search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "indicates change"

    அமெரிக்காவின் அட்டார்னி ஜெனரல் ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டார். மந்திரிசபையிலும் ஒரு வாரத்தில் மாற்றம் செய்யப்போவதாக ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். #DonaldTrump #JeffSessions
    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் கடந்த 6-ந்தேதி நடந்த நாடாளுமன்ற தேர்தல், ஜனாதிபதி டிரம்பின் 2 ஆண்டு பதவி காலத்துக்கான கருத்து வாக்கெடுப்பாக அமையும் என கருதப்பட்டது. எனவே இந்த தேர்தல் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் நாடாளுமன்ற கீழ்சபையான பிரதிநிதிகள் சபையை எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி கைப்பற்றி விட்டது. 435 இடங்களை கொண்ட அந்த சபையில், முடிவு அறிவிக்கப்பட்ட 420 இடங்களில் அந்த கட்சிக்கு 223 இடங்கள் கிடைத்தன. டிரம்பின் குடியரசு கட்சி 197 இடங்களுடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.



    அதே நேரத்தில் மேல்சபையான செனட் சபையை குடியரசு கட்சி தக்க வைத்துக்கொண்டது. 33 இடங்களுக்கு நடந்த தேர்தலில் 3 இடங்களுக்கு முடிவு வர வேண்டி உள்ளது. அறிவிக்கப்பட்ட முடிவுகளைத் தொடர்ந்து குடியரசு கட்சியின் பலம் 51 ஆகவும், ஜனநாயக கட்சியின் பலம் 44 ஆகவும், மற்றவர்களின் பலம் 2 ஆகவும் உள்ளது.

    இந்த நிலையில் அந்த நாட்டின் அட்டார்னி ஜெனரல் (அரசு தலைமை வக்கீல்) ஜெப் செசன்ஸ் திடீரென நீக்கப்பட்டார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி டிரம்புக்கு அனுப்பிவைத்தார்.

    அதில் அவர், “நீங்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க என் ராஜினாமாவை சமர்ப்பிக்கிறேன்” என அவர் கூறி உள்ளார்.

    இதில் இருந்து அவர் தாமாக பதவி விலகவில்லை, டிரம்பின் உத்தரவுப்படியே அவரது விலகல் அமைந்துள்ளது என்பது தெளிவாகிறது. மேலும் அவர், “நான் அட்டார்னி ஜெனரல் பதவி வகித்த கால கட்டத்தில் நாங்கள் சட்டத்தின் ஆட்சியை மீட்டு, நிலை நிறுத்தி உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.

    ஜெப் செசன்ஸ் பதவி விலகலுக்கு நன்றி தெரிவித்து டிரம்ப் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர், “ ஜெப் செசன்சின் சேவைக்காக நாங்கள் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். அவருக்கு நல்வாழ்த்துக்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

    அதே நேரத்தில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சியின் மூத்த தலைவரும் செனட் சபையின் எதிர்க்கட்சி தலைவருமான சூக் ஸ்கூமர், “இதில் நிச்சயமாக ஜனாதிபதி எதையோ மறைக்கிறார்” என கூறி உள்ளார்.

    2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க தேர்தலில் ரஷிய தலையீடு தொடர்பான விசாரணையில் இருந்து ஜெப் செசன்ஸ் கடந்த ஆண்டு மார்ச் மாதம் விலகிக்கொண்டதில் இருந்து, டிரம்பின் விமர்சனத்துக்கு ஆளாகி வந்தார். ஜெப் செசன்ஸ் மிகவும் பலவீனமானவர் என கூறி வந்தார்.

    இந்த நிலையில் இப்போது ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் தற்காலிகமாக மேத்யூ விட்டேகர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அமெரிக்க தேர்தலில், ரஷிய தலையீடு தொடர்பான ராபர்ட் முல்லர் குழுவின் விசாரணையை குறை கூறி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    ஜெப் செசன்ஸ் நீக்கப்பட்டுள்ள நிலையில், உள்துறை மந்திரி ரியான் ஸிங்கே மாற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதே போன்று வாஷிங்டன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் சாரா சாண்டர்ஸ் பதவியும் தொங்கலில் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஏற்கனவே ஐ.நா.சபைக்கான அமெரிக்க தூதர் நிக்கி ஹாலே பதவி விலகி அந்த இடம் காலியாக உள்ளது.

    இந்த நிலையில் அமெரிக்க மந்திரிசபையில் ஒரு வார காலத்தில் மாற்றம் இருக்கும் என்று டிரம்ப் உணர்த்தி உள்ளார். இது தொடர்பாக அவர் நேற்று முன்தினம் வாஷிங்டனில் நிருபர்களிடம் பேசுகையில், “அநேகமாக ஒரு வார காலத்தில் நிர்வாகத்தில் மாற்றங்கள் கொண்டு வர எண்ணி இருக்கிறேன். மந்திரி சபை உள்பட நிறைய மாறுபட்ட அம்சங்களை பார்க்க வேண்டியது இருக்கிறது. எனது மந்திரிசபையில் இடம் பெற்றுள்ளவர்கள் மீது மகிழ்ச்சி அடைந்துள்ளேன். ஆனாலும் பல்வேறு நிலைகளில் மாறுபட்ட நபர்களை அமர்த்த வேண்டியதிருக்கிறது. இத்தகைய மாற்றங்கள், இடைக்கால தேர்தலுக்கு பின்னர் மிகவும் இயல்பான ஒன்றுதான்” என கூறினார்.

    எனவே ஒரு வார காலத்தில் டிரம்ப் மந்திரிசபையில் மட்டுமல்லாது, வெள்ளை மாளிகையிலும் முக்கிய மாற்றங்களை எதிர்பார்க்கலாம். 
    ×