search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "half girlfriend relationship"

    பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது.
    இது ஒரு புது கலாசாரம். 18 முதல் 30 வயது வரையுள்ள ஆண்களும், பெண்களும் பல வருடங்களாக ஒன்றாகப் பழகிக்கொண்டிருக்கிறார்கள். நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கிறது, அவர்கள் வாழ்க்கை. ஆனால் அப்படிப்பட்ட சிலரிடம், ‘நீங்கள் நண்பர்களா?’ என்று கேட்டால், இல்லை என்கிறார்கள். ‘காதலர்களா?’ என்று கேட்டால், அதற்கும் இல்லை என்றுதான் பதில் தருகிறார்கள். ‘அப்படியானால் உங்கள் நட்பிற்கும், பழக்கத்திற்கும் என்ன பெயர்?’ என்று கேட்டால், பதில் சொல்லத் தெரியாமல் சிரிக்கிறார்கள். ஆனால் அப்படி ஜோடியாக பழகும் அவர்கள் இருவரும், காதல் ஜோடியைவிடவும் நெருக்கமான தம்பதிகளைவிடவும் மிக அதிகமான அளவு தனிப்பட்ட விஷயங்களை பகிர்ந்துகொள்கிறார்கள். ஒருவருக்கொருவர் உதவிக்கொள்கிறார்கள். அந்தரங்கமான தகவல்களைக்கூட அலசிக்கொள்கிறார்கள்.

    ‘சரி, பெயர் சூட்டப்படாத இந்த புதிய கலாசார நட்பில் எல்லாம் நன்றாகத்தானே போய்க்கொண்டிருக்கிறது. இதை பற்றி நாம் கவலைப்பட வேண்டியதில்லையே’ என்று நிம்மதி பெருமூச்சு விட முடியவில்லை. ஏனென்றால், இத்தகைய நட்பை விட்டு விலக முடியாமலும்- காதலராகவோ, கணவராகவோ அங்கீகரித்து வாழ்க்கையில் சேர்க்க முடியாமலும் பல பெண்கள் தவித்துக்கொண்டிருக்கிறார்கள். அந்த தவிப்பு அவர்கள் பணிசார்ந்த எதிர்காலத்தையும், (திருமணம் போன்ற) வாழ்க்கை சார்ந்த எதிர்காலத்தையும் பாதிக்கிறது என்பதுதான் இப்போதைய பிரச்சினை.

    பல ஜோடிகள் ‘நாங்கள் நண்பரும் இல்லை.. காதலர்களும் இல்லை.. அதற்கும் மேலான உறவு..” என்று அவர்கள் சொல்லிக்கொள்கிறார்கள். இத்தகைய நட்புக்கு அவரவருக்கு தக்கபடி பெயர் சூட்டிக்கொள்கிறார்கள். இவர்களில் பெரும்பாலான ஆண்கள், தங்கள் தோழியை ‘ஹாப் கேர்ள் பிரெண்ட்’ என்கிறார்கள். பெண்கள், தங்கள் தோழர்களை ‘ஹாப் பாய் பிரெண்ட்’ என்றழைக்கிறார்கள். இப்படிப்பட்ட பாதி காதலர்களின் எண்ணிக்கை மிக அதிகமாகிக்கொண்டிருக்கிறது.

    இவர்கள் வயதைக் கடந்தும், பருவத்தை கடந்தும் நட்பு பாராட்டி வருகிறார்கள். 18 வயது முதல் 70 வயது வரை இப்படிப்பட்ட நண்பர்கள் இருக்கிறார்கள். இத்தகைய ‘பாதி தோழி கலாசாரம்’ பெண்களுக்கு பாதிப்பைதான் ஏற்படுத்துகிறது என்பதை சமூகம் புரிந்துகொள்ளவேண்டும். நட்பு அதன் எல்லையோடு நட்பாக மட்டும் இருக்க வேண்டும்.

    விழிப்பாக இருப்பது எப்படி?

    இதுபோன்ற உறவுகளில் இருப்பவர்களை அலசி ஆராய்ந்தபோது, இந்த நட்பால் அவர்களுக்கு ஓரளவு பலன் இருந்தாலும், பாதிப்புகள் அதிகம் இருக்கின்றன. அதனால் இதுபோன்ற உறவுகளில் விழிப்பாக இருப்பது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.

    பள்ளிக்காலத்தில் இருந்தே ஆண்கள்- பெண்களோடும், பெண்கள் - ஆண்களோடும் சகஜமாக நட்பு பாராட்டத் தொடங்கவேண்டும். அப்படி நட்பு பாராட்டினால் நட்பு பற்றியும், நண்பர்கள் பற்றியும் நல்ல அனுபவங்கள் கிடைக்கும். அதன் மூலம் எதிர்காலத்தில் நட்புக்கு எல்லை வகுத்துக்கொள்ள வாய்ப்பு கிடைக்கும்.



