search icon
என் மலர்tooltip icon

  நீங்கள் தேடியது "internet problem"

  பொது இடங்களில் இருக்கும் வை-பைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வை-பையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன.
  வை-பை இல்லாத வாழ்க்கையை இப்போது நினைத்துப் பார்க்க முடிவதில்லை. ‘எங்கெங்கு காணினும் வை-பையடா’ என்னும் அளவுக்கு விமான நிலையங்கள், ரெயில்வே நிலையங்கள், பேருந்து நிலையங்கள், ஓட்டல்கள், உணவு விடுதிகள் என எல்லா இடங்களிலும் வை-பை வசதிகள் இருக்கின்றன. பொது இடங்களில் இருக்கும் வை-பைகள் பாதுகாப்பானவை அல்ல என்பது நாம் அறிந்ததே. அதனால் தான் பொது இடங்களிலுள்ள வை-பையைப் பயன்படுத்த வேண்டாம் என்று எச்சரிக்கைகள் தொடர்ந்து விடுக்கப்படுகின்றன. அப்படியே பயன்படுத்தினாலும், அதைக்கொண்டு முக்கியமான வங்கிப் பரிவர்த்தனைகள் போன்றவற்றை நடத்தக் கூடாது.

  பொது இடங்களிலுள்ள வை-பையை எக்காரணம் கொண்டும் ‘ஆட்டோ கனெக்ட்’ மோடில் சேமிக்கக் கூடாது. அதுபோல பொது இட வை-பைகளைப் பயன்படுத்திய பின்னர் நமது பிரவுசர்களில் இருக்கின்ற குக்கிகளையும், ஹிஸ்டரியையும் முழுதாக அழித்து விடவேண்டும்.

  பொது இடங்களில் இருக்கின்ற வை-பைகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது எனும் புரிதல் இப்போது பெரும்பாலானவர்களுக்கு உண்டாகி இருக்கிறது. எனவே அதற்குரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர்கள் எடுத்து விடுகின்றனர். ஆனால் வீட்டில் வந்து வை-பையை இணைக்கும் போது, ‘ஆஹா இது நமக்கே நமக்கான வை-பை. இதில் யாரும் நுழைய முடியாது’ எனும் இறுமாப்புடன் வேலையைத் தொடங்குவோம். அதற்கு அச்சாரமிடும் வகையில் வீட்டுக்குள் நாம் நுழையும் முன் நம்முடைய போன்கள் ஆட்டோமேட்டிக்காக வை-பையுடன் இணைந்து விடுகின்றன‌. லேப்டாப், டேப்லெட் என எல்லாமே எப்போதும் வை-பையுடன் இணைந்து தான் இருக்கின்றன.

  ‘இதுவும் பாதுகாப்பு இல்லையப்பா’ என நம்முடைய நம்பிக்கையின் உச்சந்தலையில் சுத்தியல் கொண்டு அடித்துச் சொல்கிற விஷயம் தான் இந்த வை-ஜாக்கிங். அதாவது நாம் பாஸ்வேர்ட் கொடுத்து பாதுகாப்பாக வைத்திருக்கின்ற நமது வை-பை கூட மிக எளிதான தாக்குதலுக்கு உள்ளாகலாம் என்பதே வை-ஜாக்கிங் சொல்கிற செய்தி. நமது வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கின்ற நபர்கள் நினைத்தால் நமது வீட்டிலுள்ள வை-பைக்குள் நுழைய முடியும். நமது வீட்டு வை-பையை அவர்கள் விருப்பம் போல பயன்படுத்த முடியும் என்பது தான் ஆரம்ப அதிர்ச்சி.

  ‘எனக்கு தான் ஆயிரம் ஜி.பி. லிமிட் இருக்கே, அடுத்த வீட்டுக்காரர் கொஞ்சம் எடுத்துட்டு போகட்டும்’ என சும்மா இருந்து விட முடியாது. வீட்டுக்குள் நுழையும் திருடன் கொஞ்ச நேரம் ஓய்வெடுத்து விட்டு போவதில்லை. கையில் கிடைப்பதையெல்லாம் சுருட்டி எடுத்துக் கொண்டு தான் போவான். அதே போல, நமது நெட்வொர்க்குக்குள் ஒருவர் நுழைந்து விட்டால் நமது கணினி, மொபைல் என நம்மை சுற்றி இருக்கும் கருவிகளில் இருக்கின்ற அத்தனை தகவல்களையும் திருடி செல்லும் வாய்ப்புகள் உண்டு.

