search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karnataka police"

    ஆணவ கொலை வழக்கில் கைதான பெண்ணின் தந்தை உள்பட 7 பேரையும் அடுத்தமாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். #HonourKilling
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சூடுகொண்டபள்ளி கிராமத்தை சேர்ந்த காதல் திருமண தம்பதியினர் நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில், ஏற்கனவே சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    மேலும் சுவாதியின் பெரியப்பா அஸ்வதப்பா, உறவினர் வெங்கட்ராஜ், லட்சுமணன் ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    தலைமறைவாக இருந்த மற்றொரு குற்றவாளியான கார் டிரைவர் சாமிநாதன் (வயது 30) என்பவரை நேற்று முன்தினம் இரவு போலீசார் கைது செய்தனர். இவர் சூடுகொண்டபள்ளி அருகே உள்ள பலவனபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ஆவார். இவரை தமிழக போலீசார் கைது செய்து கர்நாடக போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

    நந்தீஸ்-சுவாதி ஆணவ கொலை வழக்கில் இதுவரை 7 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கொலை தொடர்பாக இதுவரை 7 செல்போன்கள் மற்றும் ஒரு கார் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த கொலை சம்பவத்தில் கூலிப்படையினருக்கு தொடர்பு உள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வந்தனர்.

    இந்த நிலையில் கைதான 7 பேரையும் கர்நாடக போலீசார் மண்டியா அருகே மலஹள்ளியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்களை அடுத்தமாதம் 5-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து 7 பேரும் மண்டியா கிளை சிறையில் அடைக்கப்பட்டார். ஏற்கனவே கைதான பெண்ணின் தந்தை சீனிவாசன் உள்பட 3 பேரை போலீசார் ஓசூர் அழைத்து வந்து சம்பவம் நடந்த இடங்களை காட்டி விசாரித்தனர். இந்த விசாரணை விவரங்களை வீடியோவில் பதிவு செய்தனர்.

    இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்களும், எதிர் தரப்பாளிகளும் ஓசூரை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த வழக்கை ஓசூருக்கு மாற்ற கர்நாடக போலீசார் முடிவு செய்து உள்ளனர்.

    60 நாட்களுக்குள் இந்த வழக்கில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று தாழ்த்தப்பட்டோர் தேசிய ஆணையம் கர்நாடக போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளது. இதனால் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்வதற்கு முன்பு இந்த வழக்கு ஓசூருக்கு மாற்றப்படும் என்று தெரிகிறது.#HonourKilling
    காதல் திருமணம் செய்த தம்பதி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின்கீழ் கர்நாடக போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். #HonourKilling
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூடு கொண்ட பள்ளியை சேர்ந்தவர் சீனிவாசன். விவசாயி. இவருக்கு 2 மகள்கள். ஒரு மகன். மூத்த மகள் என்ஜினீயரிங் படித்து வருகிறார். அடுத்த மகள் சுவாதி பி.காம் படித்தார். தம்பி பிளஸ்-1 படித்து வருகிறார்.

    அதே ஊரை சேர்ந்த நந்தீஸ் (25) என்பவர் ஓசூரில் ஹார்டுவேர் கடையில் வேலை பார்த்து வந்தார். ஒரே ஊர்க்காரர்கள் என்பதால் இருவரும் அடிக்கடி சந்திக்க நேர்ந்தது. கடந்த ஆகஸ்டு 15-ந்தேதி சுவாதி வீட்டை விட்டு வெளியேறி காதலனுடன் சேர்ந்து இருக்கிறார். இருவரும் சூளகிரி திம்மராய சுவாமி கோவிலில் சென்று மாலை மாற்றி திருமணம் செய்து கொண்டார்கள்.

    சுவாதி ஓடிப்போய் கலப்பு திருமணம் செய்து கொண்டதால் தந்தை சீனிவாசன் மற்றும் உறவினர்கள் அவமானம் அடைந்தனர். இளைய மகள் ஓடிப் போனதால் மூத்த மகள் திருமணம் தடைபடும். சமூகத்தில் தலை குனிவு ஏற்படுமே என்று சீனிவாசன் ஆத்திரத்தில் கொந்தளித்தார்.

    இதனால் ஏதாவது பிரச்சினை வரலாம் என்று கருதி நந்தீஸ் வேலை பார்த்து வந்த கடையின் மேல் தளத்திலேயே வீடு வாடகைக்கு எடுத்து தனது காதல் மனைவியை குடியமர்த்தி இருக்கிறார். பெற்றோருக்கு பயந்து காதல் ஜோடியினர் வாழ்ந்து இருக்கிறார்கள்.

    இந்த நிலையில் கடந்த 10-ந்தேதி பெற்றோர் வீடு தேடி வந்து சமாதானம் பேசி இருக்கிறார்கள். அதை உறுதிப்படுத்தும் வகையில் மாப்பிள்ளைக்கு தங்க மோதிரமும் பரிசு வழங்கி இருக்கிறார்கள்.

    பெற்றோர் மனம் மாறிவிட்டனர் என்று மகிழ்ந்த சுவாதியும் அவரது கணவர் நந்தீசும் அவர்களுடன் காரில் சென்று இருக்கிறார்கள்.

