search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kodumudiyar Dam"

    • தொடர்மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
    • அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    நெல்லை:

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்து ஏற்பட்டுள்ளதால் விவசாய பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த 4 நாட்களாக பரவலாக பெய்து வருகிறது. குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி அமைந்துள்ள அணை பகுதிகள், மாஞ்சோலை எஸ்டேட் பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. தொடர்மழையால் அணைகளின் நீர்வரத்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.

    பிரதான அணையான 143 அடி கொள்ளளவு கொண்ட பாபநாசம் அணையின் நீர்மட்டம் நேற்று 85.50 அடியாக இருந்த நிலையில் இன்று 1 அடி உயர்ந்து 86.70 அடியாக உள்ளது. சேர்வலாறு அணை நீர்மட்டம் மேலும் 1 அடி உயர்ந்து 99.31 அடியை எட்டியுள்ளது. இந்த அணைகளுக்கு வினாடிக்கு 1082 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணைகளில் இருந்து பாசனத்திற்காக 404 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    மணிமுத்தாறு அணை பகுதியில் 20 மில்லிமீட்டர் மழை கொட்டியது. அணைக்கு வினாடிக்கு 366 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது. அணையின் நீர்மட்டம் 57.50 அடியாக உள்ளது. திருக்குறுங்குடி அருகே உள்ள 52.50 அடி கொள்ளளவு கொண்ட கொடுமுடியாறு அணை நீர்மட்டம் தொடர்ந்து 50.50 அடியாக நீடிக்கிறது. அந்த அணைக்கு வரும் 30 கனஅடி நீரும் அப்படியே வெளியேற்றப்பட்டு வரும் நிலையில் இன்று முதல் அந்த அணையில் இருந்து பாசனத்திற்காக தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். இன்று காலை நிலவரப்படி 18 மில்லிமீட்டர் மழை அங்கு பதிவாகி உள்ளது.

    மாநகர் மற்றும் மாவட்டத்தின் அனைத்து இடங்களிலும் பருவமழையானது விட்டுவிட்டு பெய்து வருகிறது. ராதாபுரத்தில் 67 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. நாங்குநேரி, களக்காடு, மூலக்கரைப்பட்டி,அம்பை, சேரன்மகாதேவி உள்ளிட்ட இடங்களில் இரவில் தொடங்கி அவ்வப்போது கனமழையாக பொழிந்தது. இன்று காலை வரையிலும் ஒருசில இடங்களில் விட்டு விட்டு சாரல் மழை பெய்து வருகிறது.

    மாவட்டம் முழுவதும் சராசரியாக 27.27 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. மாஞ்சோலையில் 74 மில்லிமீட்டரும், காக்காச்சியில் 65 மில்லிமீட்டரும், நாலுமுக்கு எஸ்டேட்டில் 56 மில்லிமீட்டரும் மழை பதிவாகி உள்ளது. ஊத்து எஸ்டேட்டில் 35 மில்லிமீட்டர் மழை பெய்தது.

    தென்காசி மாவட்டத்தில் அணை பகுதிகளில் பலத்த மழை பெய்தது. குண்டாறு அணை பகுதியில் 2 மில்லிமீட்டர் மழை பதிவாகியது. 36 அடி கொள்ளளவு கொண்ட அந்த அணையில் தற்போது 30 அடி நீர் இருப்பு உள்ளது. மேற்கொண்டு அணைக்கு வரும் நீரானது பாசனத்திற்காக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதற்கிடையே நேற்று பெய்த மழையால் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துவரப்பட்ட மரத்தடி உள்ளிட்டவை மதகு பகுதியில் அடைத்தது. அப்போது மதகு சேதம் அடைந்தது. உடனடியாக அதனை பொறியாளர்கள் தலைமையில் ஊழியர்கள் சரி செய்தனர்.

    தென்காசியில் விடிய விடிய மழை பெய்தது. அங்கு 55 மில்லிமீட்டர் மழை பெய்துள்ளது. ஆய்குடி,சிவகிரி, சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்து வரும் தொடர்மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஆலங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் இரவு முழுவதும் விட்டு விட்டு கனமழை பெய்தது.

    அணைகளை பொறுத்தவரை கருப்பாநதி, கடனா நதி, அடவிநயினார் அணை பகுதிகளில் மழை விட்டு விட்டு பெய்தது. கடனா அணை நீர்மட்டம் 1 1/2 அடியும், ராமநதி அணை நீர்மட்டம் 1 அடியும் அதிகரித்துள்ளது. அணைகளின் நீர்மட்டம் உயர்வால் பிசான பருவ சாகுபடி பணிகளில் விவசாயிகள் மும்முரமாக இறங்கி உள்ளனர். குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டி வருகிறது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் வேடநத்தம், சூரன்குடி, விளாத்திகுளம், கோவில்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. திருச்செந்தூரில் தொடர்ந்து சில நாட்களாக பலத்த மழை கொட்டி வருகிறது. அதிகபட்சமாக அங்கு 40 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    ஓட்டப்பிடாரம், கயத்தாறு, கடம்பூர், கழுகுமலை, சாத்தான்குளம், காயல்பட்டி னம், குலசேகரன்பட்டினம், எட்டயபுரம், வைப்பார் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்வதால் தாழ்வான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.

    • நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்களம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.
    • ராஜாக்கமங்களத்தில் உள்ள குளத்தில் இருந்து இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

    நெல்லை:

    ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. வெளியிட்டுள்ள அறிக்ைகயில் கூறியிருப்பதாவது:-

    நெல்லை மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராஜாக்கமங்களம் பகுதியில் சுமார் 500 ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர் விவசாயம் செய்யப்பட்டுள்ளது.

    ராஜாக்கமங்களத்தில் உள்ள குளத்தில் இருந்து இந்த விவசாய நிலங்களுக்கு தண்ணீர் கிடைத்து வருகிறது.தற்போது இப்பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கதிர் வரும் பருவத்தில் உள்ளன.

    ஆனால் ராஜாக்கமங்களம் குளத்தில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் அதனால் பாசன வசதி பெற்று வரும் 250 ஏக்கர் நெற்பயிர் சாகுபடி செய்யப்பட்டுள்ள விவசாய நிலங்களுக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

    கொடுமுடியாறு

    கொடுமுடியாறு அணையில் தேவையான அளவு தண்ணீர் இருப்பு உள்ளதால் அதிலிருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட்டால் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ள 250 ஏக்கர் நெற்பயிர்கள் காப்பாற்றப்படும்.

    நெற்பயிர்கள் அனைத்தும் கதிர் விடும் பருவத்தில் இருப்பதால், மாவட்ட கலெக்டரும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சரும் உடனடியாக கொடுமுடியாறு அணையில் இருந்து, ராஜாக்கமங்களம் பகுதிக்கு தண்ணீர் திறந்துவிட நடவடிக்கை எடுக்க கேட்டு கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    இந்நிலையில் கொடு முடியாறு அணையில் இருந்து 2 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட மாவட்ட கலெக்டருக்கும், தமிழக பொதுப்பணித்துறை அமைச்சருக்கும் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கடிதம் எழுதியுள்ளார்.

    ×