என்பதால், பலரும் ஒரு முறைக்கு பல முறை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். சென்டிரலில் இருந்து விமானநிலையம், பரங்கிமலைக்கும், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வதற்கு ஏதுவான வசதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது, வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் தெரிவித்தனர்.



    இதுகுறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கூறியதாவது:-

    தேனாம்பேட்டையை சேர்ந்த அக்ரிதி:-

    மெட்ரோ ரெயில் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் விமான நிலைய தோற்றத்தை போலவே இருக்கிறது.

    இதில் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. நாங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில் தேனாம்பேட்டையில் இருந்து விமானநிலையத்துக்கு காரில் செல்வோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போம். அது இனிமேல் எங்களுக்கு தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், ‘குளு குளு’ வசதியுடன் விமானநிலையத்துக்கு செல்ல அருமையான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சவுகார்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி:-

    என் அப்பாவுடன் வந்தேன். முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறேன். இந்த பயணம் வியப்பை ஏற்படுத்தியது. நான் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சாதாரணமான மின்சார ரெயில் போல தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்.

    இதில் பயணம் செய்தால், சென்னையையே ஒரு முறை சுற்றி வந்தது போல் இருக்கிறது. சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ரொம்ப திரில்லாக இருந்தது. கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வேளச்சேரியை சேர்ந்த நாராயணன்:-

    மெட்ரோ ரெயில் பயணம் சூப்பராக இருந்தது. நான் தினமும் வேளச்சேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வேலைக்காக வருவேன். இனி கிண்டி வரை வந்து, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வேன்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்க ஏதுவான சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயணிக்க வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் குறைக்கலாம். மற்றபடி இதில் குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×