search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Knitwear Industry"

    • புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.
    • ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், 2 நாள் பயிலரங்கம் நடத்தப்படும்.

    திருப்பூர் :

    கைத்தறி மற்றும் துணிநூல் துறை மானியக்கோரிக்கை விவாதத்தின்போது அமைச்சர் காந்தி 22 வகை அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். துணி நூல் துறைக்கு, ஐந்து அறிவிப்புகளும் கைத்தறித்துறைக்கு 17 அறிவிப்புகளும் வெளியாகியுள்ளது. அனைத்து ஜவுளி பிரிவுகளையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஜவுளி நகரம், பொது - தனியார் பங்களிப்புடன் சென்னையில் அமைக்கப்படும். தலா 6கோடி ரூபாய் மதிப்பீட்டில் இரண்டு கூட்டுறவு நூற்பாலையில், சோலார் மின் உற்பத்தி மையம் அமைக்கப்படும். புதிதாக, 12 கோடி ரூபாய் மதிப்பில் இரண்டு நூற்பாலைகள் அமைக்கப்படும்.

    சர்வதேச தொழில்நுட்ப ஜவுளி கருத்தரங்கு 60 லட்சம் ரூபாய் மதிப்பில் சென்னையில் நடத்தப்படும். இந்தியாவில் உள்ள 12 தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி சிறப்பு மையங்களில் கண்டறியப்பட்டுள்ள தொழில்நுட்பங்களை பகிர வசதி செய்யப்படும். அதற்காக தமிழக தொழில்நுட்ப ஜவுளி ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி தொடர்பான கலந்தாய்வு நடத்தப்படும்.

    கோவையில் 27 லட்சம் ரூபாய் செலவில், ஜவுளி தொழில் முனைவோர் அமைப்புகள் பங்கேற்கும், இரண்டு நாள் பயிலரங்கம் நடத்தப்படும். தமிழகத்தில், ஜவுளித்தொழில் துவங்க ஆர்வமுள்ள தொழில் முனைவோருக்கு தொழில்நுட்பம் மற்றும் முதலீடு தொடர்பான வழிகாட்டுதல் வழங்கப்படும். அதற்காக, கைத்தறி துணிநூல் துறையின் கீழ், பிரத்யேக ஜவுளி தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை திருப்பூர் தொழில் அமைப்பினர் வரவேற்றுள்ளனர்.

    இது குறித்து இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:- புதிய தொழில்நுட்பங்களை பகிர்ந்துகொள்ளும் வகையில் ஆராய்ச்சி மையங்களுடன் கலந்தாய்வு ஏற்பாடு செய்துள்ளது பயனுள்ளதாக இருக்கும். தொழில்முனைவோருக்கு வழிகாட்டும் தொழில் ஊக்குவிப்பு பிரிவு துவங்குவதையும் வரவேற்கிறோம். பாரம்பரிய கைத்தறி ரகங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதால் விற்பனை அதிகரிக்கும். பலவகை அறிவிப்புகள் செயல்பாட்டுக்கு வரும் போது தமிழகத்தின் ஜவுளி மற்றும் கைத்தறி தொழில் மேம்படும் என்றார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் சுப்பிரமணியன் கூறுகையில், பின்னலாடை தொழில் உட்பட, பல்வேறு பிரிவுகளுடன் ஒருங்கிணைந்த ஜவுளி தொழில் நகரம் அமையும் போது, புதிய வேலை வாய்ப்புகளும், தொழில்களும் உருவாகும். சர்வதேச தொழில்நுட்ப கருத்தரங்கு ஒவ்வொரு தொழில் பிரிவுக்கும் பயனுள்ளதாக இருக்கும். அரசு மானிய உதவியுடன் தொழில்முனைவோர்களை உருவாக்குவதற்கு வழிகாட்ட ஜவுளித்துறை ஆணையரகத்தில் ஜவுளி மேம்பாட்டு பிரிவு துவங்குவதை வரவேற்கிறோம். கோவையில் 12 ஆராய்ச்சி மையங்கள் சார்பில் இரண்டு நாள் தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்துவது சிறப்பான ஏற்பாடாக இருக்கும் என்றார்.

    • உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது.
    • டப் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் தர்ஷனா விக்ரம் சர்தோஷிடம், சிறு குறு மற்றும் நடுத்தர பின்னலாடை ஏற்றுமதி நிறுவனங்களை பாதுகாக்கும், கோரிக்கையை திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் முன்வைத்தது.பின்னலாடை ஏற்றுமதி வர்த்தகம், திருப்பூரில் மட்டும் ஆண்டுக்கு 33 ஆயிரத்து 525 கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. உள்நாட்டு விற்பனை பனியன் வர்த்தகம் 27 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நடக்கிறது. இந்தியாவின் பின்னலாடை ஏற்றுமதியில் திருப்பூரின் பங்களிப்பு மட்டும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது 55.32 சதவீதமாக இருக்கிறது. சிறு, குறு நிறுவனங்கள் தங்களது தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும், புது வரவு எந்திரங்களை பயன்படுத்தவும், டப் திட்டத்தில் மானியம் வழங்கப்படுகிறது. திருத்தப்பட்ட டப் திட்டம் 2022 மார்ச் 31ந் தேதியுடன் காலாவதியாகிவிட்டது. எனவே மீண்டும் டப் திட்டத்தை, 2022 ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து செயல்படுத்த வேண்டும். பல்வேறு காரணங்களால் பனியன் நிறுவனங்கள் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. பொருளாதார சிக்கலை தீர்க்க ஏதுவாக பேக்கிங் கிரெடிட் மீதான வட்டி சலுகை, 3 மற்றும் 2 சதவீதம் என்பதை 5 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டும்.திருப்பூர் ஏற்றுமதியாளர்கள் ரெப்போ ரேட் உயரும் போது கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். எனவே, கொரோனா காலத்தில் இருந்தது போல் ஏற்றுமதி மறுநிதியளிப்பு திட்டத்தை செயல்படுத்தி வட்டி உயர்வால் ஏற்படும் பாதிப்புகளை சமாளிக்க ஆவன செய்ய வேண்டும். கொரோனா காலத்தில் பொருளாதார சரிவை சரிக்கட்டும் வகையில் நிலுவை கடன் மதிப்பில் 20 சதவீதம், பிணையமில்லா கடனாக வழங்கப்பட்டது. நூல் விலை உயர்வு, உக்ரைன் போர் உள்ளிட்ட காரணங்களால் தற்போதும் பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    எனவே அவசரகால கடன் உத்தரவாத திட்டத்தில் நிலுவை கடன் மதிப்பில் 30 சதவீதம் வரை கடன் வழங்க வேண்டும். அன்னிய செலாவணியை ஈட்டித்தரும், திருப்பூர் நகரின் உள்கட்டமைப்பு வசதி மேம்பாட்டில் மத்திய அரசின் பங்களிப்பு அவசியம். திருப்பூரின் ஓராண்டு ஏற்றுமதி வர்த்தக மதிப்பில் 1 சதவீத தொகையை, திருப்பூர் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக வழங்க வேண்டும் என திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க நிர்வாகிகள் அமைச்சரிடம் விளக்கினர்.

    • ஆடை வடிவமைப்பு குறித்த போட்டோ சூட் நடத்தி வருகிறேன்.
    • தலையணை உறை, திரைச்சீலைகள் போன்றவை பொதுவாக ஒவன் துணியில் தயாரிக்கப்படும். ஆனால் நான் பின்னல் துணியில் தயாரிக்கிறேன்.

