search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DTCP"

    • தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
    • 2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    சென்னை:

    சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் விஷன் 2030 என்ற தலைப்பில் ரியல் எஸ்டேட் தொடர்பான கண்காட்சி தொடக்க விழா இன்று நடைபெற்றது. வருகிற 19-ந் தேதி வரை கண்காட்சி நடைபெறுகிறது.

    தொடக்க விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:

    அனைத்துத் துறையையும் உள்ளடக்கியிருக்கக்கூடிய திராவிட மாடல் வளர்ச்சியைத் தமிழ்நாடு கண்டு வருகிறது. நம்முடைய இலக்கு பெரிதாக இருப்பதால், நம்முடைய முயற்சிகளும் பெரிதாக அமைந்து உள்ளன.

    அந்த வகையில் அனைத்துத்துறைகளிலும் இதுவரை இல்லாத அளவுக்கு மாபெரும் வளர்ச்சியை தமிழ்நாடு அடைந்து வருவது கண்கூடாகத் தெரிகிறது.

    குடிசைகள் இல்லா நகரங்களை உருவாக்க இந்தியாவிலேயே முதன் முறையாக குடிசைவாழ் மக்களின் வீட்டுவசதிக்காக தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தை 50 ஆண்டுகளுக்கு முன்பே உருவாக்கியவர் கலைஞர் என்பதை இந்த நேரத்தில் நான் நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

    அவர் அமைத்து தந்த பாதையில் தான் இன்று நம் மாநிலம் பெருமிதத்தோடு வளர்ந்து வருகிறது. அந்த நோக்கத்துடன் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறது இந்த அரசு.

    தமிழ்நாட்டில், 1991-இல் 1 கோடியே 90 இலட்சமாக இருந்த நகர மக்கள் தொகை, 2011-ல் 3 மூன்று கோடியே 49 இலட்சமாக அதிகரித்து, 2031-இல் 5 கோடியே 34 இலட்சம் அளவிற்கு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி பார்த்தால், தமிழ்நாட்டில் 832 நகரங்கள் உள்ளன. தமிழ்நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 49 விழுக்காடு மக்கள் நகர்ப் புறங்களில் வாழ்ந்து வருகின்றனர். இந்தச் சூழ்நிலை யில், நகரமயமாதலில் தமிழ்நாடு நாட்டிலேயே முன்னணி மாநிலமாகத் திகழ்ந்து வருகிறது.

    வீட்டு வசதித் துறையில், 2030-ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் போதுமான பாதுகாப்பான, வாங்கும் திறனுக்கேற்ற வீடுகளையும், அடிப்படை வசதிகளையும் அளித்தல், குடிசைப் பகுதிகளை மேம்படுத்துதல், நகர மயமாதலை மேம்படுத்துதல், நகரங்கள், புறநகர்ப் பகுதிகள் மற்றும் கிராமப் பகுதிகளுக்கு இடையே தொடர்புகளை ஏற்படுத்துதல் ஆகிய குறிக்கோள்களை வைத்து உள்ளோம்.

    தொழில்துறையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப, அரசாங்கம் அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது. விண்ணப்பங்களுக்கு விரைவான அனுமதிகளை வழங்குவதில் அரசாங்கம் உறுதிபூண்டி ருக்கிறது.

    புதிய துணைக்கோள் நகரங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம். வெளிவட்டச் சாலையின் வளர்ச்சிக்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அரசு உறுதிபூண்டுள்ளது. இதனால் வரும் ஆண்டு களில் ரியல் எஸ்டேட் துறையில் மகத்தான வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறேன்.

    டி.டி.சி.பி. மற்றும் சி.எம்.டி.ஏ. பகுதிகளில் உள்ள உயரமான கட்டடம் மற்றும் உயரம் குறைந்த கட்டடத்திற்கு ஆன்லைன் மூலமாக திட்ட அனுமதி பெற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    டி.டி.சி.பி.யால் உருவாக்கப்பட்டு, நடைமுறையில் உள்ள மனைப்பிரிவு ஒப்புதலுக்கான ஆன்லைன் முறை, விரைவில் சி.எம்.டி.ஏ.விலும் நடைமுறைப் படுத்தப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

    2030-ம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றிடக்கூடிய வகையில், தொலைநோக்குப் பார்வையுடன் தமிழ்நாடு அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

    தமிழ்நாடு அரசின் சிறப்பான நடவடிக்கைகளுக்கு என்றென்றும் உறு துணையாக இருக்கக் கூடிய நீங்கள், தொடர்ந்து உங்கள் ஆதரவினையும், ஒத்துழைப்பினையும் தர வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×