search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஏலகிரி மலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி
    X

    ஏலகிரி மலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்த காட்சி.

    ஏலகிரி மலையில் அடிப்படை வசதிகள் இல்லாமல் சுற்றுலா பயணிகள் அவதி

    • மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க சுற்றுலா பயணிகள் வலியுறுத்தல்
    • நுழைவு கட்டணமாக ரூ.15 வசூலிக்கப்படுகிறது

    திருப்பத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படுகிறது. மலைக்கு செல்லும் பாதை 14 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டுள்ளது. எந்த காலத்திலும் ஒரே மாதிரியான சீதோஷ்ண நிலை நிலவுவதால் பல்வேறு மாநிலங்கள், பல்வேறு மாவட்டங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் வந்து செல்கின்றனர்.

    இந்தநிலையில் ஆயுதபூஜை மற்றும் காலாண்டு தேர்வு விடுப்பு என தொடர்ந்து விடுமுறை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் மோட்டார் சைக்கிள், கார், மினி வேன் உள்ளிட்ட வாகனங்கள் மூலம் நேற்று ஏலகிரி மலைக்கு வந்தனர்.

    சுற்றுலா பயணிகள் அங்குள்ள பல்வேறு இடங்களை கண்டு ரசித்தனர்.

    இங்குள்ள படகு துறையில் குடும்பத்தினருடனும், நண்பர்களுடனும் படகில் சவாரி செய்தும், செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சிறுவர் பூங்காவில் கூட்டம் அதிகமாக இருந்தது.

    சிறுவர் பூங்கா அருகே உள்ள வைல்டு தீம் பார்கில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை செயற்கை அருவியில் குளித்தும், நீச்சல் அடித்தும் மகிழ்ந்தனர். இதனால் ஏலகிரி மலை பகுதியில் எங்கு பார்த்தாலும் சுற்றுலா பயணிகளாக காட்சியளித்தனர்.

    ஏலகிரி மலையில் படகுத்துறை வளாகத்திற்கு செல்ல ஒருவருக்கு ரூ‌.15 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதே போல ஏலகிரி மலையில் உள்ள இயற்கை பூங்காவிற்கு செல்லவும் ரூ.15 நுழைவு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த இரண்டு இடங்களிலும் சுற்றுலா பயணிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகள் எதுவுமே செய்யப்படவில்லை. பண வசூலில் காட்டும் அக்கறை சுற்றுலா பயணிகளுக்கு செய்து தரும் அடிப்படை வசதிகளில் எந்தவித ஈடுபாடு காட்டாமல் விடப்பட்டுள்ளது.

    குறிப்பாக படகுத்துறை வளாகம் மற்றும் இயற்கை பூங்கா வளாகத்தில் உள்ள கழிவறைகள் பராமரிப்பு இல்லவே இல்லை.அங்கு வந்திருந்த பெண்கள் கழிவறைக்கு செல்லும்போது சொல்ல முடியாத அளவுக்கு துர்நாற்றம் வீசியதாக குற்றம் சாட்டினர்.

    வசதி படைத்தவர்கள் லாட்ஜ் மற்றும் விடுதிகளில் உள்ள கழிவறையை பயன்படுத்துகின்றனர். ஏழைப் பெண்களுக்கு அது போன்று வசதிகள் இருப்பது தெரியாததால் பூங்காவில் உள்ள கழிவறைகளை பயன்படுத்தினர். நுழைவு கட்டண வசூலில் ஒரு சதவீதத்தை பயன்படுத்தினால் கூட கழிவறைகளை சுத்தமாக வைத்திருக்க முடியும்.

    இதே போல ஏலகிரி மலை பூங்காவில் குடிநீர் வசதி மிகவும் குறைவாக உள்ளது. பொதுமக்கள் கடைகளில் தண்ணீர் வாங்கி குடிக்கும் அவல நிலை உள்ளது.

    மலையில் சுத்தமான தண்ணீர் இருந்தும் குடிதண்ணீர் வசதி செய்யப்படவில்லை.

    பூங்காவிற்கு வரும் பொது மக்களிடம் நுழைவு கட்டணம் என்ற பெயரில் பண வசூல் படுஜோராக நடக்கிறது. ஆனால் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் எந்தக் கவனமும் செலுத்தப்படவில்ல. இதனால் ஏலகிரி மலைக்கு வரும் சுற்றுலா பெண்கள் படாதபாடு படுகின்றனர்.

    மாவட்ட அதிகாரிகள் அடிக்கடி ஏலகிரி மலையில் சோதனை நடத்தி இது போன்ற அவல நிலையை போக்க சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர்.

    Next Story
    ×