என் மலர்
நீங்கள் தேடியது "Elagiri Hill"
- சோதனைச்சாவடிகளில் தீவிரமாக கண்காணிக்க அதிகாரி உத்தரவு
- பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க இடம் தேர்வு
ஜோலார்பேட்டை:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை தமிழகத்தின் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. மேலும் 14 கிராமங்களை உள்ளடக்கி ஏலகிரி மலை தனி ஊராட்சியாக செயல்பட்டு வருகிறது.
அதிகாரி ஆய்வு
இங்கு சுமார் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மலைவாழ் மக்கள் வசித்து வருகின்றனர். இந்நிலையில் சுற்றுலாத்தலமான ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்து பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் கணக்கெடுப்பு, அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரி வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் சென்னையில் இருந்து ஊரக வளர்ச்சித் துறையின் கூடுதல் இயக்குனர் சாமுவேல் இன்பதுரை, ஊரக வளர்ச்சித் துறையின் உதவி செயற்பொறியாளர் கணேஷ் சங்கர் உள்ளிட்ட அதிகாரிகள் சென்னையிலிருந்து நேற்று ஏலகிரி மலைக்கு ஊரக வளர்ச்சித் துறையின் திட்டப் பணிகள் குறித்து கள ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ஏலகிரி மலையில் உள்ள பல்வேறு கிராம பகுதிக்கு சென்று அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கணக்கெடுப்புகள் அனைத்து அண்ணா மறுமலர்ச்சி திட்ட சாலை பணிகள், பிரதம மந்திரியின் வீடு வழங்கும் திட்டம், ஏலகிரி மலை ஊராட்சியில் அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் கழிவுகளை தூளாக்கும் எந்திரத்தின் அறை உள்ளிட்டவைகளை ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது பிளாஸ்டிக் குப்பைகளை தூளாக்கும் இயந்திரத்தை பார்வையிட்டு குப்பை கழிவுகளை அகற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து அறிவுறுத்தி ஏலகிரி மலையில் சுற்றுலா பயணிகள் வருகை புரியும் போது ஊராட்சி சார்பில் செக் போஸ்ட் அமைத்து பயணிகள் யாருவது பிளாஸ்டிக் பொருட்கள் கொண்டு வருகிறார்களா என சோதனை செய்து அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார.
மேலும் இதனைத் தொடர்ந்து நீலாவூர் பகுதியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு புதிய கட்டிடம் அமைக்க இடம் தேர்வு செய்தனர்.
மேலும் எம் எல் ஏ தொகுதி மேம்பாட்டின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் அங்கன்வாடி கட்டிடப் பணியை ஆய்வு செய்தனர்.
பின்னர் ஏலகிரி மலையில் ஊரக வளர்ச்சித் துறை சார்ந்து நடைபெற்று வரும் பல்வேறு பணிகள் குறித்தும், தற்போது மேற்கொள்ளப்பட்ட உள்ள பணிகள் குறித்தும் ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் தினகரன், உதவி பொறியாளர்கள் சேகர், பழனிச்சாமி மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜேந்திரன் ஆகியோரிடம் கேட்டறிந்தனர்.
மேலும் இந்த கள ஆய்வின்போது ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரிவேலன், ஒன்றிய கவுன்சிலர் லட்சுமி செந்தில் குமார், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் அ.திருமால் உள்ளிட்ட துறை அலுவலர்கள் உள்ளாட்சி பிரதிநிதிகள் என பலர் கலந்து கொண்டனர்.
- மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
- நுழைவு கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது
திருப்பத்தூர்:
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. மலைக்கு செல்லும் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.
இந்தநிலையில் ஆயுதபூஜை மற்றும் காலாண்டு தேர்வு விடுப்பு என தொடர்ந்து விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நேற்று ஏலகிரி மலைக்கு வந்தனர்.
சுற்றுலா பயணிகள் அங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர்.
இங்குள்ள படகு துறையில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் படகில் சவாரி செய்தும், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது.
சிறுவர் பூங்கா அருகே உள்ள வைல்டு தீம் பார்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செயற்கை அருவியில் குளித்தும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். இதனால் ஏலகிரி மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக காட்சியளித்தனர்.
ஏலகிரி மலையில் படகுத்துறை வளாகத்திற்கு செல்ல ஒருவருக்கு ரூ.15 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்காவிற்கு செல்லவும் ரூ.15 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செய்யப்படவில்லை. பண வசூலில் காட்டும் அக்கறை சுற்றுலா பயணிகளுக்கு செய்து தரும் அடிப்படை வசதிகளில் எந்தவித ஈடுபாடு காட்டாமல் விடப்பட்டுள்ளது.
குறிப்பாக படகுத்துறை வளாகம் மற்றும் இயற்கை பூங்கா வளாகத்தில் உள்ள கழிவறைகள் பராமரிப்பு இல்லவே இல்லை.அங்கு வந்திருந்த பெண்கள் கழிவறைக்கு செல்லும்போது சொல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதாக குற்றம் சாட்டினர்.
வசதி படைத்தவர்கள் லாட்ஜ் மற்றும் விடுதிகளில் உள்ள கழிவறையை பயன்படுத்துகின்றனர். ஏழைப் பெண்களுக்கு அது போன்று வசதிகள் இருப்பது தெரியாததால் பூங்காவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தினர். நுழைவு கட்டண வசூலில் ஒரு சதவீதத்தை பயன்படுத்தினால் கூட கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்.
இதே போல ஏலகிரி மலை பூங்காவில் குடிநீர் வசதி மிகவும் குறைவாக உள்ளது. பொதுமக்கள் கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது.
மலையில் சுத்தமான தண்ணீர் இருந்தும் குடிதண்ணீர் வசதி செய்யப்படவில்லை.
பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பண வசூல் படுஜோராக நடக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் எந்தக் கவனமும் செலுத்தப்படவில்ல. இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பெண்கள் படாதபாடு படுகின்றனர்.
மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏலகிரி மலையில் சோதனை நடத்தி இது போன்ற அவல நிலையை போக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.