    திருப்பூர்:

    திருப்பூரை சேர்ந்த வாலிபர் விக்னேஷ் பின்னலாடையில் அசத்தலான நவீன ரக ஆடைகளை உருவாக்கி அசத்தி வருகிறார். திருப்பூர் ராயபுரத்தில் உள்ள பிரபல தனியார் ஜவுளிக்கடை ஒன்றில் வேலைப் பார்த்துக் கொண்டே கொரோனா காலத்தில் வைரசை விரட்டும் வகையில் வேப்பிலை, வாழையிலை முககவசத்தை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

    இது குறித்து அவர் கூறுகையில், திருப்பூரில் பேஷன் டிசைனிங் கல்லூரியில் பட்ட படிப்பு படித்துள்ளேன். குடும்பத்தில் வறுமை நிலை இருந்தாலும் பெற்றோர்கள் ஒத்துழைப்புடன் கொரோனா சூழலில் பாதுகாப்பாக என் துறை சார்ந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று வேப்பிலை துணி முககவசம் தயாரிக்க திட்டமிட்டேன். வேப்பிலையை காயவைத்து அரைத்து பொடியாக்கி கெமிக்கல் கலக்காத சாயமாக மாற்றி அதில் துணிகளை நனைத்து எம்பிராய்டரி தைப்பது போல் தைத்து காதுகளில் அணிந்து கொள்ளும் அளவுக்கு மாஸ்க் தயாரித்தேன்.

    மேலும் வீட்டு உபயோகத்துக்கு பயன்படுத்தப்படும் பொருட்களை தயார் செய்துள்ளேன். அதன் படி கொரோனா உருவம் செய்து பிரிண்டிங் இட்டு செய்துள்ளேன். தலையணை உறை, திரைச்சீலைகள் போன்றவை பொதுவாக ஒவன் துணியில் தயாரிக்கப்படும். ஆனால் நான் பின்னல் துணியில் தயாரிக்கிறேன். இதை தவிரவும் புது வித ரகங்களில் வடிவமைப்பில் ஈடுபட்டு வருகிறேன். மேலும் என்னிடம் ஆலோசனை பெற வருவோருக்கு மார்டன் வடிவமைப்பு குறித்து விளக்கம் அளிக்கிறேன். பேஷன் ஷோக்களுக்கு வடிவமைப்பு செய்து தருகிறேன். ஆடை வடிவமைப்பு குறித்த போட்டோ சூட் நடத்தி வருகிறேன். பெண்களுக்கு் பிரத்யேக முறையில் மயில் தோகை முறையில் அலங்கார ஆடைகளை தயாரித்து கொடுக்கிறேன். சென்னையில் நடந்த நட்சத்திர மாடல் அழகுப்போட்டியில் நான் தயாரித்த ஆடைகளை அணிந்தவருக்கு பரிசு கிடைத்தது .இதனை அங்கீகரமாக கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

    • மெட்ரோ ரெயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில் திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.
    • இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும்.

    திருப்பூர் :

    திருப்பூர் வந்த முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் பின்னலாடை தொழில் அமைப்பினர் சந்தித்து மனு அளித்தனர்.பின்னலாடை துணி உற்பத்தியாளர் சங்க(நிட்மா) தலைவர் ரத்தினசாமி அளித்த மனுவில்,கோவை உக்கடத்திலிருந்து, அவிநாசி மார்க்கமாக, விமானநிலையம், கணியூர் வரையிலும், பல்லடம் மார்க்கத்தில் உக்கடத்திலிருந்து காரணம்பேட்டை வரை மெட்ரோ ெரயில் சேவை தொடங்க தமிழக அரசால் உத்தேச திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ெரயில் சேவையை அனைத்து மக்களும் பயன்பெறும்வகையில், கணியூரில் இருந்தும், காரணம் பேட்டை, சாமளாபுரம் வழியாக திருப்பூர் வரை நீட்டிக்கவேண்டும்.

    உலகளவில் புகழ் பெற்ற பின்னலாடை நகரம் திருப்பூர். கோவையில் இருந்து திருப்பூருக்கும், திருப்பூரிலிருந்து கோவைக்கும் தினமும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் வெளிநாட்டு வர்த்தகர்கள் வந்து செல்கின்றனர். கோவை - திருப்பூரை இணைக்கும் வகையில் மெட்ரோ ெரயில் இயக்கினால், திருப்பூரின் பின்னலாடை ஏற்றுமதி தொழில் வளர்ச்சி பெறும்.

