search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Citizens suddenly"

    • வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் இருந்து ஊத்துக்குளி செல்லும் வழியில் உள்ளது புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து.

    இந்த பஞ்சாயத்துக்கு உட்பட்ட ஆலமரம், வெங்க மேடு, ஓலப்பாளையம் உட்பட சுற்றுவட்டார கிராம பகுதிகளுக்கு கொடு முடியில் உள்ள காவேரி ஆற்றில் இருந்து கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலமாக காங்கேயம் வழியாக கடந்த சில ஆண்டுகளாக காவிரி ஆற்று நீர் சப்ளை செய்யப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் கடந்த 2 மாத காலமாக காவிரி ஆற்றில் அதிக அளவு தண்ணீர் செல்வதால் பம்பிங் நிலையம் தண்ணீரில் மூழ்கி உள்ளதால் ஆற்றில் இருந்து முறையாக தண்ணீர் சப்ளை நடைபெறவில்லை என கூறப்படுகிறது. கடந்த 2 மாதத்திற்கு முன்பு வெங்கமேடு சுற்று வட்டார பகுதியை சேர்ந்த கிராம பொதுமக்கள் முறையாக குடிநீர் விநியோகம் செய்யக்கோரி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அங்கு வந்த அதிகாரிகள் சில நாட்களில் குடிநீர் சப்ளையை சரி செய்து முறையாக கிடைக்கச் செய்வதாக உறுதி கூறினர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு சென்றனர்.

    இந்நிலையில் கடந்த 40 நாட்களாக மீண்டும் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படாமல் பல நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் சப்ளை நடைபெற்றதாக பொது–மக்கள் கூறினர். முறையாக குடிநீர் வழங்க கோரி சம்பந்தப்பட்ட அதிகாரி–களிடம் பொது மக்கள் முறையிட்டனர். இருப்பினும் போதுமான அளவு குடிநீர் சப்ளை செய்யப்படவில்லை.

    இதையடுத்து வெங்கமேடு பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பஸ் நிறுத்தம் பகுதியில் நேற்று மதியம் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    அப்போது அவ்வழியே ஊத்துக்குளி செல்ல வந்த அரசு டவுன் பஸ் மற்றும் வாகனங்கள் அங்கேயே நிறுத்தப்பட்டன. இதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த மாவட்ட கவுன்சிலர் செல்வம், புஞ்சை பாலதொழுவு பஞ்சாயத்து தலைவர் தங்கமணி விஜயகுமார், சென்னிமலை போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது 10 நாட்களில் முறையாக குடிநீர் சப்ளை செய்யப்படும் என்று உறுதி அளித்தனர். மேலும் அதுவரை லாரி தண்ணீர் சப்ளை செய்யப்படும் என்றும் தெரிவித்தனர். இதனையேற்ற பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த மறியலால் அவ்வழியே சுமார் ஒரு மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ×