search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "judge sudden examination"

    • இதற்கிடையில் நேற்று மாலை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு திடீரென வந்தார்.
    • கோவிலுக்கு வந்து செல்லும் வழிகள், சுற்றுபுறங்கள், மதில் சுவர் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.

    சேலம்:

    சேலம் கோட்டை மாரியம்மன் கோவிலில் அவசர கால வெளியேறும் வழி, அடிப்படை வசதிகள் குறித்து திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

    இதையொட்டி சேலம் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி, சேலம் தாசில்தார் தாமோதரன், சேலம் டவுன் இன்ஸ்பெக்டர் மோகன்பாபு, அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல் ஆகியோர் கடந்த 17-ந் தேதி கூட்டாய்வு மேற்கொண்டனர்.

    இதில் கோவில் அருகாமையில் உள்ள தனியார் கட்டிடம், கோவிலுக்கு சொந்தமான கட்டிடம் என இடிந்து விழக்கூடிய நிலையிலுள்ள அபாயகர கட்டிடங்களை இடித்து அப்புறப்படுத்த சேலம் மாநகராட்சி கமிஷனர் உத்தரவிட்டிருந்தார்.

    நீதிபதி ஆய்வு

    இதற்கிடையில் நேற்று மாலை கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு உயர்நீதிமன்ற நீதிபதி பி.டி.ஆதிகேசவலு திடீரென வந்தார். பின்னர் கோவிலுக்கு வந்து செல்லும் வழிகள், சுற்றுபுறங்கள், மதில் சுவர் ஆகிய பகுதிகளில் அதிரடி ஆய்வில் ஈடுபட்டார்.

    அப்போது அபாயகரமான கட்டிடங்களை நவம்பர் 30-ந் தேதிக்குள் அகற்றி விடுவதாகவும், கிழக்கு புறத்திலிருந்து கோவிலுக்கு வரும் மாநகராட்சி சந்தினையும், பஸ் நிலையத்திலிருந்து கோவிலின் தென் கிழக்கு பகுதிக்கு வரும் மாநகராட்சி பொது சந்தினையும் மீண்டும் கோவிலுக்கு பயன்படுத்தும் வகையில் சீரமைப்பதாகவும் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் சபர்மதி தெரிவித்தார்.

    மேலும் தென்மேற்கு பகுதியிலுள்ள இடிந்து விழும் நிலையிலுள்ள சுற்று சுவரினை சீரமைப்பதுடன், மாநகராட்சி கடைகளை காலி செய்து பஸ் நிலைய பகுதியில் பிரம்மாண்டமான நுழைவு வாயில் அமைத்து அழகுபடுத்தவுள்ளதாகவும், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் எந்திரத்தினை உடனே பயன்பாட்டிற்கு கொண்டு வருவதாகவும் அவர் நீதிபதியிடம் தெரிவித்தார்.

    இதேபோல் மதில் சுவரினையொட்டி பழுதடைந்துள்ள மாநகராட்சி கடைகளை இடித்து அப்புறப்படுத்த உள்ளதாகவும், மதில்சுவரையொட்டி தென்மேற்கு பகுதியில் கட்டப்பட்டு வரும் கழிப்பிடம் கட்டும் பணி நிறுத்தப்பட்டு விட்டதாகவும், அதனை எதிர்புறம் மாற்றி கொள்வதாகவும், கோவிலில் சுற்றுபுற பகுதிகளில் சாலைகளில் கடைகள் வைக்க அனுமதிக்கபடாது எனவும், சுற்றுபுறத்திலுள்ள முறையற்ற கட்டுமானங்களுக்கு அறிவிப்பு வழங்கி நடவடிக்கை மேற்கொள்வதாகவும் மாநகராட்சி செயற்பொறியாளர் பழனிச்சாமி உறுதியளித்தார்.

    இந்த ஆய்வின் போது திருத்தொண்டர்கள் அறக்கட்டளை அறங்காவலர் ராதாகிருஷ்ணன், சேலம் தாசில்தார் தாமோதரன், தலைமை நில அளவர் சுரேஷ் பரமசிவம், டவுன் இன்ஸ்பெக்டர் மோகன் பாபு, அறங்காவலர் குழுத்தலைவர் சக்திவேல், செயல் அலுவலர் அமுதசுரபி உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

    ×