search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "five injured"

    ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்து 5 பேர் படு காயம் அடைந்தனர்.
    ஊட்டி:

    மராட்டிய மாநிலம் கோலாப்பூரில் இருந்து 15 பேர் தங்களது குடும்பத்தினருடன் நீலகிரி மாவட்டம் ஊட்டி காந்தல் பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கடந்த 18-ந் தேதி வந்தனர். 3 நாட்கள் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின்னர் அவர்கள் 15 பேர் மைசூருக்கு இயக்கப்படும் சொகுசு பஸ்சில் நேற்று ஊட்டியில் இருந்து கோலாப்பூர் செல்வதற்காக புறப்பட்டனர். அந்த சொகுசு பஸ் ஊட்டி, தலைகுந்தா, பைக்காரா வழியாக கூடலூர் சென்று மைசூருக்கு செல்கிறது.



    பெங்களூருவை சேர்ந்த டிரைவர் மதுக்குமார் (வயது 45) பஸ்சை ஓட்டினார். ஊட்டி-கூடலூர் சாலையில் கிளன்மார்கன் சந்திப்பு அருகே சொகுசு பஸ் சென்ற போது, ஒரு வளைவில் திடீரென எதிர்பாராதவிதமாக சாலையோரம் நின்றிருந்த மரத்தில் பஸ் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அப்போது பஸ்சில் பயணம் செய்தவர்கள் அச்சத்தில் கூச்சலிட்டனர். அந்த வழியாக வாகனங்களில் சென்றவர்கள் கவிழ்ந்து கிடந்த சொகுசு பஸ்சின் கண்ணாடியை உடைத்து அவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.

    அதனை தொடர்ந்து காயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்தில் சதாசிவ், ஆஷாராணி, கனஉதானி, ராய்ப்பாகி, சிவநாயக் ஆகிய 5 பேர் படுகாயம் அடைந்தனர். மற்ற 10 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். காயம் அடைந்த 5 பேருக்கு ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    இதுகுறித்து பைக்காரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தை வட்டார போக்குவரத்து அதிகாரி லட்சுமிபதி நேரில் பார்வையிட்டு விசாரித்தார். ஊட்டி-கூடலூர் சாலையில் சொகுசு பஸ் கவிழ்ந்ததால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 
    ×