  இப்போதெல்லாம் நம்முடைய பரம ரகசிய விஷயங்கள் கூட மொபைலிலோ, கணினியிலோ தான் ஓய்வெடுக்கும். நமது நெட்வொர்க்கிற்குள் நுழைகின்ற நபரிடம் நமது வங்கிக் கணக்கின் விவரங்கள், பாஸ்வேர்ட் போன்றவை கிடைத்தால் நமது வங்கியை துடைத்து சுத்தம் செய்து விடுவார்கள். அதே போல தனிப்பட்ட விஷயங்களைத் திருடிக் கொண்டால் அதன் மூலம் நமக்கு தேவையற்ற மன உளைச்சலோ, பெரும் நஷ்டமோ உருவாக்கலாம்.

  இது எப்படி நடக்கிறது ? நாம் வீடுகளில் பயன்படுத்துகின்ற பிரவுசர்களில் ‘பாஸ்வேர்ட்’ ஆட்டோ சேவ் ஆக இருக்கும். அதாவது ஒருமுறை கடவு சொல் கொடுத்து திறந்தால் போதும், அடுத்த நொடியே நம்முடைய கடவு சொல்லை சேமித்து வைத்துக்கொள்ளட்டுமா..? என்ற சலுகை திரையில் தோன்றும். நாமும் நம்முடைய சவுகரியத்திற்காக, அத்தகைய ஆட்டோ சேவ் சலுகையை பயன்படுத்தியிருந்தால்.... அதில் நம்முடைய கணக்கு விவரங்களும், கடவுசொல் விவரங்களும் பிரவுசரில் சேமிக்கப்பட்டிருக்கும்.

  இதற்கும் நமது வீடுகளில் இருக்கும் மோடத்திற்கும் இடையேயான தகவல் பரிமாற்றம் ‘அன்.என்கிரிப்டர் ஹைச்.டி.டி.பி’ அதாவது ‘குறியீடுகளாய் மாற்றப்படாத நேரடியான தகவல் பரிமாற்றமாய்’ இருக்கும். நமது மோடத்தையும், நமது மொபைல் மற்றும் கணினியையும் ஆட்டோமேட்டிக்காக இணைக்கும் ‘இன்டர்நெட் பாஸ்வேர்ட்’ தகவல்களும் இப்படி பாதுகாப்பில்லாமல்தான் இருக்கின்றன.

  இந்த பிரவுசர் ‘ஆட்டோசேவ்’ மற்றும் ‘அன்.என்கிரிப்டட்’ தகவல் பரிமாற்றம் இரண்டும் சேர்ந்து தான் நமது வை-பை இணைப்பை வலுவிழக்க வைக்கின்றன. இதைப் பயன்படுத்தி வெளியிலிருக்கும் ஒருவர் நமது கணினியில் ஒரு பிரவுசரை லோடு செய்யவும், அதன்மூலம் நமது இணைய பாஸ்வேர்ட் தகவல்களை பிறருக்கு அனுப்பி வைக்கவும் முடியும். மிக எளிய வகையில் இந்த ஹேக்கிங் நடக்கும். அது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.  ஸ்யூயர் கிளவுட் நிறுவனத்தின் ஆராய்ச்சியாளரான எலியட் தாம்சன் என்பவர் இந்த அச்சுறுத்தலை முதன் முதலாய் கண்டுபிடித்துச் சொன்னது கடந்த மார்ச் மாதம்தான். பல மாதங்களுக்குப் பிறகு இப்போது அந்த வை-ஜாக்கிங்கின் வீரியம் நிறுவனங்களுக்கும், மக்களுக்கும் புரிய ஆரம்பித்திருக்கிறது. சில நிறுவனங்கள் தங்களுடைய பிரவுசர்களிலுள்ள ஆட்டோ சேவ் ஆப்ஷனை விலக்க முடிவு செய்திருக்கின்றன.

