என் மலர்
நீங்கள் தேடியது "Maratha Reservation Protest"
- ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன.
- பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.
மகாராஷ்டிரா:
மராத்தா சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு தொடர்பாக மாநில அரசுக்கு எதிராக மகாராஷ்டிரா மாநிலத்தில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. மகாராஷ்டிராவின் ஜல்னா மாவட்டத்தில் இன்று பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், சட்டம்-ஒழுங்கை பராமரிக்க அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இன்று காலையில் ஜல்னா மாவட்டத்தில் உள்ள தீர்த்தபுரி நகரின் சத்ரபதி சிவாஜி மஹராஜ் சவுக்கில் போராட்டக் குழுவினர் அரசு பஸ்சை தீ வைத்து எரித்தனர். இதில் அந்த பஸ் கொளுந்து விட்டு முழுவதும் எரிந்து நாசமானது.

இதைதொடர்ந்து ஜல்னா மாவட்டத்தில் அரசு பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டன. இந்த சம்பவத்திற்குப் பிறகு, மறு அறிவிப்பு வரும் வரை பஸ்களை இயக்க மகாராஷ்டிரா மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (MSRTC)தடை விதித்துள்ளது. பஸ் தீ வைப்பு சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது நடவடிக்கை கோரி உள்ளூர் காவல் நிலையத்தில் அம்பாட் பஸ்டெப்போ மேலாளர் புகார் அளித்துள்ளார்.
தொடர்ந்து அங்கு நடைபெற்று வரும் போராட்டத்தையடுத்து சட்டம்- ஒழுங்கை பாதுகாக்கும் வகையில் அம்பாட் தாலுகாவில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மகாராஷ்டிர மாநிலத்தில் 30% மக்கள்தொகை கொண்ட மராத்தா சமூகத்தினர், அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வியில் 16% இடஒதுக்கீடு அளிக்க வலியுறுத்தி, போராட்டம் நடத்தி வருகின்றனர். கடந்த ஆண்டு பிரமாண்ட அமைதி பேரணிகளை நடத்தி நாட்டின் கவனத்தை ஈர்த்தனர். இதில் பலன் கிடைக்காததால் அவர்களது போராட்டம் வன்முறை களமாக மாறியது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடந்து வருகின்றன.

மும்பையிலுள்ள ஆசாத் மைதானத்தில், இடஒதுக்கீட்டை வலியுறுத்தியும், கைது செய்யப்பட்டுள்ள மராத்தா சமூகத்தினரை விடுவிக்கக் கோரியும், தடியடி நடத்திய காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், இன்று போராட்டத்தில் ஈடுபடப் போவதாக போராட்டத்தை தலைமை தாங்கி நடத்தி வரும் மராத்தா கிரந்தி மோர்ச்சா அமைப்பு அறிவித்துள்ளது.
இனி முழு அடைப்பு போராட்டம் மற்றும் வன்முறை போராட்டங்கள் நடக்காது என இந்த அமைப்பு கூறியிருந்த நிலையில், தற்போது அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி கைதாக முடிவு செய்துள்ளது. இந்த போராட்ட அறிவிப்பைத் தொடர்ந்து மும்பை முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவில்லையெனில், வரும் ஆகஸ்டு 9-ஆம் தேதி மும்பையில் மாபெரும் பேரணி ஒன்றை நடத்தப் போவதாகவும் மராத்தா சமூகத்தினர் எச்சரித்துள்ளனர். #MarathaReservationProtest #MarathaKrantiMorcha #MarathaQuotaStir






