search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    இலவச பயணம்: மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்
    X

    இலவச பயணம்: மெட்ரோ ரெயிலில் அலைமோதிய பயணிகள் கூட்டம்

    மெட்ரோ ரெயிலில் நேற்று இலவச பயணம் மேற்கொள்ள அனுமதிக்கப்பட்டதால் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை கடந்த 2013-ம் ஆண்டில் இருந்து படிப்படியாக இயக்கப்பட்டு வருகிறது.

    அந்தவகையில் நேரு பூங்கா-சென்டிரல், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-சின்னமலை இடையே மெட்ரோ ரெயில் சேவை நேற்று முன்தினம் தொடங்கப்பட்டது. இதையொட்டி, சோதனை அடிப்படையில் நேற்று முன்தினமும், நேற்றும் இலவச பயணம் செய்ய மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதித்தது.



    இதனால் நேற்று மெட்ரோ ரெயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. தற்போது கோடை விடுமுறையாக இருப்பதால், பலர் ஆர்வமுடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் நீண்ட வரிசையில் நின்று பயணிகள் மெட்ரோ ரெயிலில் ஏறி பயணம் செய்தனர்.

    அதேபோல், சில ரெயில் நிலையங்களில் ஏறி, இறங்குவதில் பயணிகள் திக்குமுக்காடினார்கள். அந்த அளவுக்கு பயணிகள் கூட்டம் அதிகமாக இருந்தது. பெற்றோருடன் வந்திருந்த குழந்தைகள், சிறுவர் மற்றும் சிறுமிகள் குதூகலத்துடன் மெட்ரோ ரெயிலில் பயணம் செய்ததை பார்க்க முடிந்தது.

    இலவச பயணம் என்பதால், பலரும் ஒரு முறைக்கு பல முறை மெட்ரோ ரெயிலில் பயணம் செய்தனர். சென்டிரலில் இருந்து விமானநிலையம், பரங்கிமலைக்கும், ஏ.ஜி.டி.எம்.எஸ்.-ல் இருந்து விமான நிலையத்துக்கும் பயணிகள் மகிழ்ச்சியுடன் பயணத்தை மேற்கொண்டனர்.

    சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் வந்து செல்வதற்கு ஏதுவான வசதிகளுடன் மெட்ரோ ரெயில் சேவை செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. சுரங்கப்பாதை ரெயில் நிலையங்களில் இருப்பது, வெளிநாடுகளில் இருப்பது போன்ற அனுபவத்தை தருவதாக பலரும் தெரிவித்தனர்.



    இதுகுறித்து மெட்ரோ ரெயிலில் பயணம் செய்த பயணிகள் சிலர் கூறியதாவது:-

    தேனாம்பேட்டையை சேர்ந்த அக்ரிதி:-

    மெட்ரோ ரெயில் சேவை அனைத்து தரப்பு மக்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. நான் எதிர்பார்த்ததை விட ரொம்ப அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள். சுரங்கப்பாதையில் அமைக்கப்பட்டுள்ள ரெயில் நிலையங்கள் ஒவ்வொன்றும் விமான நிலைய தோற்றத்தை போலவே இருக்கிறது.

    இதில் பயணம் செய்வதால் நேரம் மிச்சமாகிறது. நாங்கள் அடிக்கடி விமானத்தில் பயணம் செய்வது வழக்கம். அந்தவகையில் தேனாம்பேட்டையில் இருந்து விமானநிலையத்துக்கு காரில் செல்வோம். போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிப்போம். அது இனிமேல் எங்களுக்கு தேவை இருக்காது. போக்குவரத்து நெரிசல் இல்லாமல், ‘குளு குளு’ வசதியுடன் விமானநிலையத்துக்கு செல்ல அருமையான வழியை மெட்ரோ ரெயில் நிர்வாகம் ஏற்படுத்தி தந்து இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    சவுகார்பேட்டையை சேர்ந்த மகாலட்சுமி:-

    என் அப்பாவுடன் வந்தேன். முதல் முறையாக மெட்ரோ ரெயிலில் பயணிக்கிறேன். இந்த பயணம் வியப்பை ஏற்படுத்தியது. நான் இப்படி இருக்கும் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. சாதாரணமான மின்சார ரெயில் போல தான் இருக்கும் என்று நினைத்தேன். ஆனால் அப்படி இல்லை. எல்லையில்லா மகிழ்ச்சியில் திளைத்துவிட்டேன்.

    இதில் பயணம் செய்தால், சென்னையையே ஒரு முறை சுற்றி வந்தது போல் இருக்கிறது. சுரங்கப்பாதையில் ரெயில் செல்லும்போது ரொம்ப திரில்லாக இருந்தது. கட்டணத்தை கொஞ்சம் குறைத்தால் நன்றாக இருக்கும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    வேளச்சேரியை சேர்ந்த நாராயணன்:-

    மெட்ரோ ரெயில் பயணம் சூப்பராக இருந்தது. நான் தினமும் வேளச்சேரியில் இருந்து தேனாம்பேட்டைக்கு வேலைக்காக வருவேன். இனி கிண்டி வரை வந்து, அங்கிருந்து மெட்ரோ ரெயிலில் போக்குவரத்து நெரிசல் இல்லாமல் ஏ.ஜி.டி.எம்.எஸ் ரெயில் நிலையத்தில் இறங்கி பணிக்கு செல்வேன்.

    சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயணிக்க ஏதுவான சேவையை மெட்ரோ ரெயில் நிர்வாகம் அளித்து இருக்கிறது. கட்டணம் அதிகமாக இருக்கிறது. அனைத்து தரப்பு மக்களும் பயணிக்க வேண்டும் என்பதால் அதை கொஞ்சம் குறைக்கலாம். மற்றபடி இதில் குறை சொல்வதற்கு வேறு எதுவும் இல்லை.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×