    பள்ளிக்காலத்திலே எதிர்பாலினரிடம் நட்பு பாராட்ட முடியாதவர்கள் கல்லூரி காலத்திலோ அல்லது பணிபுரியும் காலத்திலோ, தன்னை உணர்ந்த நண்பர் என்று ஒருவரை தேர்ந்தெடுத்து அவரிடம் அளவுக்கு மீறிய நிலையில் பழகும்போது, அது இத்தகைய நட்பாகிவிடுகிறது. (பள்ளிக் காலத்திலே ஆண், பெண் நட்பை சகஜமாக எதிர்கொள்வது இதற்கு நல்ல தீர்வு)

    பெற்றோரிடம் மனம்விட்டுப் பேசும் வழக்கம் இல்லாதவர் களிடமும், பிரிந்திருக்கும் பெற்றோர்களிடம் வளருகிறவர்களிடமும், தங்கள் எதிர்காலத்தை பற்றிய கவலை இருக்கும். எதிர்காலம் நிச்சயமற்றதாகவும், பாதுகாப்பாற்றதாகவும் இருப்பதாக கருதும் அவர்களிடம் தன்னம்பிக்கை குறையும். அப்போது அவர்களுக்கு தன்னம்பிக்கையூட்டுகிறவர், பாதுகாப்பு அளிக்கத் தகுதியானவர் என்று கருது பவர்களிடம் இத்தகைய நட்பை உருவாக்கிக்கொள்கிறார்கள். (பெற்றோர்களிடம் மனம்விட்டுப்பேசுவதும், அவர்கள் மூலம் பாதுகாப்பு கிடைப்பதும் இதற்கு நல்ல தீர்வு)

    ஒவ்வொரு ஆணின் வாழ்க்கையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்க்கையிலும் குறிப்பிடும்படியான ரகசியங்கள் இருக்கவே செய்யும். இப்படிப்பட்ட ‘பாதி பெண் தோழிகள்’ உறவில் இருக்கும்போது பெரும்பாலான பெண்கள் தங்கள் சிறுவயது பாலியல் கசப்புகள் முதல் குடும்ப ரகசியங்கள் வரை அனைத்தையும் ஆண் நண்பர்களிடம் பகிர்ந்துகொள்கிறார்கள். அந்த அந்தரங்க பகிர்வுகள் எதிர்காலத்தில் அந்த பெண்களுக்கு சிக்கலை ஏற்படுத்துகிறது. (அதனால் இத்தகைய உறவில் இருக்கும் பெண்கள், நண்பர்களிடம் எதை பேசவேண்டுமோ அதை மட்டும் பேசுங்கள்)

    நண்பர், காதலர், கணவர் என்ற ஒவ்வொரு உறவுக்கும் வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஒரு நண்பரால் நல்ல காதலராகவும், சிறந்த கணவராகவும் ஆக முடியும். அப்படி படிப் படியாக அந்த உறவை உயர்த்திச் செல்ல தைரியம் வேண்டும். அதிக தன்னம்பிக்கையும் அவசியம். ஆனால் இந்த ஹாப் கேர்ள் பிரெண்ட், ஹாப் பாய் பிரெண்ட் போன்றவர்கள் அந்த அளவுக்கு தைரியம் இல்லாதவர்கள். அதே நேரத்தில் அந்த ஆண், நண்பர் என்ற பெயரை வைத்துக்கொண்டு காதலராகவும், கணவராகவும் மறைமுகமாக செயல்பட அவர் விரும்புவார். அதற்கு ஒத்துழைக்காவிட்டால் பிரச்சினையை உருவாக்குவார். (அதனால் இப்படிப்பட்ட நண்பர் களிடம் எப்போதும் விழிப்பாக பழகுங்கள்)

    இப்படி நண்பர்களாக பழகும் பெண்களில் பலர், தனது நண்பனை உயிருக்கும் மேலாக கருதுகிறார்கள். இதனால் அவர்களது சொல்படி நடந்து பெற்றோர்களை கூட பகைத்துக்கொள்கிறார்கள். (எந்த நண்பனும், பெற்றோருக்கு நிகரில்லை என்பதை பெண்கள் புரிந்து கொள்ளவேண்டும்.

    இத்தகைய நட்பில் இருக்கும் ஆண்களும், பெண்களும் திருமணத்தை தள்ளிப்போடுகிறார்கள். பின்பு இந்த நட்பில் இருக்கும் ஆண், இன்னொரு பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்போது, அவருடன் நட்பில் இருக்கும் பெண்ணுக்கு திருமண வயது கடந்து போயிருக்கும். அதன் பின்பு அவள் எதிர்பார்த்ததுபோல் அவளுக்கு வரன் அமையாது. பின்பு ஏதாவது ஒருவர் கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்கு தள்ளப்பட்டுவிடுவாள். அப்போது அவளுக்கு வாழ்க்கை ஏமாற்றமாகிவிடும். (தனக்கு எப்படிப்பட்ட நண்பர் இருந்தாலும் வாழ்க்கைக்கு கணவர் தேவை என்பதை பெண்கள் புரிந்து நட்பு பாராட்டவேண்டும். சரியான பருவத்தில் தகுதியானவரை திருமணம் செய்துகொள்ள வேண்டும்).

    - விஜயலட்சுமி பந்தையன்.
    ×