search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mailam robbery"

    மயிலம் அருகே டாஸ்மாக் சூப்பர்வைசரை அரிவாளால் வெட்டி பணம் கொள்ளையடித்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    மயிலம்:

    விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு சந்தைமேடு பகுதியில் டாஸ்மாக் கடை உள்ளது. இதில் மயிலம் அருகே உள்ள ஆலை கிராமத்தை சேர்ந்த சங்கர் (வயது 43) என்பவர் சூப்பர் வைசராக வேலை பார்த்து வருகிறார். திருவேங்கடம் (47), சக்திவேல், சோழன் ஆகியோர் அந்த டாஸ்மாக் கடையில் விற்பனையாளராக வேலை பார்த்து வருகின்றனர்.

    சம்பவத்தன்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் டாஸ்மாக்கடையில் வசூலான பணத்தை சங்கர் மற்றும் சோழன் ஆகிய 2 பேரும் எண்ணினர்.

    அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் சங்கர், சோழன் ஆகியோரை ஆயுதங்களை காட்டி மிரட்டினர். இதில் பயந்து போன சோழன் தன்கையில் வைத்திருந்த ரூ.46 ஆயிரத்தை தூக்கி வீசி விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். அந்த பணத்தை மர்ம கும்பல் எடுத்துக் கொண்டது.

    பின்னர் சங்கர் கையில் இருந்த ரூ.1 லட்சத்து 34 ஆயிரத்தை தரும்படி கேட்டு மிரட்டினர். அவர் பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓடினார். அவரை அந்த கும்பல் விரட்டி சென்று சங்கரின் கையில் அரிவாளால் வெட்டினர். அந்த நேரத்தில் அங்கு போலீசார் ரோந்து வந்ததால் மர்ம கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

    அரிவாள் வெட்டில் காயமடைந்த சங்கரை போலீசார் மீட்டு சிகிச்சைக்காக திண்டிவனம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


    இந்த கொள்ளை குறித்து மயிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் பணத்தை கொள்ளையடித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற மர்ம கும்பலை போலீசார் வலைவீசி தேடி வந்தனர்.

    இந்த நிலையில் முண்டியம்பாக்கம் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மோட்டார் சைக்கிள் விபத்தில் சிக்கிய 2 பேர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்தனர்.

    இவர்கள் 2 பேரும் மயிலம் அருகே உள்ள டாஸ்மாக் கடை சூப்பர்வைசரை தாக்கி பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் என்ற தகவல் போலீசாருக்கு கிடைத்தது.

    அதன்பேரில் திண்டிவனம் துணை போலீஸ் சூப்பிரண்டு பெருமாள், மயிலம் இன்ஸ்பெக்டர் விஜி தலைமையிலான போலீசார் முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரிக்கு விரைந்து சென்று அவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர்.

    அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணான தகவல்களை தெரிவித்தனர். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் அவர்கள் 2 பேரையும் மயிலம் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

    அதில், அவர்கள் சென்னை சைதாப்பேட்டையை சேர்ந்த சீனிவாசன் (31), சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஆவாரங்காடு பகுதியை சேர்ந்த அஜய்தேவன் (18) என்பதும், மயிலம் அருகே உள்ள கூட்டேரிப்பட்டு டாஸ்மாக் கடை சூப்பர் வைசரை அரிவாளால் வெட்டி பணத்தை கொள்ளையடித்து சென்றவர்கள் என்பதும் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    கொள்ளையடித்த பணத்துடன் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்ற போது விபத்தில் சிக்கி காயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் ஆஸ்பத்திரியில் சேர்ந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. அவர்களிடம் இருந்து ரூ.16 ஆயிரம் மற்றும் 2 கத்திகள் மற்றும் மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

    கொள்ளையர்கள் 2 பேரும் சென்னையில் பெயிண்டராக வேலைப் பார்த்த போது நண்பர்களாக ஆனார்கள் என்பதும், இவர்கள் மீது சென்னை, சிவகங்கை உள்பட பல போலீஸ் நிலையங்களில் கொலை, கொள்ளை மற்றும் வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    இந்த கொள்ளை வழக்கில் தொடர்புடைய மற்ற மர்ம மனிதர்கள் 4 பேரையும் போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.
    ×