  இந்த வை-ஜாக்கிங் நடக்க வேண்டுமெனில் சில விஷயங்கள் நடந்திருக்க வேண்டும். அவற்றை அறிந்து கொள்வது நாம் பாதுகாப்பாக இருக்க உதவும்.

  முதலில் நமது வை-பை ஆன் நிலையில் இருக்கும் போது தான் இந்த தாக்குதல் நடக்கும். இரண்டாவது, நாம் முன்பு எப்போதாவது வேறு ஒரு பொது வை-பையில் இணைந்திருக்க வேண்டும். அது ‘ஆட்டோ ரிகனக்ட் ஆப்ஷனில்’ இருக்க வேண்டும். மூன்றாவது குரோம், ஓப்பேரா போன்ற பிரவுசர்களைப் பயன்படுத்தியிருக்க வேண்டும். நான்காவது, நமது போனில் வை-பை தானாக இணையும் விதத்தில் இருக்க வேண்டும். இவை எல்லாமே சர்வ சாதாரணமாய் இருக்கக் கூடிய விஷயங்கள். எனவே தான் இந்த அச்சுறுத்தல் பற்றிய விழிப்புணர்வு நமக்கு அவசியமாகிறது.

  சரி, இதிலிருந்து தப்பிப்பது எப்படி?

  1. ‘இன்காக்னிடோ மோடு’ தெரியுமா ? பிரவுசரில் உள்ள ஒரு ஆப்ஷன் இது. இதில் நுழைந்தால் நமது பாஸ்வேர்ட் போன்ற தகவல்கள் சேமிக்கப்படாது. அதைப் பயன்படுத்துவது பாதுகாப்பானது. இதை பிரைவேட் பிரவுசிங் என்றும் சொல்வார்கள்.

  2. பழைய வெர்ஷன் பிரவுசர்களையெல்லாம் மாற்றி புதியவற்றை இன்ஸ்டால் செய்யுங்கள். அல்லது பிரவுசரின் புது வெர்ஷனை இன்ஸ்டால் செய்யுங்கள்.

  3. உங்களுடைய எல்லா பிரவுசர்களில் இருந்தும் ஹிஸ்டரி (தேடல் வரலாறு), குக்கீஸ் போன்றவற்றை அழியுங்கள்.

  4. நெட்வொர்க் ஆட்டோகனெக்ட் ஆப்ஷனை அழித்து விடுங்கள்.

  5. பொது இட வை-பைகளைத் தவிருங்கள்.

  6. ‘பர்சனல் பயர் வால்’ எனப்படும் பாதுகாப்பு வளையத்தை உங்களுடைய வீட்டு நெட்வொர்க்கிலும் இணையுங்கள்.

  7. வை-பை மோடத்தை சுவர் அருகிலோ, ஜன்னல் அருகிலோ வைக்காமல் வீட்டிற்கு உள்ளே வையுங்கள். வெளியிட இணைப்பு அச்சுறுத்தலை அது கொஞ்சம் குறைக்கும்.

  8. ரொம்ப பாதுகாப்பு அவசியமெனில் வி.பி.என். பயன்படுத்தலாம். நெட்வொர்க்கை அது அதிக பாதுகாப்பு உடையதாக்கும்.

  9. உங்கள் வை-பை ரவுட்டரை பரிசோதியுங்கள். செக்யூர்ட், என்கிரிப்டட் நிலையில் அது இல்லையேல் மாற்றுங்கள்.

  10. இவ்வளவும் செய்தபின் உங்களுடைய நெட்வொர்க் பாஸ்வேர்டை உடனடியாக மாற்றுங்கள். ஏற்கனவே உங்கள் வை-பையை யாரேனும் கவர்ந்திருந்தால் பாஸ்வேர்டு மாற்றுவது ஒன்றே வழி.

  கட்டுரையாளர்: சேவியர்
  ×