search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Former soldier"

    கண்ணமங்கலம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் 1 கிலோ வெள்ளிப்பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை திருடிச்சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள காட்டுக்காநல்லூர் காலனியை சேர்ந்தவர் அன்பழகன் (வயது 52). முன்னாள் ராணுவவீரர். இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் வணிக தொடர்பாளராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவி வரலட்சுமி ஆசிரியையாக உள்ளார். இவர்களுக்கு அனுஷா என்ற மகளும், அவினாஷ் என்ற மகனும் உள்ளனர். அவினாஷ் பெங்களூருவில் தங்கி வேலைபார்த்து வருகிறார்.

    அன்பழகன் தனது மனைவி மற்றும் மகளுடன் 2 நாட்களுக்கு முன்பு அவினாசை பார்க்க பெங்களூருவுக்கு சென்றார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீடு திரும்பினர். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருட்கள் மற்றும் ரூ.25 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றது தெரியவந்தது. மேலும் வீட்டில் இருந்த சில ஆவணங்களையும் மர்மநபர்கள் திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

    இது குறித்து கண்ணமங்கலம் போலீஸ் நிலையத்தில் அன்பழகன் புகார் அளித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தடய அறிவியல் துறையை சேர்ந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தர்ராஜும் அங்கு வந்து கதவு மற்றும் பீரோவில் பதிவாகியிருந்த மர்மநபர்களின் கைவிரல் ரேகைகளை பதிவு செய்தார்.

    அதன் அடிப்படையில் திருட்டுசம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகள் பழைய குற்றவாளிகளா? என்ற கண்ணோட்டத்தில் போலீசார் விசாரணை நடத்தி அவர்களை பிடிக்க நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
    சேலத்தில் முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் தன்னை கருணை கொலை செய்ய போலீஸ் கமிஷனரிடம் கூறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    சேலம்:

    சேலம் அம்மாப்பேட்டை கிருஷ்ணன்நகர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன் (வயது 85). இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். வயது முதிர்வு மற்றும் நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

    தற்போது நடக்க முடியாமல் ஊன்றுகோல் உதவியுடன் வாழ்கையை ஓட்டி வருகிறார். மேலும் இவரை உறவினர்கள் யாரும் கவனிக்கவில்லை என தெரிகிறது. இதனால் வாழ்வதை விட சாவதே மேல் என கிருஷ்ணன் முடிவு செய்தார்.

    இது குறித்து மனு கொடுப்பதற்காக இன்று காலை அவர் காரில் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார். அங்கு பொதுமக்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்திற்கு நேராக காரில் சென்றார். அங்கு வரவேற்பு அறையில் இருந்த போலீசார், அவரை பத்திரமாக அழைத்து சென்று அங்கு போடப்பட்டுள்ள நாற்காழியில் உட்கார வைத்தனர். அவரிடம் போலீசார், ஏன்? என்ன வி‌ஷயம்? என விசாரித்தபோது, போலீஸ் கமி‌ஷனிடம் பேச வேண்டும் என கூறினார்.

    இது பற்றி கமி‌ஷனர் அலுவலகத்தின் மேல்மாடியில் இருந்த கமி‌ஷனர் சங்கருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர், உடனே அங்கிருந்து வேகமாக நடந்து கீழ் தளத்தில் உள்ள வரவேற்புக்கு அறைக்கு வந்து கிருஷ்ணனிடம் என்ன வி‌ஷயம்? நான் என்ன உதவி செய்ய வேண்டும்? என கேட்டார்.

    அதற்கு கிருஷ்ணன், கமி‌ஷனரிடம் நா தழுதழுத்த குரலில் கண்களில் கண்ணீர் வடிந்த நிலையில் கூறியதாவது:-

    எனது தந்தை சுந்தர்ராஜன் தாசில்தராக இருந்து நாட்டுக்கு சேவை செய்தார். அதுபோல் நானும் நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் இளம் வயதிலேயே இந்திய ராணுவத்தில் சேர்ந்தேன். பல போர்களில் கலந்து கொண்டு திறமையாக செயல்பட்டேன். தீவிரவாதிகளை ஒடுக்குவதிலும் திறமையாக செயல்பட்டோம். கடும் பனியிலும், குளிரிலும், இருட்டிலும் நாங்கள் விடிய விடிய தூங்காமல் பாதுகாப்பு கேடயமாக இருந்து கஷ்டப்பட்டு தீவிரவாதிகளை ஊடுருவாமல் தடுத்தோம். எனது முழு வாழ்க்கையும் நாட்டுக்காவே அர்ப்பணித்தேன்.

    ஓய்வு பெற்று விட்ட நான், கிருஷ்ணன் நகரில் உள்ள வீட்டில் வசித்து வருகிறேன். இந்த நிலையில் எனக்கு நீரழிவு நோய் ஏற்பட்டுள்ளது. இதனால் மருந்து, மாத்திரைகள் வாங்கி சாப்பிட்டு வருகிறேன். ஆனால், நீரழிவு நோய் குணமாகவில்லை. தற்போது, முதுமை காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

    எனக்கு உணவு சமையல் செய்து கொடுப்பதற்கு கூட உறவினர்கள் மறுக்கிறார்கள். நோயின் தாக்கம் அதிகமாக இருக்கும் சமயங்களில் தனக்கு மருந்து, மாத்திரைகளை எடுத்து கொடுப்பதற்கு கூட உறவினர்கள் யாரும் வருவதில்லை. அவசர நேரத்தில் யாராவது உதவிக்கு வாருங்கள்... வாருங்கள் என்று அழைத்தால் கூட ஒருவரும் வருவதில்லை.

    இதனால் நான், எனது வாழ்க்கையை முடித்து விட முடிவு செய்துள்ளேன். என்னை தயவு செய்து கருணை கொலை செய்து விடுங்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதையடுத்து கமி‌ஷனர் சங்கர், உங்களது உறவினர்களிடம் தகவல் தெரிவிக்கிறோம். அவர்கள் கூறும் தகவலின் அடிப்படையில், உங்களை காப்பகத்தில் ஒப்படைக்க முடிவு செய்கிறோம். நாங்கள் உங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்து தருகிறோம். கவலைப்பட வேண்டாம் என்று கூறி அவரை ஆறுதல்படுத்தினார்.

    ஒரு முன்னாள் ராணுவ வீரர், தன்னை கருணை கொலை செய்யுங்கள் என்று கெஞ்சிய சம்பவம் அங்கிருந்த போலீசார் மத்தியில் நெஞ்சை நெகிழ வைப்பதாக இருந்தது. #tamilnews
    ×