search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidnapper arrest"

    திருச்சியில் சாராய வியாபாரத்துக்கு கார் கடத்தலில் ஈடுபட்ட மன்னனை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 6 கார்கள் மற்றும் 30 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.
    திருச்சி:

    திருச்சி உறையூர் மேட்டுத் தெருவை சேர்ந்தவர் மோகன் (வயது 30). இவர் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வருகிறார். நேற்று வியாபாரம் செய்து கொண்டிருந்த போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென அவரிடமிருந்த ரூ.7ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பியோடிவிட்டார். இதையடுத்து அவர் பேருந்து நிலைய போலீசில் புகார் அளித்ததன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி தேடும் பணியில் ஈடு பட்டனர்.

    அப்போது திருச்சி ஜங்‌ஷன் ரெயில் நிலைய பார்சல் அலுவலகம் அருகே செல்லும் போது அங்கு சந்தேகப்படும்படியாக நின்ற ஒருவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் கரூர் மாவட்டம் குளித்தலை கீழ பஞ்சப்பட்டியை சேர்ந்த சுரேஷ் (வயது 42) என்பதும் பிரபல சாராய வியாபாரி என்பதும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து விசாரித்தனர். அப்போது பரபரப்பு தகவல் கிடைத்தது.

    சுரேஷ் முதலில் திருப்பூரில் சாராயம் தயாரிக்கும் நிறுவனத்தில் வேலை பார்த்துள்ளார். இதையடுத்து அவரே வடமாநிலங்களில் இருந்து சாராயம் வாங்கி வந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சட்டவிரோதமாக விற்பனை செய்துள்ளார். மேலும் சாராயம் கொண்டு வருவதற்கு வாடகை கார்களை பயன்படுத்தாமல், எங்காவது நிற்கும் கார்களை திருடி அதன் மூலம் கடத்தலில் ஈடுபட்டுள்ளார்.

    இதன்மூலம் அவர் தமிழகத்தில் திருச்சி, புதுச்சேரி, திண்டுக்கல் உள்பட பல்வேறு இடங்களில் கார்களை திருடியுள்ளார். மேலும் திருட்டு சம்பவங்களிலும் ஈடுபட்டு வந்துள்ளார். திருச்சியில் தனியார் பள்ளி நிர்வாகி வீட்டில் 30 பவுன் நகை கொள்ளை போன சம்பவத்தில் இவருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

    மேலும் சாராய வியாபாரம், கார் கடத்தல் மட்டுமின்றி ஆந்திராவில் இருந்து செம்மரம் கடத்துவதற்கும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது. இந்தநிலையில் போலீசில் அவர் சிக்கிக் கொண்டார். தொடர்ந்து அவரிடம் இருந்து 6 கார்கள் மற்றும் 30 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் திருச்சி கோர்ட்டில் ஆஜர்படுத்தி மத்திய சிறையில் அடைத்தனர். திருச்சியில் பிரபல கார் கடத்தல் மன்னன் கைது செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    இந்தியாவில் இருந்து சுமார் 300 சிறுமிகள் மற்றும் குழந்தைகளை கடத்தி அமெரிக்காவில் விற்ற கடத்தல்காரனை மும்பையில் போலீசார் கைது செய்தனர்.
    மும்பை:

    குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழைச் சிறுவர்- சிறுமிகள் 300 பேர் அமெரிக்காவுக்கு கடத்தி விற்கப்பட்ட திடுக்கிடும் தகவல் வெளியாகி உள்ளது.

    மும்பை வெர்சோவா பகுதியில் வசிக்கும் நடிகை பிரீத்தி சூட் சில நாட்களுக்கு முன் அங்குள்ள ஒரு பியூட்டி பார்லருக்கு சென்றார்.

    அப்போது அங்கு 2 சிறுமிகள் இருந்தனர். சிலர் அந்த பியூட்டிபார்லர் வந்து அங்கிருந்த 2 சிறுமிகளுக்கும் மேக்கப் போட்டு விடுமாறு கூறினர். அதன்படி 2 சிறுமிகளுக்கும் மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தனர். இதை கவனித்த நடிகை பிரீத்தி சூட் அந்த சிறுமிகளிடம் எதற்காக மேக்கப் போடுகிறீர்கள்? சினிமாவில் நடிக்கப் போகிறீர்களா? என்று கேட்டார்.

    ஆனால் 2 சிறுமிகளும் நாங்கள் அமெரிக்கா போகிறோம் என்றனர். அவர்களுடன் வந்த ஆட்கள் உடனே குறுக்கிட்டு அமெரிக்காவில் அவர்களது பெற்றோர் இருக்கிறார்கள் என்றனர். இதனால் சந்தேகம் அடைந்த நடிகை பிரீத்திசூட் ரகசியமாக போலீசுக்கு தகவல் கொடுத்தார்.

    இதை அறிந்ததும் 2 சிறுமிகளையும் விட்டுவிட்டு உடன்வந்தவர்கள் தப்பி ஓடி விட்டனர். போலீசார் அங்கு வந்து 2 சிறுமிகளையும் மீட்டனர்.

