search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "girls died"

    • ஆலங்குளம் அருகே மர்ம காய்ச்சலால் 2 சிறுமிகள் பலியாகினர். இதையடுத்து மர்ம காய்ச்சல் பரவும் கிராமத்தில் சுகாதார குழுவினர் முகாமிட்டு வீடு, வீடாக சென்று பரிசோதனையில் ஈடுபட்டனர்.
    • காய்ச்சல் காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    ஆலங்குளம்:

    தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள காசிநாதபுரம் கிராமத்தில் கடந்த சில நாட்களாக மர்ம காய்ச்சல் பரவி வந்தது. இந்த காய்ச்சல் காரணமாக சுமார் 20-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டது.

    இதில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த சுப்ரியா(8), பூமிகா(6) ஆகிய 2 சிறுமிகள் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதனால் அங்கு சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்துறை அதிகாரிகள் விரைந்து சென்று மர்ம காய்ச்சலுக்கான காரணம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

    மேலும் சுகாதார குழுவினர் அங்கு முகாமிட்டு சுகாதார பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று காலை முதலே அங்குள்ள குடிநீர் தொட்டிகள், உறைகிணறுகள் உள்ளிட்டவற்றை ஆய்வு செய்தனர்.

    அதில் குடிநீர் தொட்டிகளில் புழுக்கள், லார்வாக்கள் அதிக அளவில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அந்த தண்ணீரை வினியோகம் செய்ய தடைவிதித்து நீரை வெளியேற்ற அறிவுறுத்தினர்.

    தொடர்ந்து அங்கு காய்ச்சல் முகாம்கள் நடத்தி சிறிய குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை பரிசோதனை செய்யப்பட்டது. இன்றும் 2-வது நாளாக சுகாதாரத்துறையினர் அங்கு காய்ச்சல், சளி பரிசோதனைகளை நடத்தி வருகின்றனர்.

    அதில் சுமார் 15-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு காய்ச்சல் இருந்தது. அவர்களை தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுகாதாரத்துறையினர் கூறுகையில், கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகள் காசிநாதபுரம் கிராமத்தில் நடைபெற்று வருகிறது.

    இதனால் குடிநீர் சப்ளை 25 நாட்களாக நிறுத்தப்பட்டு விட்டது. குடிநீர் இல்லாததால் பொதுமக்கள் குழாய் உடைப்புகளில் இருந்து வெளியேறும் நீரை குடித்துள்ளனர்.இதனால் காய்ச்சல் அதிகரித்துள்ளது.

    தற்போது 11 குழந்தைகளுக்கு பாதிப்பு கண்டறிப்பட்டு உள்ளது. அவர்களில் 9 பேருக்கு லேசான காய்ச்சல் பாதிப்பு தான். 2 பேர் மட்டுமே ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

    அவர்களுக்கு டெங்கு காய்ச்சல் இல்லை. இறந்த 2 குழந்தைகளின் உடலில் இருந்து மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு உள்ளது.

    வழக்கமாக சுகாதாரத்துறையை சேர்ந்த பணியாளர்கள் இந்த கிராமத்தில் வாரத்திற்கு ஒருமுறை வீடு வீடாக சென்று பொதுமக்கள் பயன்படுத்தும் தண்ணீரை ஆய்வு செய்வார்கள்.

    சமீப காலமாக பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக அவர்கள் ஆய்வு செய்ய 10 நாட்களுக்கு ஒருமுறை தான் சென்றார்கள்.

    இதனால் தற்போது 40 பேர் கொண்ட குழு கிராமத்தில் முகாமிட்டு ஆய்வு செய்து வருகிறது. விரைவில் சுகாதார பணிகள் முழுமையாக மேற்கொள்ளப்படும் என்றார்.

    ×