search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ealummalaiyan temple"

    • கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.
    • புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    உடுமலை :

    உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட உடுமலை வனச்சரகத்தின் அடர்ந்த வனப்பகுதியில் ஏழுமலையான் கோவில் உள்ளது. தென்திருப்பதி என்று அழைக்கப்படும் இந்த கோவில் மலை அடிவாரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் உயரத்தில் அமைந்து உள்ளது. இந்த கோவிலில் மூலவராக ஏழுமலையான் வெங்கடாசலபதியும், உற்சவராக சீனிவாச பெருமாளும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். அது தவிர கோவில் வளாகத்தில் வேணுகோபாலசாமிக்கு தனி சன்னதியும் அமைந்துள்ளது.

    இங்கு வாரந்தோறும் சனிக்கிழமையன்று ஏழுமலையானுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகிறது.கோவில் அடர்ந்த வனப்பகுதியில் உள்ளதால் புரட்டாசி மாதத்தில் வருகின்ற சனிக்கிழமைகளில் மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இதற்காக வெள்ளிக்கிழமை இரவே பக்தர்கள் மலை அடிவாரப் பகுதிக்கு வந்து விடுவார்கள். பின்னர் கோவிந்தா... கோவிந்தா... கோஷத்துடன் விடிய, விடிய மலையேறிச் சென்று தேங்காய், பழம் கலந்த அவுளை ஏழுமலையானுக்கு படைத்து வழிபாடு செய்வார்கள். இதில் சுற்றுப்புற கிராமங்கள் மட்டுமின்றி கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். இதனால் வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை மாலை வரையிலும் வனப்பகுதியில் பக்தர்கள் கூட்டம் அதிக அளவில் காணப்படும். இதற்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டு வருகிறது. அனைவரும் பாதுகாப்போடு வந்து செல்வதற்கு ஏதுவாக வனத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள்.இது வருடந்தோறும் நடைபெற்று வருகின்ற வழக்கமான நிகழ்வாகும்.

    கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த 2 ஆண்டுகளாக ஏழுமலையான் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படவில்லை. ஆனால் கொரோனா நோய் தொற்று கட்டுக்குள் வந்த நிலையில் கடந்த வருடம் கடைசி புரட்டாசி சனிக்கிழமைக்கு மட்டும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் தேங்காய், பழம், அவல் உள்ளிட்ட பொருட்களுடன் வருகை தந்து ஏழுமலையானை தரிசனம் செய்து மகிழ்ந்தனர். ஆனால் எதிர்பாராத விதமாக பெய்த பலத்த மழையின் காரணமாக ஆறுகளில் நீர்வரத்து ஏற்பட்டதை தொடர்ந்து முழுமையான அளவில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய இயலவில்லை.

    இதனால் இந்த ஆண்டு ஏழுமலையானை புரட்டாசி சனிக்கிழமைகளில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்கள் ஆர்வத்தோடும், உற்சாகத்தோடும் தயாராகி வருகின்றனர். அதைத்தொடர்ந்து உடுமலை - மூணாறு சாலையில் இருந்து ஏழுமலையான் கோவில் வரையிலும் செல்லும் பாதையை சீரமைக்கும் பணி வனத்துறையினரின் மேற்பார்வையில் மும்முரமாக நடைபெற்று வருகிறது. நாளை (சனிக்கிழமை) முதல் புரட்டாசி மாதம் முழுவதும் வருகின்ற சனிக்கிழமைகளில் ஏழுமலையானை சாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இதனால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.

    ×