search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Fisheries inspector"

    • லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • கைது செய்யப்பட்ட அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கோபி:

    ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள பி.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திக் (வயது 43). விவசாயி. இவருக்கு சொந்தமான விவசாய நிலம் கோபி அருகே செரையாம்பாளையம் பவானி ஆற்றங்கரை பகுதியில் உள்ளது. இந்த நிலத்தில் ரூ.7 லட்சம் மதிப்பில் மீன் பண்ணை அமைத்துள்ளார்.

    இவருக்கு மீன் பண்ணை அமைப்பதற்கு தமிழக அரசு சார்பில் ரூ.2 லட்சத்து 80 ஆயிரம் மானியம் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி முதல் கட்டமாக கடந்த 2 மாதத்துக்கு முன்பு கார்த்திக்குக்கு ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் மானிய தொகை அவரது வங்கி கணக்குக்கு மீன் வளத்துறை சார்பில் செலுத்தப்பட்டது.

    இந்த நிலையில் கோபிசெட்டிபாளையம் மீன் வளத்துறையில் ஆய்வாளராக பணியாற்றி வரும் பவானிசாகரை சேர்ந்த அருள்ராஜ் (47) என்பவர் கார்த்திக்கை தொடர்பு கொண்டு உங்களுக்கு 2-ம் கட்ட மானியமாக ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் வந்துள்ளது. அந்த மானியத்தொகை 2 நாட்களுக்குள் உங்களுக்கு வழங்கப்படும்.

    எனவே மானியத் தொகை வழங்க எனக்கு ரூ.31 ஆயிரம் லஞ்சமாக வழங்க வேண்டும் என கார்த்திக்கிடம் அருள்ராஜ் கேட்டதாக கூறப்படுகிறது.

    ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத கார்த்திக் இது குறித்து ஈரோடு மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை லஞ்ச ஒழிப்பு போலீசார் கார்த்திக்கிடம் வழங்கினர். இதையடுத்து மீன்வளத்துறை ஆய்வாளர் அருள்ராஜை கார்த்திக் தொடர்பு கொண்டார்.

    அப்போது அவர் லஞ்ச பணத்துடன் ஓடத்துறை குளம் பகுதிக்கு கார்த்திகை வருமாறு கூறினார்.

    இதை தொடர்ந்து கார்த்திக்கும் பணத்துடன் ஓடத்துறை பகுதிக்கு சென்றார். அந்த பகுதியில் ஏற்கனவே லஞ்ச ஒழிப்பு போலீஸ் துணை சூப்பிரண்டு ராஜேஸ் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்-இன்ஸ்ெபக்டர் முருகன் மற்றும் போலீசார் மறைந்து இருந்தனர்.

    அப்போது கார்த்திக் தான் கொண்டு வந்த பணத்தை அருள்ராஜிடம் கொடுத்தார். அப்போது அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் அருள்ராஜை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதை தொடர்ந்து போலீசார் கைது செய்யப்பட்ட அருள்ராஜை கோபியில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து கைது செய்யப்பட்ட அருள்ராஜை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×