search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Crocodile Pongal"

    • திருப்பூர் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன.
    • வெறும் அறிக்கை அளவிலேயே சுற்றுலாவுக்கான திட்டங்கள் உள்ளன.

    உடுமலை :

    மேற்குத்தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் அமைந்துள்ள திருமூர்த்திமலை மற்றும் அமராவதி அணை உடுமலை பகுதியில் உள்ள முக்கிய சுற்றுலா தலங்களாகும்.

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள இந்த இரு முக்கிய சுற்றுலா தலங்களிலும் பல்வேறு மேம்பாட்டுப்பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளன. பல ஆண்டுகளாக வலியுறுத்தியும் வெறும் அறிக்கை அளவிலேயே சுற்றுலாவுக்கான திட்டங்கள் உள்ளன. இருப்பினும் திருமூர்த்திமலை பஞ்சலிங்க அருவியில் ஆண்டு முழுவதும் சீராக விழும் தண்ணீரில் குளிக்கவும், மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அணைகளின் அழகை ரசிக்கவும் முதலை பண்ணையை பார்வையிடவும் மக்கள் ஆண்டு முழுவதும் வந்து செல்கின்றனர். இந்நிலையில் சுற்றுலாவை மேம்படுத்தவும், மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதி, அணைகள் குறித்த விழிப்புணர்வு மக்களுக்கு ஏற்படவும், கோடை விடுமுறையில் மாவட்ட நிர்வாகம் சார்பில் கோடை விழா நடத்த வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.அரசு நடத்தும் கோடை விழா வாயிலாக மாநிலத்தின் பல்வேறு பகுதி சுற்றுலா பயணிகளை ஈர்ப்பதுடன் அரசுக்கு கணிசமான வருவாய் கிடைக்கும். வருவாயில் இரு பகுதிகளிலும் மேம்பாட்டு பணிகளையும் மேற்கொள்ளலாம்.குறிப்பாக சுற்றுலா பயணிகளுக்கு தங்கும் வசதி உட்பட கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தலாம்.

    இதனால் கேரள மாநிலம் மறையூர், மூணாறு பகுதிகளுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை திருமூர்த்திமலைக்கு எளிதாக ஈர்க்க முடியும்.திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்டதும் டாலர் சிட்டியில் உழைக்கும் மக்களுக்காக கிரீன் சிட்டி சுற்றுலா தலங்கள் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

    இந்நிலையில் சில ஆண்டுகள் திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில் திருமூர்த்திமலையில் ஆடிப்பெருந்திருவிழா நடத்தப்பட்டது. விழாவுக்கு அதிக வரவேற்பு கிடைத்தது. அவ்விழாவும் தற்போது நடத்தப்படுவதில்லை. இந்தாண்டு பள்ளி விடுமுறை நாட்களை மையமாக வைத்து கோடை விழா நடத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் எதிர்பார்த்துள்ளனர்.இவ்விழாவை நடத்தியாவது திருப்பூர் மாவட்டத்தில் சுற்றுலா துறை செயல்பட்டு வருகிறது என மக்களுக்கு தெரியப்படுத்தலாம்.

    அமராவதி அணை அருகே வனத்துறை சார்பில் முதலை பண்ணை பராமரிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் சுற்றுலா பயணிகள் வசதிக்காக பூங்காவில் பல்வேறு மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.இந்த முதலை பண்ணையில் முதலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த முதலை பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வரவழைக்கப்பட்டு, முதலைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.இந்த விழாவுக்கு வரவேற்பும் கிடைத்தது. எனவே இந்த விழாவை மீண்டும் நடத்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

    ×