search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake court order"

    • 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார்.
    • நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு.

    பல்லடம் :

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் மாணிக்காபுரம் ரோடு பகுதியை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது40). இவர் அதே பகுதியில் விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவனம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஜவுளிநிறுவனத்திற்கு தேவையான நூலை ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டம் சிலுக்குரிப் பேட்டையில் செயல்பட்டு வரும் இடுப்பிலபாடு காட்டன் மில்லில் இருந்து கடந்த 2019 ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு வரை ரூ.70 லட்சம் மதிப்பில் நூல் வாங்கி உள்ளார். இதில் ரூ.44 லட்சம் வரை பணம் செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் நூல் தரத்தில் வேறுபாடு மற்றும் குறைபாடு ஏற்பட்டதால் இது குறித்து நூல் மில்லுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அவர்கள் முறையாக பதில் தராததால் மீதி தொகை ரூ.26 லட்சத்தை தராமல் நிறுத்தி வைத்து கொண்டதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் நேற்று முன்தினம் நூல் வியாபார இடைத்தரகர்கள் அர்பித் ஜெய் மற்றும் சின்னசாமி ஆகியோருடன் ஆந்திர மாநிலம் குண்டூரை சேர்ந்த ரவிக்குமார், வெங்கடகிருஷ்ணா, வெங்கடேஷ்வரலூ மற்றும் ஆந்திரா மாநில போலீஸ் கோபி உள்ளிட்ட 6 பேர் பல்லடம் போலீஸ் நிலையத்திற்கு வந்து ஆந்திர மாநிலம் குண்டூரில் இருந்து வருவதாகவும், இடுப்பிலபாடு காட்டன் மில்லில் நூல் கொள்முதல் செய்ததில் ரூ.26 லட்சம் பல்லடத்தை சேர்ந்த விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுவன உரிமையாளர் தமிழ்செல்வன் தராததால் சிலுகுரிப்பேட் முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும், கோர்ட் உத்தரவுப்படி பிடிவாரண்ட் பெற்று உரிமையாளர் தமிழ்செல்வனை போலீஸ் உதவியுடன் அழைத்து சென்று கோர்ட்டில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் தெரிவித்தனர்.

    இதனை அடுத்து தமிழ்செல்வனுக்கு பல்லடம் போலீசார் தகவல் அளித்தனர். தகவலை அடுத்து ஆஜரான தமிழ்செல்வன் கோர்ட் உத்தரவு குறித்து சந்தேகம் அடைந்து தனது வழக்கறிஞருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனிடையே கோர்ட்டு ஆர்டர் போலியாக தயாரிக்கப்பட்டதை கண்டறிந்த வழக்கறிஞர் இது குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். தகவலை அடுத்து உஷாரான போலீசார் புகார் கொடுக்க வந்த 3பேரை சுற்றி வளைத்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்றனர். இதற்குள் ஆந்திர போலீஸ் கோபி அங்கிருந்து தலைமறைவானார்.

    பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் போலீசார் பிடிபட்ட 3 பேரிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டதில் போலியாக கோர்ட்டு ஆவணங்கள் தயாரித்து இது போன்று வராக்கடன்களை வசூலிக்க தொழில் அதிபர்களை அழைத்துச்சென்று மிரட்டி பணத்தை வசூலிப்பதாகவும் தெரிவித்தனர்.மேலும் தமிழகம் மட்டுமின்றி மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களிலும் இது போன்று வசூலிக்க போலி ஆவணங்கள் தயாரித்துள்ளதும், பல்லடத்தில் மட்டும் 5 தனியார் நிறுவனங்களில் இது போன்று வராக்கடனை வசூலிக்க திட்டமிட்டிருந்ததும் தெரியவந்தது. இதனை அடுத்து போலி கோர்ட்டு ஆவணங்கள் தயார் செய்து மோசடியில் ஈடுபட்ட குண்டூரை சேர்ந்த முடலபடி ரவிக்குமார், குண்சாலா வெங்கடகிருஷ்ணா, டாகிபார்த்தி வெங்கடேஷ்வரலு ஆகியோரை கைது செய்து பல்லடம் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள நூல்மில் உரிமையாளர் பிரம்மநாயுடு, மேலாளர் சத்தியநாராயணராவ், ஆந்திர போலீஸ் கோபி ஆகியோரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

    ×