search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disability Day"

    தமிழக அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களை பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டும் என்று மாற்றுத்திறனாளிகளுக்கு முதலமைச்சர் பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார். #TNCM #Edappadipalaniswami
    சென்னை:

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள மாற்று திறனாளிகள் தின வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளையும் நலன்களையும் காக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3-ம் நாள் “அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம்” அனுசரிக்கப்படுகிறது. இந்நாளில் அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் எனது நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

    மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் மற்றவர்களுக்கு இணையாக அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வில் ஏற்றம் பெற்றிட, மாற்றுத்திறனாளிகளுக்கு அரசுப் பணியிடங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கல்வி நிறுவனங்களில் வேலைவாய்ப்பில் 4 சதவிகித இடஒதுக்கீடு வழங்கியது. இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட விலையில்லா பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்குதல், பேருந்துப் பயணச் சலுகை, பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு ஒளிரும் மடக்கு குச்சிகள், மன வளர்ச்சி குன்றியவர்கள் மாத ஓய்வூதியம் பெறுவதற்கான பாதிப்பு சதவிகிதம் 45 சதவிகிதமாக குறைப்பு; மனவளர்ச்சி குன்றிய/ தசைச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித் தொகை 1500 ரூபாயாக உயர்த்தியது.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் மாற்றுத் திறனாளிகள் 4 மணி நேரப் பணிக்கு முழு நாள் ஊதியம் வழங்குதல், பசுமை வீடுகள் வழங்கும் திட்டத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவிகித வீடுகள் ஒதுக்கீடு, மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியத் திட்டத்திற்கு நிர்ணயிக்கப்பட்ட குறைந்த பட்ச வயது 18ஆக குறைப்பு.

    பார்வை குறைபாடு உடையவர்கள் பாதுகாப்பாக சாலையினை கடப்பதற்கு ஏதுவாக சென்னையில் 150 இடங்களில் போக்குவரத்து சாலை சந்திப்புகளில் குரல் ஒலிப்பான் சமிக்ஞைகள் நிறுவியது போன்ற பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

    இந்த அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினத்தில், மாற்றுத் திறனாளிகளின் தேவைகள் அனைத்தையும் அறிந்து, அவர்கள் மனநிறைவோடு வாழ்ந்திட தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வரும் ஏற்றமிகு திட்டங்களை மாற்றுத் திறனாளிகள் அனைவரும் சிறந்த முறையில் பயன்படுத்தி வாழ்வில் உயர்ந்திட வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #TNCM #Edappadipalaniswami
    ×