search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Education to Heaven"

    • நம் அறிவை வளர்ப்பதற்கு கல்வி அவசியம்.
    • ஒருவன் கல்வி கற்றால் மட்டும் போதாது நெறிமுறைகளை பின்பற்றி வாழ வேண்டும்.

    மனிதர்கள் உயிர் வாழ்வதற்கு நீர், உணவு எவ்வளவு அவசியமோ அதே போன்று நம் அறிவை வளர்ப்பதற்கு, எது சரி, எது தவறு என்பதை புரிந்து நடந்து கொள்வதற்கு கல்வி அவசியம். ஒருவன் கல்வி கற்றால் மட்டும் போதாது, அக்கல்வி சொல்லும் நெறிமுறைகளை பின்பற்றி வாழவும் வேண்டும்.

    கல்வியை தேடும் வழியில் ஒருவன் நடந்தால் அவனுக்கு அல்லாஹ் சுவர்க்கத்திற்கு செல்லும் வழியாக அதை ஆக்குகின்றான். மலக்குகள், கல்வியை தேடுபவனை திருப்தியுற்று தங்களின் இறக்கைகளை தாழ்த்துகின்றனர், என்பது நபி மொழியாகும். கல்வியின் சிறப்பை விளக்கும் நபி மொழிகளைக் காண்போம்...

    'ஒருவர் கல்வியை எடுத்துக்கொண்டால் அவர் மாபெரும் பாக்கியத்தை எடுத்துக்கொண்டவராவார்' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஹதீஸ் சுருக்கம். அறிவிப்பவர்: அபுதர் (ரலி), நூல்கள்: அபுதாவூத், திர்மதி, இப்னுமாஜா)

    'அல்லாஹ்வின் திருப்தியை பெற்றுத்தரும் கல்வியை இவ்வுலகின் பயன் ஒன்றை நாடி, அதை அடைவதற்காக கல்வி கற்றால், இவன் மறுமையில் சொர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: அபூதாவூத்)

    நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களில் ஒரு மனிதர் இருந்தார். அவர் 99 மனிதர்களைக் கொன்றுவிட்டிருந்தார். பிறகு அவர் அக்கால மக்களில் நன்கறிந்த அறிஞர் யார் என விசாரித்தார். அவருக்கு ஒரு வணக்கசாலி காட்டப்பட்டார். அவரிடம் சென்று, "நான் 99 மனிதர்களைக் கொன்றுவிட்டேன். எனக்குப் பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டார்.

    அதற்கு அவர், "கிடைக்காது" என்று கூறவே, அவரையும் அந்த மனிதர் கொன்று, எண்ணிக்கையை நூறாக முழுமையாக்கி விட்டார். பிறகு மீண்டும் அக்கால மக்களில் மார்க்கத்தை நன்கறிந்த அறிஞரைப் பற்றி அவர் விசாரித்தார்.

    அப்போது மார்க்க அறிஞர் ஒருவர் அவருக்குக் காட்டப்பட்டார். (அவரிடம் சென்று) அந்த மனிதர், "நான் நூறு கொலைகள் செய்து விட்டேன். எனக்கு பாவமன்னிப்புக் கிடைக்குமா?" என்று கேட்டார். அதற்கு அந்த அறிஞர், "ஆம் (கிடைக்கும்), இறைவனுக்கும் பாவமன்னிப்புக் கோரிக்கைக்கும் இடையே யார் குறுக்கே வந்து நிற்க முடியும்?.

    நீ (நல்லோர் வாழும்) இன்ன ஊருக்குப் போ. அங்கு மக்கள் சிலர் இருப்பார்கள். அவர்கள் இறைவனை வழிபட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களுடன் சேர்ந்து நீயும் இறைவனை வழிபடு. நீ உனது ஊருக்குத் திரும்பிச்செல்லாதே! ஏனெனில், அது தீய ஊராகும்"என்று சொன்னார்.