    சிறுமிகளிடம் விசாரித்த போது அவர்கள் குஜராத் மாநிலம் மேக்சனா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்றும் ஏழை குடும்பத்தைச் சேர்ந்த அவர்களது பெற்றோர் கடத்தல் கும்பலிடம் இருவரையும் விற்பனை செய்தது தெரியவந்தது.

    இதையடுத்து குழந்தை கடத்தல் கும்பல் பற்றி மும்பை போலீசார் விசாரணை நடத்தினார்கள். மேலும் அமெரிக்காவுக்கு செல்வதாக கூறியதால் குழந்தைகளை அமெரிக்காவுக்கு கடத்தி விற்கும் கும்பலின் நடமாட்டத்தை கண்காணித்தனர். மும்பை விமான நிலைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

    இந்த நிலையில் இதில் முக்கிய குற்றவாளியான ரஜுபாய் கேம்லிவாலா என்பவன் மும்பை விமான நிலையத்தில் சிக்கினான். அவன் உடனடியாக மும்பை போலீஸ் வசம் ஒப்படைக்கப்பட்டான். போலீசார் அவனை ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தினர். இதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.

    பிடிபட்ட கடத்தல்காரனுக்கு 50 வயது ஆகிறது. இவன் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்தவன்.

    கடந்த 2007-ம் ஆண்டு முதல் இவன் சிறுவர்- சிறுமிகள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாகவும் இதுவரை 300 குழந்தைகளை கடத்தி இருக்கலாம் என்றும் தெரிய வருகிறது. பெரும்பாலான சிறுவர்களை அமெரிக்காவுக்கு கடத்தியதாகவும் ஒவ்வொருவருக்கும் தலா ரூ.45 லட்சம் பேரம் பேசி விற்றதாகவும் போலீசில் கூறியுள்ளான்.

    சிறுவர் கடத்தலில் மும்பை மட்டுமல்லாது அமெரிக்காவைச் சேர்ந்த கும்பலுக்கும் தொடர்பு உள்ளது. அமெரிக்காவில் இருந்துதான் எத்தனை சிறுவர்-சிறுமிகள் தேவை என்ற விவரம் ரஜுபாய் கேம்லி வாலாவுக்கு தெரிவிக்கப்படும். உடனே அவன் தனது ஆட்கள் மூலம் ஏழைக் குடும்பத்தினரை தேடிப் பிடித்து அவர்களிடம் பேசி பண ஆசை காட்டுவான். பணத்துக்கு மயங்கும் பெற்றோரை மயக்கி சிறுவர்- சிறுமிகளை பேரம் பேசி விலைக்கு வாங்கி விடுவான்.

    அவர்களை வீட்டு வேலைக்கு அழைத்துச் செல்வதாக கூறி அமெரிக்காவுக்கு கடத்திச் சென்று லட்சக்கணக்கில் விலை பேசி விற்று விடுவான். கடத்தப்பட்ட சிறுவர்கள் அனைவரும் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.

    கடத்தப்படும் சிறுவர்களுக்கு பாஸ்போர்ட், விசா போன்றவற்றை போலியாக எடுத்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. யாருக்கும் சிறுவர்கள் மீது சந்தேகம் ஏற்படக்கூடாது என்பதற்காக அவர்களுக்கு மேக்கப் போட்டும் விலை உயர்ந்த ஆடைகளை அணிவித்தும் வசதி படைத்த வீட்டுப் பிள்ளைகளைப் போல் விமானத்தில் அழைத்துச் சென்றுள்ளனர்.

    சிறுவர் கடத்தல் தொடர்பாக மும்பை வெர்சேவா போலீசார் 4 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் பெயர் அமீர்கான், தாஜுதீன் கான், அப்சல்சேக், ரிஸ்வான் சோதானி.

    கடத்தப்பட்ட சிறுவர்- சிறுமிகள் அமெரிக்காவில் வீட்டு வேலைக்கும், விபசாரத்துக்கும் பயன்படுத்தப்பட்டு உள்ளதாக தெரிய வருகிறது. கடத்தப்பட்ட சிறுவர்கள் பற்றிய விவரங்களை போலீசார் சேகரித்து வருவதுடன் அவர்களை மீட்பதற்கான நடவடிக்கையிலும் ஈடுபட்டுள்ளனர்.

    தற்போது கைதாகியுள்ள ரஜுபாய் கேம்லிவாலாதான் இந்த கடத்தல் கும்பலின் தலைவனாக செயல்பட்டுள்ளான். இவன் போலி பாஸ்போர்ட் தயாரிப்பதில் கில்லாடி.

    கடந்த 2007-ல் போலி பாஸ்போர்ட் தயாரித்த வழக்கில் கைதானான். அதன் பிறகு சிறுவர் கடத்தலில் ஈடுபட்டுள்ளான். கைதான 5 பேர் மீதும் சிறுவர்கள் கடத்தல், விபசாரத்தில் ஈடுபடுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
    ×