    சாமளாபுரத்தில் இருந்து நொய்யலாற்றின் மேல் மெட்ரோ ெரயில் திட்டம் அமைந்தால் நில ஆர்ஜிதம் செய்வது சுலபமாகும். இந்த திட்டத்தால் சாலை போக்குவரத்து நெரிசல் குறையும். விபத்து தவிர்க்கப்படும். பயண நேரம் குறையும்.இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார். இதனுடன் கோவை - திருப்பூர் இடையே மெட்ரோ ரெயில் வழித்தடம் அமைப்பது குறித்த மாதிரி வரைபடத்தையும் அவர் இணைத்துள்ளார்.

    திருப்பூர் ஏற்றுமதியாளர் மற்றும் உற்பத்தியாளர் சங்க (டீமா) தலைவர் முத்துரத்தினம் அளித்த மனுவில்,பணம் மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி., நூல் விலை உயர்வு காரணமாக திருப்பூரில் உள்ள குறு, சிறு நடுத்தர பின்னலாடை உற்பத்தி நிறுவனங்கள் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்றன. நூல் விலை உயர்வால் ஆடை தயாரிப்பு செலவினம் அதிகரித்துள்ளது. உற்பத்தி பிரிவில், 50 சதவீதம் தொழிலாளர் பற்றாக்குறை தொடர்கிறது.வடமாநில தொழிலாளரை சார்ந்தே நிறுவனங்களை இயக்கவேண்டியுள்ளது. திருப்பூர் முழுவதும் மூன்று லட்சம் வடமாநில தொழிலாளர் உள்ளனர். ஒரு தொழிலாளருக்கு மாதம் 10 ஆயிரம் ரூபாய் என்ற அடிப்படையில் 300 கோடி ரூபாய் திருப்பூரிலிருந்து வெளிமாநிலத்துக்கு செல்கிறது.

    டீமா சங்கம் சார்பில் அரசு உதவியுடன் வேதாரண்யத்தில் ஆயத்த ஆடை பூங்கா அமைக்கப்படுகிறது. இதில், உள்ளூரை சேர்ந்த 10 ஆயிரம் பெண் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். தமிழகத்தில் தொழிலாளர் மிகுந்த மாவட்டங்களில் ஆயத்த ஆடை பூங்காக்களை அமைத்தால் வேலைவாய்ப்பு பெருகும், மாநில பொருளாதாரமும் வளர்ச்சி பெறும்.தொழிலாளர் நலன், தொழில் நலன் கருதி, டாஸ்மாக் கடைகளை மாலை 5 மணிக்கு மேல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக பருத்தி கொள்முதல் மையம், பின்னலாடை துறைக்கு தனி வாரியம் அமைப்பது அவசியம். குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களை கடுமையாக பாதிக்கும் மின் கட்டண உயர்வை கைவிட வேண்டும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உலக தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் அளித்த மனுவில், திருப்பூர் மாவட்டம், பல்லடத்தை தலைமையிடமாக கொண்டு இந்த நிறுவனம் இயங்குகிறது. ஆயிரத்து 200 தென்னை விவசாயிகள் இதில் பங்குதாரர்களாக உள்ளனர்.

    தென்னையிலிருந்து கிடைக்கும் நீரா பானத்தை, அதன் தன்மை மாறாமல் பேக்கிங் செய்து மக்களுக்கு வினியோகம் செய்து வருகிறோம். தென்னையிலிருந்து பெறப்படும் தாய்ப்பாலுக்கு நிகரான சத்துக்கள் அடங்கிய நீரா பானத்தை, தென்னீரா என்ற பெயரில் விற்று வருகிறோம்.கேரள மாநிலம் காசர்கோடு தென்னை ஆராய்ச்சி நிறுவனம் அங்கீகரித்த தென்னீராபானத்தை, அரசு பானமாக அறிவித்து முதல்வர் அலுவலகம் மற்றும் அமைச்சரவையில் வரவேற்பு பானமாக பயன்படுத்த வேண்டும்.ஆரம்ப சுகாதார மையம், அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள கர்ப்பிணிகளுக்கும், குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும் வழங்க வேண்டும். நீரா பானம் இறக்குவதற்கான உரிமம் பெறும் வழிமுறைகளை எளிமைப்படுத்தவேண்டும்.இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×