search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jayalalithaa death case"

    • 25 வருடமாக பழகி வந்த சசிகலாவை பணிப்பெண்ணாக மட்டுமே ஜெயலலிதா உடன் அழைத்து சென்றாரே தவிர, ஒருபோதும் மேடை ஏற்றியது கிடையாது.
    • ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரி வாசலில் தவம் கிடந்தேன். ஆனால் பார்க்கவிடவில்லை.

    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக, சட்டசபையில் ஆறுமுகசாமி ஆணையம் தாக்கல் செய்த அறிக்கை தொடர்பாக, ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    ஜெயலலிதாவின் மரணம் குறித்து சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். ஏனெனில் ஆறுமுகசாமி ஆணையமே மேல் விசாரணை தேவை என்று பரிந்துரை செய்து இருக்கிறது. சசிகலாவால் கட்டுப்படுத்தப்பட்ட அ.தி.மு.க. இருந்ததால், அன்றைய காலக்கட்டத்தில் அது சாத்தியமாகவில்லை. அதனால் விசாரணையை முறையாக நடத்துவதற்கும் முன்வரவில்லை. இந்த விவகாரத்தை ஒட்டுமொத்தமாக அரசியல் காய் நகர்த்தலாகத்தான் பார்க்க முடிகிறது. ஜெயலலிதாவின் மரணம் இயற்கையானதா என்பதிலேயே சர்ச்சை எழுந்தது.

    அதில் இருந்து இந்த விவகாரம் விசாரிக்கப்படவில்லை என்பது எனது குற்றச்சாட்டு. அத்தை (ஜெயலலிதா) தனி நபராக வாழ்ந்தபோது, சசிகலாவின் குடும்பம் ஒட்டுமொத்தமாக அவருடன் இருந்தது. ரத்த சொந்தங்களோ, தூரத்து உறவினர்களோ அவருடன் இல்லை. யாரையுமே சசிகலா குடும்பம், ஜெயலலிதாவுடன் நெருங்கவும், கூட இருக்கவும் விடவில்லை. ஜெயலலிதாவை சுற்றிலும் சதித்திட்டம் இருந்ததை கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த சதித்திட்டத்தை எப்படியாவது செயல்படுத்தி இருக்கலாம் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது.

    ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டது முதல் கொடுக்கப்பட்ட தகவல்கள் முன்னுக்குப்பின் முரணாக இருக்கிறது. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட தினத்தன்று எப்போது உடல்நலக்குறைவு ஏற்பட்டது?, தமிழக முதல்-அமைச்சராக இருந்த அவருக்கு மிகப்பெரிய பாதிப்பு இருந்திருந்தால் மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை ஜெயலலிதாவுடன் இருந்த அதிகாரிகளுக்கும், கட்சியை சேர்ந்த அடுத்தக்கட்ட தலைவர்களுக்கும், அவருடன் இருந்த சசிகலா குடும்பத்தினருக்கும் இருக்கிறது. ஆனால் ஜெயலலிதாவுக்கு உடல்நலக்குறைவு இருந்ததாக எந்த இடத்திலும் தெரிவிக்கப்படவில்லை.

    அப்படியிருக்கும்போது, ஜெயலலிதா நல்ல உடல்நலத்துடன் இருந்ததாகத்தான் எடுத்துக்கொள்ள முடியும். அப்படி இல்லை என்றால் உடல்நலக்குறைவு இருந்ததை ஏன் மறைத்தீர்கள்?. ஜெயலலிதாவுக்கு பெரிய நோய்கள் எதுவும் இருந்ததாக சொல்லவில்லை. ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்படுவதற்கு முன்பு வரை முதல்-அமைச்சராக பணியாற்றி இருக்கிறார். அப்படி ஏதாவது இருந்திருந்தால், அதை மக்களுக்கு தெரிவிக்க வேண்டிய கடமை அன்றைக்கு இருந்த அ.தி.மு.க. அரசுக்கும், ஜெயலலிதாவுடன் வசித்த சசிகலா குடும்பத்துக்கும் இருந்தது. 2 பேருமே அதனை செய்ய தவறி விட்டார்கள்.

    ஜெயலலிதா மீது குற்றம் சாட்டப்பட்ட வழக்குகளை சசிகலா குடும்பம் பலவீனமாக கருதியது. அதை மையமாக வைத்து சசிகலா குடும்பம் என்ன செய்தார்களோ, எப்படி பயன்படுத்திக்கொண்டார்களோ தெரியவில்லை. ஒட்டுமொத்தமாக அதிகாரத்தை கையில் எடுத்துக்கொண்டார்கள்.

    25 வருடமாக பழகி வந்த சசிகலாவை பணிப்பெண்ணாக மட்டுமே ஜெயலலிதா உடன் அழைத்து சென்றாரே தவிர, ஒருபோதும் மேடை ஏற்றியது கிடையாது. ஆனால் ஆட்சி அதிகாரம், பதவி மேல் ஆசை இருந்ததை சசிகலா குடும்பமே பல இடங்களில் தெரிவித்து இருக்கிறது.

    ஜெயலலிதாவை சந்திப்பதற்காக ஆஸ்பத்திரி வாசலில் தவம் கிடந்தேன். ஆனால் பார்க்கவிடவில்லை. ஜெயலலிதா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சசிகலா அதிகார மையமாக மாறிவிட்டார்.

    ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட பின்னர்தான் ஜெயலலிதாவின் உயிர் பிரிந்ததா? அல்லது அதற்கு முன்பே பிரிந்துவிட்டதா? என்பதில் சர்ச்சைகளும், சந்தேகமும் இருக்கிறது. இது ஒட்டுமொத்த தமிழக மக்களின் சந்தேகமாக இருக்கிறது. முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவை, போலீசாரின் உதவி இல்லாமலும், யாரிடமும் தெரிவிக்காமலும் சசிகலாவும், அவர் உடன் இருந்தவர்களும் ஆம்புலன்சில் அழைத்து சென்றது ஏன்?. எந்த மாதிரியான உடல்நலக்குறைவு அவருக்கு இருந்தது?. என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?.

    வெளிநாட்டு சிகிச்சைக்கு செல்வதை தடுத்தது யார்? ரத்த உறவுகளான என்னிடமும், தீபக்கிடமும் (தீபாவின் சகோதரர்) தெரிவிக்காமல் தன்னிச்சையாக முடிவு எடுத்தது யார்? என்ற பல சந்தேகங்கள் இருக்கிறது. எனவே இந்த விவகாரத்தை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×