search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "edappadi student suicide attempt"

    எடப்பாடி அருகே கலெக்டரிடம் ஈவ் டீசிங் புகார் கொடுத்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். கல் உடைக்கும் தொழிலாளி.

    இவரது மகள் கோமதி (வயது 16). கொங்கணாபுரம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கொங்கணாபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ரோகிணியிடம் கோமதி ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், தான் பள்ளிக்கு செல்ல முடியாத படி அதே பகுதியை சேர்ந்த சிலர் தன்னை கேலி, கிண்டல் (ஈவ்டீசிங்) செய்வதுடன் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறி இருந்தார்.

    மேலும் அவர்கள் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும், இதனால் தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே இருந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

    தனது நிலைகுறித்து கலெக்டரிடம் கூறி அழுத மாணவி கோமதிக்கு ஆறுதல் கூறி தேற்றிய கலெக்டர் ரோகிணி, உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை அழைத்து, அம்மாணவியிடம் அத்துமீறும் நபர்கள் மீது விசாரனை செய்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று மாலை கோமதி வசிக்கும் பகுதிக்கு சென்ற போலீசார் விசாரனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் வந்து சென்ற சிறிது நேரத்திற்குள் கோமதி வீட்டிற்கு வந்த கேலி, கிண்டல் செய்த நபர்கள் கோமதியை மிரட்டி சென்றதாகவும், மேலும் தங்கள் மீது கொடுத்த புகாரினை திரும்ப பெற சொல்லி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த கோமதி இன்று அதிகாலை வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டின் அருகே வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்த கோமதியை மீட்ட உறவினர்கள் அவரை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவியை கேலி, கிண்டல் செய்ததுடன் கலெக்டரிடம் புகார் கொடுத்ததால் வீட்டிற்கு சென்று மிரட்டிய வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    ×