    அவ்வாறே, அந்த மனிதர் (நல்லோர் வாழும்) அந்த ஊரை நோக்கிச் சென்று கொண்டிருந்த போது, பாதி வழியில் இறந்து விட்டார். அப்போது இறையருளைக் கொண்டு வரும் வானவர்களும், இறை தண்டனைகளை நிறைவேற்றும் வானவர்களும் அவர் விஷயத்தில் (அவரை யார் அழைத்துச் செல்வது) என்று சர்ச்சை செய்துகொண்டனர்.

    அப்போது அருளின் வானவர்கள், "இவர் பாவமன்னிப்புக் கோரி பாவத்திலிருந்து மீண்டு தமது உள்ளத்தால் இறைவனை நோக்கி வந்துகொண்டிருந்தார்" என்று கூறினர். தண்டனையின் வானவர்கள், "இவர் சிறிதும் நன்மைகளைச் செய்யாதவர்" என்று கூறினர்.

    அப்போது மற்றொரு வானவர் மனிதத் தோற்றத்தில் அங்கு வந்தார். அவரை அவ்விரு வானவர்களும் நடுவராக வைத்துக்கொண்டனர். அப்போது அந்த வானவர், "இவ்விரு ஊர்களுக்கும் இடையிலுள்ள தூரத்தைக் கணக்கிடுங்கள். அவற்றில் எந்த ஊருக்கு மிக அருகில் அவரது உடல் இருக்கிறதோ அந்த ஊருக்குரியவராகவே அவர் இருப்பார்" என்று சொன்னார்.

    அவ்வாறே கணக்கெடுத்த போது, (அவர் வசித்து வந்த ஊரைவிட) அவர் நாடி வந்த ஊரே அவருக்கு மிகவும் சமீபமாக இருப்பதைக்கண்டனர். ஆகவே, அவரை அருளின் வானவர்கள் கைப்பற்றிக் கொண்டனர். (அறிவிப்பாளர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: ஸஹீஹ் முஸ்லிம்)

    "நபி (ஸல்) அவர்கள் தமது மஸ்ஜித் நபவியில் இரண்டு சபையினரை கடந்து சென்றார்கள். அப்போது, 'அவர்கள் இரு சாராருமே நன்மையான காரியத்தில் தான் உள்ளனர் (என்றார்கள்), எனினும் அவ்விருசாராரில் ஒரு சாரார் மிகவும் சிறப்பு வாய்ந்தவர், என்றார்கள்.

    இதோ ஒரு சாரார் இறைவனிடம் பிரார்த்தனை செய்கின்றனர். மேலும் அவனிடம் அருளை எதிர்பார்க்கின்றனர். இறைவன் நாடினால் அவன் அவர்களுக்கு கொடுப்பான்; அல்லது கொடுக்காமலும் இருப்பான். மற்றொரு சாராரோ அவர்கள் கல்வி ஞானத்தை தானும் கற்று, அதை அறியாத மக்களுக்கு கற்றுக் கொடுக்கிறார்கள். எனவே இவர்கள் தாம் மிகச் சிறந்தவர்கள். நானும் கல்வி கற்றுக்கொடுக்கும் ஆசிரியராகத்தான் இறைவனால் அனுப்பி வைக்கப்பட்டுள்ளேன்' என்று கூறிவிட்டு, அந்த சபையினரிலேயே அமர்ந்து விட்டார்கள்". (அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: தாரமீ)

    இந்த நபி மொழிகளின் மூலம் கல்வியின் முக்கியத்துவத்தை நாம் அறிந்து கொள்ளலாம். இந்த மார்க்கக்கல்வி மனிதனுக்கு அடிப்படையான ஒன்றாக இருக்கிறது. அவற்றை நாம் பயன்படுத்தி கல்வி கற்று இம்மையிலும், மறுமையிலும் நன்மைகள் பல பெறுவோம். ஆமின்.

    ×