என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "erumbeeswarar temple thiruverumbur"

    திருவெறும்பூரில் உள்ள எறும்பீஸ்வரர் கோவில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று (வியாழக்கிழமை) காலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருவெறும்பூரில் பிரசித்தி பெற்ற நறுங்குழல் நாயகி உடனுறை எறும்பீஸ்வரர் கோவில் உள்ளது. மலைமேல் அமைந்துள்ள இந்த கோவில் 63 நாயன்மார்களில் ஒருவரும், சமயக்குரவர்கள் நால்வரில் ஒருவருமான திருநாவுக்கரசரால் பாடல் பெற்ற தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் வைகாசி விசாக தேர்த்திருவிழா இன்று காலை 8 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி நேற்று இரவு அனுக்ஞை, விக்னேஷ்வரர் பூஜை, வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரஹனம் ஆகியவை நடைபெற்றது. இன்று மாலை பஞ்சமூர்த்திகள் கேடயத்தில் வீதிஉலாவும், நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சேஷ வாகனம், அன்னவாகனத்திலும், நாளைமறுநாள்(சனிக்கிழமை) சூரியபிரபை, சந்திரபிரபை வாகனத்திலும் சுவாமி வீதிஉலா நடைபெறுகிறது.

    12-ந்தேதி மாலை கைலாச வாகனம், அன்னவாகனத்திலும், 13-ந்தேதி இடப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் புறப்பாடும் நடைபெறுகிறது. வருகிற 14-ந்தேதி காலை 10.30 மணிக்கு திருக்கல்யாணமும், மாலையில் யானைவாகனம், பல்லக்கில் வீதிஉலாவும் நடைபெறும். வைகாசி விசாக திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 17-ந் தேதி காலை 8 மணிக்கு நடைபெறுகிறது. வருகிற 20-ந் தேதி இரவு தெப்ப உற்சவமும், 21-ந்தேதி மஞ்சள் நீராட்டும் நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் கோ.ஜெயப்பிரியா, செயல் அலுவலர் ஹேமாவதி மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    ×