search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Criminalisation of Politics"

    குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிப்பது தொடர்பான வழக்கு விசாரணையில், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகளுக்கும் அட்டார்னி ஜெனரல் வேணுகோபாலுக்கும் காரசார வாதம் நடந்தது. #SupremeCourt
    புதுடெல்லி:

    குற்றப் பின்னணி கொண்டவர்கள் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க வேண்டும் என மூத்த வழக்கறிஞர் அஸ்வினி உபாத்தியா தொடர்ந்த பொதுநல வழக்கை சுப்ரீம் கோர்ட் விசாரித்து வருகிறது. இன்று இந்த வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் நாரிமன், கான்வில்கர், சந்திரசூட், இந்து மல்ஹோத்ரா அமர்வு முன் இரண்டாவது நாளாக விசாரணைக்கு வந்தது. 

    வழக்கு விசாரணையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தல் சின்னம் அளிக்க மறுக்கும் உரிமையை தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் வழங்கலாமா என்ற நீதிபதிகளின் கேள்விக்கு “அது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் அதிகாரம். நீதிமன்றம் அதில் தலையிடக் கூடாது” என்று மத்திய அரசு தரப்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் “இது கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும். இதற்கு அரசியலமைப்பு சட்டத்தில் இடம் இல்லை” என்று மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் வேணுகோபால் தெரிவித்தார். “அரசியலமைப்புச் சட்டம் அனுமதிக்காத இடத்துக்குள் நுழைய சுப்ரீம் கோர்ட் முயற்சிக்கிறது” என்று அவர் கூறினார்.

    குற்றப் பின்னணி கொண்டவர்களை தடை செய்து சட்டம் கொண்டு வந்தால், பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நிலை உருவாகும் என்றும் வேணுகோபால் எச்சரித்தார்.

    நீதிபதி இந்து மல்ஹோத்ராவின் கருத்தும் மத்திய அரசின் கருத்தும் ஒன்றாக இருந்தது. ஆனால், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதி நாரிமனும் மத்திய அரசு வாதத்துக்கு மறுப்பு தெரிவித்தனர். 

    “பாராளுமன்றம் ஒப்புதல் அளிக்காத வரையில், குற்றப் பின்னணி கொண்டவர்களுக்கு சின்னத்தை வழங்க தடை விதிக்க தேர்தல் ஆணையத்துக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட முடியும். நாங்கள் பாராளுமன்றத்தின் எல்லைக்குள் நுழையவில்லை” என்று நீதிபதி நாரிமன் கூறினார்.

    ஆனால், பாராளுமன்ற நிலைக்குழு இந்த மசோதாவை விவாதித்து, ஏற்க மறுத்துவிட்டதாக வேணுகோபால் பதிலளித்தார். இந்த வழக்கு ஆகஸ்ட் 28-ம் தேதி விசாரணைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. 
    ×