    காரில் உறவினர் வெங்கடேஷ், அஸ்வதப்பா, கிருஷ்ணன், வெங்கட்ராஜ் ஆகியோர் இருந்திருக்கிறார்கள். டிரைவர் சாமிநாதன் காரை ஓட்டி இருக்கிறார்.

    கார் சூடு கொண்டப்பள்ளிக்கு செல்வதற்கு பதில் கர்நாடக மாநிலத்தை நோக்கி சென்று இருக்கிறது. அதைபார்த்ததும் சுவாதி தந்தையிடம் கேட்டுள்ளார்.

    உடனே அவர் அமைதியாக இரு என்று சத்தம் போட்டு இருக்கிறார். ஏதோ நடக்கப்போகிறது என்பதை புரிந்துகொண்ட இருவரும் பயந்து நடுங்கி இருக்கிறார்கள்.

    மாண்டியா மாவட்டத்தில் காட்டுப்பகுதியில் காரை விட்டு இருவரையும் இறக்கி பிரிந்து விடும்படி மிரட்டி இருக்கிறார்கள். ஆனால் இருவரும் அதற்கு சம்மதிக்கவில்லை. சரிபட்டு வரமாட்டார்கள் என்று ஆவேசம் அடைந்த தந்தை மற்றும் உறவினர்கள் இருவரது கை, கால்களையும் கயிற்றால் கட்டி இருக்கிறார்கள்.

    காரில் தயாராக இருந்த அரிவாள், கத்தியை எடுத்து வந்து மிரட்டி இருக்கிறார்கள். பளபளத்த அரிவாள், கத்தியுடன் நிற்பதை பார்த்ததும் நம்மை பலிகொடுத்து விடுவார்கள் என்று பயத்தில் உறைந்து போன காதல் ஜோடி உயிருடன் விட்டு விடும்படி கெஞ்சி இருக்கிறது.

    கை, கால்களில் அரிவாளால் வெட்டி இருக்கிறார்கள். சிறுக சிறுக சித்ரவதை செய்து இருவரையும் கொன்று இருக்கிறார்கள். அப்படியும் ஆத்திரம் அடங்கவில்லை. சுவாதியின் அடிவயிற்றையும் அரிவாளால் வெட்டி சிதைத்து இருக்கிறார்கள். தலையை மொட்டை அடித்து முகத்தையும் சிதைத்து இருவரது உடல்களையும் ஆற்றில் வீசிவிட்டு வீடு திரும்பி இருக்கிறார்கள். நந்தீசையும் அவரது மனைவியையும் காணவில்லை என்றதும் நந்தீசின் தம்பி சங்கர் ஓசூர் டவுன் போலீசில் புகார் செய்து இருக்கிறார்.

    தமிழகத்தில் போலீசார் தேடிக்கொண்டிருந்த போது மாண்டியா மாவட்டத்தில் ஆற்றில் கிடந்த சடலங்கள் பற்றி தகவல் கிடைத்துள்ளது. போலீசார் விசாரித்த போது நந்தீஸ்-சுவாதி கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

    இதையடுத்து சுவாதியின் தந்தை சீனிவாசன், பெரியப்பா வெங்கடேஷ், உறவினர் கிருஷ்ணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களை இன்ஸ்பெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் பெலகாவாடி போலீசார் நேற்று ஓசூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள்.

    ஓசூர் ராம் நகர் பகுதியில் நந்தீஸ்-சுவாதி தங்கி இருந்த வீடு, கடத்தி சென்ற இடம் போன்றவற்றை காட்டினார்கள். அதை கர்நாடக போலீசார் வீடியோவில் பதிவு செய்தனர். பின்னர் 3 பேரையும் கர்நாடகத்துக்கு அழைத்து சென்றனர். இன்று அவர்கள் கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட உள்ளனர். ஏற்கனவே கொலை வழக்கை பெலகாவாடி போலீசார் பதிவு செய்திருந்தனர். இன்று அவர்கள் எஸ்.சி., எஸ்.டி. வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழும் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தலைமறைவாக உள்ள பெண்ணின் பெரியப்பா அஸ்வதப்பா (45), உறவினர் வெங்கட்ராஜ் (25), கார் டிரைவர் சாமிநாதன் (30) உள்ளிட்ட 4 பேரை போலீசார் தேடி வருகிறார்கள். அவர்களை பிடிக்க இன்ஸ்பெக்டர்கள் லட்சுமணதாஸ் (ஓசூர் டவுன்), பெரியசாமி (ஓசூர் அட்கோ), முருகேசன் (பாகலூர்) ஆகியோர் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது என்று ஓசூர் டி.எஸ்.பி. மீனாட்சி கூறினார். தனிப்படை போலீசார் பெங்களூருவில் முகாமிட்டு உள்ளனர். ஆணவக் கொலை செய்யப்பட்டதை தொடர்ந்து நந்தீஸ்-சுவாதி ஆகியோரின் சொந்த கிராமமான சூடுகொண்ட பள்ளியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அங்கு 30க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    அந்த கிராமத்தில் மொத்தம் 90 வீடுகள் உள்ளன. இதில் 55க்கும் மேற்பட்ட வீடுகளை பூட்டி விட்டு கிராம மக்கள் தலைமறைவாகி விட்டனர். மேலும் மீதி உள்ள வீடுகளில் ஆண்கள் யாரும் இல்லை. பெண்கள் மட்டுமே உள்ளனர். #HonourKilling
    ×