search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indian Council of Medical Research"

    • கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.
    • மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை பெய்யத் தொடங்கியபோது, அங்கு டெங்கு உள்ளிட்ட பல்வேறு காய்ச்சல் பரவியது. காய்ச்சல் பாதிப்புக்குள்ளான ஆயிரக்கணக்கானோர் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றனர்.

    இந்நிலையில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவியது.நிபா வைரஸ் பாதித்து 2 பேர் அடுத்தடுத்து பலியாகினர். அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் சிலருக்கும் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

    அவர்கள் உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதனால் கேரள மாநிலம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டது. நிபா தொற்று பரவலை கட்டுப்படுத்த கோழிக்கோடு மாவட்டத்தில் சுகாதாரத் துறையினர் முகாமிட்டனர்.

    அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் தொடர்ந்து கண்காணித்தனர். அந்த பகுதிகளில் நோய் தடுப்பு நடவடிக்கையாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதனால் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் தொற்று பாதிப்பு கட்டுப்படுத்தப்பட்டது.

    புதிதாக யாருக்கும் தொற்று பாதிப்பு ஏற்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே, அங்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் படிப்படியாக தளர்த்தப்பட்டன. கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவ என்ன காரணம் என்பதை கண்டறியும் பணியில் மத்திய குழுவினர் ஈடுபட்டிருந்தனர்.

    அவர்கள் தொற்று பாதித்த பகுதிகளில் இருந்த தோட்டங்களில் தங்கியிருக்கும் வவ்வால்களின் மாதிரிகளை சேகரித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலுக்கு பரிசோதனைக்கு அனுப்பி இருந்தனர். மொத்தம் 12 வவ்வால்களின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டன.

    அவற்றில் சில வவ்வால்களுக்கு நிபா வைரஸ் தொற்று இருந்தது கண்டறியப்பட்டது. இதனால் வவ்வால்கள் மூலமாகவே கோழிக்கோட்டில் நிபா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

    இது குறித்து கேரள மாநில சுகாதாரத்துறை மந்திரி வீணா ஜார்ஜ் கூறும்போது, "கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பரவியதற்கு வவ்வால்கள் தான் காரணம் என்பது உறுதியாகி உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அதனை உறுதிப்படுத்தி மின்னஞ்சல் அனுப்பி உள்ளது" என்று தெரிவித்தார்.

    ×